5th Standard Science Term 3 Unit 2: Animals (Tamil Medium) - Comprehensive Lesson Guide

பருவம் 3 அலகு 2 | 5 ஆம் வகுப்பு அறிவியல் - விலங்குகள் | 5th Science : Term 3 Unit 2 : Animals

5 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 2 : விலங்குகள்

விலங்குகள்

கற்றல் நோக்கங்கள்: இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன:
(i) விலங்குகளின் இனப்பெருக்கம் பற்றி அறிந்துகொள்ளல்.
(ii) முட்டையிட்டு மற்றும் குட்டிபோட்டு இனப்பெருக்கம் செய்யும் விலங்குகளை வேறுபடுத்துதல்.
(iii) அழியும் நிலையிலுள்ள விலங்குகள் மற்றும் அவற்றைப் பாதுகாக்கவேண்டிய அவசியம் குறித்து அறிந்துகொள்ளல்.
(iv) வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் தேசியப் பூங்காக்கள் குறித்து அறிந்து கொள்ளல்.
(v) விலங்குகளைத் துன்புறுத்துவதைத் தடுக்கவேண்டிய தன் அவசியத்தைப் புரிந்துகொள்ளல்.

அலகு 2: விலங்குகள்

Unit 2 Animals Header

கற்றல் நோக்கங்கள்

இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன:

(i) விலங்குகளின் இனப்பெருக்கம் பற்றி அறிந்துகொள்ளல். (ii) முட்டையிட்டு மற்றும் குட்டிபோட்டு இனப்பெருக்கம் செய்யும் விலங்குகளை வேறுபடுத்துதல். (iii) அழியும் நிலையிலுள்ள விலங்குகள் மற்றும் அவற்றைப் பாதுகாக்கவேண்டிய அவசியம் குறித்து அறிந்துகொள்ளல். (iv) வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் தேசியப் பூங்காக்கள் குறித்து அறிந்து கொள்ளல். (v) விலங்குகளைத் துன்புறுத்துவதைத் தடுக்கவேண்டிய தன் அவசியத்தைப் புரிந்துகொள்ளல்.

அறிமுகம்

நமது புவியானது தாவரங்கள் மற்றும் விலங்குகள் உள்ளிட்ட எண்ணிலடங்கா உயிரிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அவற்றுள் விலங்குகளே உயர்நிலை உயிரினங்களாகும். விலங்குகள் இயற்கையால் மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட கொடையாகும். இவை நம் அன்றாட வாழ்வுடன் நெருங்கிய தொடர்புடையவைகளாய் இருந்து நமக்கு அநேக நன்மைகளை வழங்குகின்றன. இந்த நவீன காலத்தில் மனிதன் இதுவரை இல்லாத அளவிற்கு இயற்கையை அழித்துச் சுரண்டுகிறான். இதனால் விலங்குகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு அநேக தாவரங்களும், விலங்குகளும் பூமியிலிருந்து மறைந்துகொண்டு இருக்கின்றன. இதைக் குறித்தும், விலங்குகளின் இனப்பெருக்கம், விலங்குகள் அழிக்கப்படுதல் மற்றும் அவற்றைப் பாதுகாக்கவேண்டிய வழிகளைக் குறித்தும் இப்பாடத்தில் அறிய இருக்கிறோம்.

I. விலங்குகளில் இனப்பெருக்கம்

இனப்பெருக்கம் என்பது ஒரு உயிரியல் செயல்பாடு ஆகும். இதன்மூலம் ஒரு உயிரினம் வேறொரு புது உயிரினத்தைத் தோற்றுவிக்கிறது. இந்த செயல்முறை தாவரங்கள் மற்றும் விலங்குகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களிலும் காணப்படுகிறது. எந்தவொரு உயிரினமும் சந்ததி சந்ததியாகத் தொடர்ந்து வாழ்வதற்கு இனப்பெருக்கம் அவசியமாகும். விலங்குகளில் இரண்டு வகையான இனப்பெருக்கம் காணப்படுகிறது. அவை: பாலினப்பெருக்கம் மற்றும் பாலிலா இனப்பெருக்கம்.

1. பாலினப்பெருக்கம்

பாலினப்பெருக்கம் என்பது மனிதர்கள், விலங்குகள் மற்றும் பெரும்பாலான தாவரங்களில் இயற்கையாகவே நடைபெறும் இனப்பெருக்க முறை ஆகும். பாலிலா இனப்பெருக்கத்துடன் ஒப்பிடும்போது. இது சிக்கலானதாகவும், நீண்டதாகவும் உள்ளது. வேறுபட்ட மற்றும் தனித்தன்மை வாய்ந்த சந்ததிகள் தேன் மூலம் தோற்றுவிக்கப்படுகின்றன. பாலினப்பெருக்கம் கீழ்க்காணும் படிநிலைகளைக் கொண்டது.

அ. கருவுறுகுலுக்கு முன் ஆ. கருவுறுதல் இ. கருவுற்ற பின்

அ. கருவுறுதலுக்கு முன்

இது பாலினப்பெருக்கத்தின் முதல் நிலையாகும். இந்த நிலையில், கேமீட்டுக்கள் (பாலின உயிரணுக்கள்) உருவாதலும், அவை இடம்பெயர்தலும் நடைபெறுகிறது. விலங்குகளில் ஆணும் பெண்ணும் வெவ்வேறு இனப்பெருக்க உறுப்புகளைக் கொண்டிருக்கின்றன. ஆண் இனப்பெருக்க உறுப்பு விந்தகம் என்றும், பெண் இனப்பெருக்க உறுப்பு அண்டகம் என்றும் அழைக்கப்படுகிறது. விந்தகம் ஆண் பாலின் உயிரணுக்களாகிய விந்துக்களையும், அண்டகம் பெண் பாலின் உயிரணுக்களாகிய அண்டம் அல்லது முட்டையையும் உருவாக்குகின்றன. இந்த நிலையில் ஆண் உயிரணுக்கள், பெண் உயிரணுக்களைச் சென்றடைகின்றன.

ஆ. கருவுறுதல்

ஆண் உயிரணு பெண் உயிரணுவைச் சென்றடையும்போது அவை ஒன்றோடொன்று இணைகின்றன. இந்த உயிரணுக்களின் இணைவு கருவுறுதல் எனப்படும். கருவுறுகலின்போது விந்தணுவின் உட்கருவும், அண்டத்தின் உட்கருவும் இணைந்து ஒரே உட்கருவை உருவாக்குகின்றன. இதன் விளைவாக ஸைகோட் எனப்படும் கருவுற்ற முட்டை உருவாகிறது.

Fertilization process

விலங்குகளில் கருவுறுதல் இரு வகைகளில் நடைபெறுகிறது. அவை: வெளிக் கருவுறுதல் மற்றும் உட்கருவறுதல் வெளிக் கருவுறுதல் ஒரு விலங்கின் உடலிற்கு வெளியே நடைபெறுகிறது. இவ்வகைக் கருவுறுதல் பொதுவாக நீர்ச்சுழலில் நடைபெறுகிறது. அச்சூழலில் விந்தணு மற்றும் முட்டை ஆகிய இரண்டும் தண்ணீருக்குள் வெளியிடப்படுகின்றன. தவளை மற்றும் மீன்களின் கருவுறுதல் இவ்வாறு நடைபெறுகிறது. விலங்குகளின் உடலிற்கு உள்ளே கருவுறுதல் நடைபெறுமானால் அது உட்கருவுறுதல் எனப்படுகிறது. இவ்வகைக் கருவுறுதல் பூனை, நாய், பசு போன்ற விலங்குகளில் நடைபெறுகிறது.

Types of Fertilization

இ. கருவுற்ற பின்

கரு முட்டையானது (ஸைகோட்) மீண்டும் மீண்டும் பிளவுற்று செல்களின் தொகுப்பை உருவாக்குகிறது. இந்த செல்கள் வேறுபட்ட திசுக்களாகவும், உறுப்புகளாகவும் வளர்ச்சியடைந்து ஒரு முழு உடலை உருவாக்குகின்றன. இந்த அமைப்பு கரு என்று அழைக்கப்படுகிறது. கரு, கருப்பையில் தொடர்ந்து வளர ஆரம்பித்து, தலை, முகம், கைகள், கால்கள் போன்ற உடல் உறுப்புகளாக வளர ஆரம்பிக்கிறது. கருவானது உடலிற்கு உள்ளே வளர்கிறதா அல்லது வெளியே வளர்கிறதா என்பதைப் பொருத்து விலங்குகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்பவை மற்றும் குட்டி போட்டு இனப்பெருக்கம் செய்பவை என்று வகைப்படுத்தப்படுகின்றன.

Embryo development

❖ முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் விலங்குகள்

கருவானது விலங்கின் உடலுக்கு வெளியில் வளருமானால் அத்தகைய விலங்குகள் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பவை என்று அழைக்கப்படுகின்றன. இவை, முட்டையிடுவதன் மூலம் தங்களுடைய குஞ்சுகளை உருவாக்குகின்றன. பறவைகளைப் பொருத்தவரை அவற்றின் குஞ்சுகள் முட்டையிலிருந்து உருவாகின்றன. முட்டையின் ஓடானது உள்ளே இருக்கும் குஞ்சுகளை வெளிப்புறச் சூழலிலிருந்து பாதுகாக்கின்றது. மேலும், உள்ளே இருக்கும் கருவானது தனக்குத் தேவையான ஊட்டச்சத்தை முட்டையின் மஞ்சள் கருவிலிருந்து வற்றுக் கொள்கிறது. இவ்வகை உயிரினங்கள் சிலவற்றில் புதிய உயிரினம் வெவ்வேறு வளர்ச்சி நிலைகளைக் கொண்டிருக்கும்.

Oviparous Animals

உதாரணமாக, வண்ணத்துப் பூச்சியில் முட்டை, லார்வா, பியூபா மற்றும் வளர்ந்த பூச்சி என வேறுபட்ட வளர்ச்சி நிலைகள் காணப்படும். இதன் ஒவ்வொரு வளர்ச்சி நிலையும் வேறுபட்டிருக்கும். வண்ணத்துப் பூச்சி முழு வளர்ச்சி அடையும் நிலைக்கு வளர் உருமாற்றம் என்று பெயர். இந்த வாழ்க்கைச் சுழற்சியானது ஒரு மாதம் முதல் ஒரு வருடம் வரை நடைபெறலாம்.

நிலை : 1 முட்டை

இந்த நிலையில் வண்ணத்துப் பூச்சியானது இலைகளின் மீது முட்டை இடுகிறது. இந்த முட்டைகள் மிகவும் சிறியதாகவும், உருண்டை வடிவத்திலும் இருக்கும். முட்டையிடப்பட்டு 5 நாட்களுக்குப் பிறகு சிறிய புழு போன்ற உயிரி அதிலிருந்து பொரித்து வெளிவரும்.

நிலை : 2 - புழுப் பருவம் (லார்வா)

இரண்டாம் நிலை கம்பளிப் பூச்சி ஆகும். இது லார்வா என்றும் அழைக்கப்படும். இந்தப் புழுவானது வெளியில் வந்த உடன் இலைகள் மற்றும் பூக்களை உண்ணத் தொடங்கும். அதிகமாக உண்பதால் வெகு வேகமாக இது வளர ஆரம்பிக்கிறது. வேகமாக வளர்வதன் காரணமாக, இதன் தோல் உரிந்து புதிய தோல் வளர ஆரம்பிக்கிறது. இவ்வாறு பழைய தோலைக் களைவதற்கு தோல் உரித்தல் என்று பெயர்.

நிலை : 3 - கூட்டுப்புழுப் பருவம் (பியூபா)

பியூபா என்பது மூன்றாம் நிலை ஆகும். இது அநேகமாக பழுப்பு அல்லது பச்சை வண்ணத்தில் காணப்படும். இது வண்ணத்துப் பூச்சியின் ஓய்வெடுக்கும் நிலை மற்றும் வளர்மாற்றம் பெறும் நிலையாகும். இந்நிலையில் புழு வண்ணத்துப் பூச்சியாக மாற்றமடைகிறது.

Butterfly Life Cycle
உங்களுக்குத் தெரியுமா?
இரண்டு விதமான வாழ்க்கை முறைகளைக் கொண்ட விலங்குகள் நீர்நில வாழ்விகள் எனப்படுகின்றன. இவை ஆரம்ப நிலையில் நீரில் வாழ்கின்றன. வளர வளர நிலத்தில் வாழ ஆரம்பிக்கின்றன. தவளை போன்ற நீர்நில வாழ்விகள் ஆயிரக்கணக்கான, சில வேளைகளில் லட்சக்கணக்கான மென்மையான சிறிய முட்டைகளை நீரில் இடுகின்றன.
Amphibians Eggs

நிலை : 4 முழு வளர்ச்சி பெற்ற வண்ணத்துப் பூச்சி

இந்த நான்காம் நிலையில் பியூபாவின் கூடு திறந்து முழு வளர்ச்சியடைந்த வண்ணத்துப் பூச்சி வெளிவரும். சில வேளைகளில் இமகோ எனவும் இது அழைக்கப்படும். இவை அழகிய வண்ணங்கள் நிறைந்தவை. முதன் முதலில் வண்ணத்துப் பூச்சி கூட்டைவிட்டு வெளியில் வரும்போது மிகுந்த சோர்வுடன் காணப்படும். எனவே, அது ஓய்வு எடுத்துக்கொள்கிறது பிறகு, அது வளர்ந்து, முட்டையிட்டு மீண்டும் தனது வாழ்க்கைச் சுழற்சியைத் தொடங்குகிறது.

❖ குட்டி போட்டு இனப்பெருக்கம் செய்யும் விலங்குகள்

கருவானது விலங்கின் உடலிற்குள்ளே வளருமானால் அத்தகைய விலங்குகள் குட்டிபோட்டு இனப்பெருக்கம் செய்யும் விலங்குகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை குட்டிகளை ஈனுகின்றன. உடலினுள்ளே வளர்ச்சியடையும் கருவானது தனக்குத் தேவையான ஊட்டச்சத்தை தனது தாயிடமிருந்து பெற்றுக்கொள்கிறது. மனிதன், பசு, மான் மற்றும் நாய் போன்றவை குட்டி போட்டு இனப்பெருக்கம் செய்யும் விலங்குகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

Viviparous Animals
முட்டையிடும் விலங்குகள்
(i) கருவின் வளர்ச்சி விலங்கின் உடலுக்கு வெளியே நடைவறுகிறது
(ii) இவை தங்கள் இளம் உயிரிகளை முட்டையிட்டு உருவாக்குகின்றன.
(iii) கருவானது முட்டையின் மஞ்சள் கருவிலிருந்து ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்கிறது.
(iv) எடுத்துக்காட்டு; பூச்சிகள், மீன், ஊர்வன, பறவைகள்

குட்டி ஈனும் விலங்குகள்
(i) கருவின் வளர்ச்சி விலங்கின் உடலுக்கு உள்ளே நடைபெறுகிறது.
(ii) இவை நேரடியாக இளம் உயிரிகளை ஈணுகின்றன.
(iii) கருவானது தனது வளர்ச்சிக்கான ஊட்டச்சத்தை தனது தாயிடமிருந்து பெற்றுக்கொள்கிறது.
(iv) எடுத்துக்காட்டு: பூனை, நாம், சிங்கம், மனிதன்.
Viviparous Examples
செயல்பாடு 1
ஏதேனும் மூன்று முட்டையிடும் விலங்குகள் மற்றும் குட்டி ஈனும் விலங்குகளின் பெயர்களை எழுதுக.
Activity 1 table

2. பாலிலா இனப்பெருக்கம்

ஒரு உயிரி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இளம் உயிரிகளாகப் பிளவடைவதன் மூலம் நடைபெறும் இனப்பெருக்கம் பாலிலா இனப்பெருக்கம் எனப்படும். இவ்வகை இனப்பெருக்கம் ஹைட்ரா மற்றும் அமிபா போன்ற நுண்ணுயிரிகளில் நடைபெறுகிறது. பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் முற்றிலும் பெற்றோரைப் போன்ற உயிரினங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. விலங்குகள் பல வழிகளில் பாலிலா இனப்பெருக்கம் செய்கின்றன. அவற்றுள் சில கீழே விளக்கப்பட்டுள்ளன.

❖ பிளவிப் பெருக்கம்

பிளவிப் பெருக்கம் முதுகெலும்பற்ற, பல செல்களுடைய உயிரிகளில் நடைபெறுகிறது. இம்முறையில் ஒரு உயிரினம் தானாகவே இரண்டு உயிரினங்களாகப் பிளவடைகிறது. எடுத்துக்காட்டாக, தட்டைப்புழு, கடற்பஞ்சு, கடல் வெள்ளரி போன்ற உயிரினங்கள் இரண்டு பகுதிகளாகப் பிளவடைந்து ஒவ்வொன்றும் இரு புது உயிரிகளாக வளர்ச்சியுறுகின்றன.

❖ மொட்டு விடுதல்

மொட்டு விடுதல் என்பது ஒருவகை பாலிலா இனப்பெருக்கமாகும். உடல் உறுப்புகள் புறவளர்ச்சி பெறுவதன் மூலம் இவ்வகை இனப்பெருக்கம் நடைபெறுகிறது. அம்மொட்டுக்கள் பின்னர் தாய் உடலிலிருந்து பிரிந்து, இரு புதிய உயிரினங்கள் உருவாகின்றன. மொட்டு விடுதல் பொதுவாக முதுகெலும்பற்ற விலங்குகளாகிய ஹைட்ரா மற்றும் பவளப் பாறைகளில் நடைபெறுகிறது.

❖ துண்டாதல்

உயிரிகளின் உடல் சிறுசிறு துண்டுகளாகப் பிளவுபட்டு, பின்னர் அவை புதிய உயிரியாக வளர்ச்சியடைவது துண்டாதல் எனப்படும். இவ்வகையான இனப்பெருக்கம் கடற்பஞ்சு மற்றும் நட்சத்திர மீன்களில் காணப்படுகிறது. இது விபத்தின் மூலமோ அல்லது எதிரிகளின் தாக்குதல் மூலமோ அல்லது இயற்கையாகவோ நடைபெறலாம்.

Fragmentation Examples

❖ சிதறல்கள் (ஸ்போர்கள்)

ஒருசில புரோட்டாசோவாக்கள், பாக்டீரியாக்கள், தாவரங்கள் மற்றும் பூஞ்சைகள் ஸ்போர்கள் மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன. ஸ்போர்கள் என்பவை ஒரு உயிரினத்தின் வாழ்க்கைச் சுழற்சியின் ஒரு பகுதியாக இயற்கையாக வளரக்கூடியவை. இவை உடலத்திலிருந்து பிரிந்து சிதறலடைந்து காற்று அல்லது நீர் மூலமாகப் பரவுகின்றன. பின்னர், ஏற்ற சூழலில் முழுமையான உயிரினமாக வளர்ச்சியடைகின்றன.

செயல்பாடு 2
உனது பகுதியிலுள்ள அருங்காட்சியகம் அல்லது மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று, அங்கு பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் நட்சத்திர மீன், கடல் வெள்ளரி மற்றும் ஹைட்ரா போன்வற்றின் பதக்கூறுகளைக் (ஸ்பெஸிமன்) கண்டறிக.. அவற்றின் படங்களைச் சேகரித்து, படத்தொகுப்பு ஒன்றைத் தயாரிக்கவும்.

II. அழியும் நிலையிலுள்ள உயிரினங்கள்

முற்றிலும் அழிந்து போகக்கூடிய அபாய நிலையில் உள்ள விலங்குகள் அல்லது தாவரங்கள் அழியும் நிலையிலுள்ள உயிரினங்கள் எனப்படுகின்றன. இவை விரைவில் புவியிலிருந்து நிரந்தரமாக மறையக்கூடிய நிலையில் உள்ளன. இந்தியாவில் 132 உயிரினங்கள் விரைவில் அழியக்கூடிய நிலையில் உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது. பனிச் சிறுத்தை, வங்கப்புளி, ஆசிய சிங்கம், ஊதா தவளை மற்றும் இந்தியராட்சத அணில் ஆகியன இந்தியாவில் அழியும் நிலையிலுள்ள விலங்குகளுள் சில ஆகும். அதைப்போல, குடை மரம், செங்காந்தள் மலர், ரஃப்லேசியா மலர் இந்திய மல்லோ மற்றும் முஸ்லி போன்ற தாவரங்களும் அழியும் நிலையில் உள்ளன.

Endangered Species 1
Endangered Species 2
செயல்பாடு 3
வெவ்வேறு தாவரங்கள் மற்றும் விலங்குகளின் படங்களைச் சேகரிக்கவும். இந்தியாவில் அழியும் நிலையிலுள்ள தாவர மற்றும் விலங்கினங்களைப் பற்றிய ஒரு படத்தொகுப்பைத் தயாரிக்கவும். மேலும், அவற்றின் இருப்பிடத்தைக் கண்டறியவும்.
உங்களுக்குத் தெரியுமா?
ஒரு விலங்கினத்தின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் 50 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை குறையுமானால் அது அழியும் நிலையில் உள்ளதாகக் கருதப்படும்.

1. உயிரினங்கள் அழியும் நிலையில் இருப்பதற்கான காரணங்கள்

ஒரு தாவரம் அல்லது விலங்கு அழியும் நிலையில் இருப்பதற்கான அல்லது அழிந்து போவதற்கான காரணங்கள் பின்வருமாறு.

(i) அநேக விலங்குகளுக்கு உணவு மற்றும் தங்குமிடத்தை வழங்கக்கூடிய காடுகள் மனிதத் தேவைகளுக்காக அழிக்கப்படுகின்றன. (ii) அதிக எண்ணிக்கையிலான விலங்குகள் அவற்றின் கொம்பு, தோல், பல் மற்றும் பிற விலைமதிப்பற்ற பொருள்களுக்காக வேட்டையாடப்படுகின்றன.
செயல்பாடு 4
காடுகளையும் விலங்குகளையும் பாதுகாக்க வலியுறுத்தும் சில வாக்கியங்களை எழுதவும். இயற்கைப் பாதுகாப்பு தொடர்பான சில நாட்களை அனுசரிக்கும் விதமாக ஊர்வலம் சென்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும்.
உங்களுக்குத் தெரியுமா?
சமீப காலங்களில் அதிக எண்ணிக்கையிலான விலங்குகள் நெகிழிக் கழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளன. விலங்குகள், நெகிழியை உணவு என நினைத்து சாப்பிட்டுவிடுகின்றன. சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில், சமீபத்தில் கால்நடை மருத்துவர்கள் ஒரு பசுவின் வயிற்றிலிருந்து 52 கிகி நெகிழிக் கழிவுகளை அகற்றியுள்ளனர்.
(iii) நீர் மாசுபாடு மற்றும் காற்று மாசுபாடு போன்றவை விலங்குகளைப் பாதிக்கின்றன. (iv) சில நேரங்களில், விலங்குகள் மனிதர்களால் அவற்றின் இயற்கை வாழிடத்தைவிட்டு வேறு இடத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றன. அவை அங்கு வாழ முடியாமல் அழிந்துவிடுகின்றன. (v) பூச்சிகள், புழுக்கள் மற்றும் களைச்செடிகளை அழிப்பதற்காக உபயோகிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தாவரங்கள் மற்றும் விலங்குகளையும் பாதிக்கின்றன. (vi) இயற்கைப் பேரழிவுகளான வெள்ளம், புயல் மற்றும் தீ விபத்துகளாலும் விலங்குகள் அழிகின்றன.
Reasons for extinction

2. அழியும் நிலையிலுள்ள உயிரினங்களைப் பாதுகாத்தல்

இயற்கை மிகவும் அழகானது. அது பலவிதமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களால் நிறைந்துள்ளது. ஆனால், அவை மனிதனின் வாழ்க்கைமுறை காரணமாக அழியும் நிலையில் உள்ளன. அவற்றைப் பாதுகாக்க நாம் சில பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

(i) விலங்குகளை வேட்டையாடுவதும், கொல்வதும் தடை செய்யப்படவேண்டும். (ii) சுற்றுச் சூழலை நாம் மாசுபடுத்தக்கூடாது. (iii) நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டைக் குறைத்துக்கொண்டு. அவற்றை மறுசுழற்சி செய்வதன்மூலம் அழியும் நிலையிலுள்ள விலங்கினங்களை நாம் பாதுகாக்கலாம். (iv) சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் வேதிப் பொருள்களைத் தவிர்க்கவேண்டும். (v) நாட்டுமரங்களை வளர்ப்பதன்மூலம் அங்குள்ள விலங்குகள் உணவு பெறமுடியும். (vi) சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களையே வாங்கி உபயோகிக்கவேண்டும்.
செயல்பாடு 5
உங்கள் பள்ளி வளாகத்தில் ஆலமரம், வேப்பமரம், குடைமரம் மற்றும் நாவல் மரம் போன்ற நாட்டு மரங்களை அதிக அளவில் வளர்க்கவும். அவை அநேக பறவைகளுக்கு உதவியாக இருக்கும்.
உங்களுக்குத் தெரியுமா?
வங்கப் புலிகளைக் காப்பதற்காக 1972ல் புலிகள் பாதுகாப்புத் திட்டம் (Project Tiger) துவங்கப்பட்டது. இது 1973ஆம் ஆண்டு, ஏப்ரல் 1ஆம் நாள் செயல்படுத்தப்பட்டது இதன்மூலம் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2006ல் 1400ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை, 2018ல் 2967ஆக அதிகரித்துள்ளது.

3. சிவப்பு தரவுப் புத்தகம்

சிவப்பு தரவுப் புத்தகம் என்பது அழியும் நிலையிலுள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் சார்ந்த விவரங்கள் அடங்கிய புத்தகம் ஆகும். இந்தப் புத்தகமானது முற்றிலும் அழியும் நிலையிலுள்ள விலங்குகளைக் கண்டறிந்து அவற்றைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. இப்புத்தகமானது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் (IUCN) என்ற அமைப்பின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த அமைப்பானது இயற்கையைப் பாதுகாக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. இப்புத்தகம் வண்ணக் குறியீடுகளால் குறிக்கப்பட்ட தகவல்களைக் கொண்டுள்ளது.

Red Data Book

❖ சிவப்பு தரவுப் புத்தகத்தின் பயன்கள்

(i) இது ஒரு இடத்திலுள்ள குறிப்பிட்ட இனங்களின் எண்ணிக்கையை மதிப்பிட உதவுகிறது. (ii) இப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள புள்ளிவிவரங்களை உலக அளவில் உபயோகித்துக் கொள்ளலாம். (iii) எந்த இனம் உலகளவில் அழியும் அபாயத்தில் உள்ளது என்பதை இந்தப் புத்தகத்திலுள்ள விவரங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம். (iv) உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது குறித்த வழிமுறைகளை இப்புத்தகம் வழங்குகிறது.
உங்களுக்குத் தெரியுமா?
இந்தியாவின் சிவப்பு தரவுப் புத்தகம் இந்திய துணைக் கண்டத்திலுள்ள விலங்குகள் மற்றும் தாவரங்களின் பாதுகாப்பு நிலை குறித்த தகவல்களைக் கொண்டுள்ளது. இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு நிறுவனம் மற்றும் இந்திய தாவரவியல் கணக்கெடுப்பு நிறுவனம் ஆகியவற்றின் மதிப்பீடுகள் இப்புத்தகத்திற்குத் தேவையான புள்ளி விவரங்களைத் தருகின்றன.

III. விலங்குகளைப் பாதுகாத்தல்

உயிரின பலவக்கத் தன்மை என்பது பூமியில் வாழும் பலதரப்பட்ட தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் மற்றும் பூச்சிகளைக் குறிக்கிறது. உயிரிகளின் பல்வகைத் தன்மையைப் பாதுகாப்பதன் மூலம் அழியும் நிலையிலுள்ள விலங்குகள் மற்றும் தாவரங்களைப் பாதுகாத்து, பராமரித்து, அவற்றின் எண்ணிக்கையை நாம் அதிகரிக்க முடியும். உயிரினங்களின் பல்வகைத் தன்மையைப் பாதுகாத்தல் என்பது இயற்கை வளங்கள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாட்பது, அவற்றை நெடுங்காலம் வாழச் செய்வது மற்றும் நிர்வகித்தலைக் குறிக்கிறது. அழியும் நிலையிலுள்ள விலங்கினங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளான தேசியப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்குகள் சரணாலயங்களில் வைத்து பராமரிக்கப்படுகின்றன. இந்தியாவில் 73 தேசியப் பூங்காக்களும், 416 வனவிலங்குகள் சரணாலயங்களும் உள்ளன.

1. தேசியப் பூங்காக்கள்

தேசியப் பூங்கா என்பது வன உயிரிகளின் நலனைப் பேணுவதற்கான பாதுகாக்கப்பட்ட நிலப்பரப்பு ஆகும். பல்வேறு தேவைகளுக்காக காடுகளைப் பயன்படுத்துதல், கால்நடை வளர்ப்பு மற்றும் பயிரிடுதல் போன்ற செயல்பாடுகளுக்கு இப்பகுதிகளில் அனுமதி இல்லை. மேலும், இந்த நிலப்பகுதிகளை தனிநபர் எவரும் தனது உடைமையாக்கிக்கொள்ள முடியாது. இந்த தேசியப் பூங்காக்களின் பரப்பளவு 100 முதல் 500 சதுர கிலோமீட்டர் வரை இருக்கும்.

National Parks map

❖ ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா

ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவானது உத்தர்காண்ட் மாநிலத்திலுள்ள நைனிடால் என்னும் இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது. புலிகளே இங்கு அதிகமாகக் காணப்படுகின்றன. மான், சிறுத்தை, குள்ளநரி, சிவப்பு நரி, கருங்கரடி, தேனுண்ணும் கரடி, குரங்குகள் ஆகியவை இங்க காணப்படக்கூடிய பிற விலங்கினங்கள் ஆகும்.

❖ கிர் வன தேசியப் பூங்கா

இது குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது. இங்கு, ஆசிய சிங்கங்களை அவற்றின் இயற்கை வாழிடத்திலேயே காணலாம். சாம்பார் மான், சிங்காரா சிறுமான், புள்ளி மான், முள்ளம்பன்றி, காட்டுப்பன்றி மற்றும் கருப்பு புல்வாய் மான் ஆகியவை இங்கு காணப்படும் பிற விலங்குகள் ஆகும்.

❖ காஸிரங்கா தேசியப் பூங்கா

இது அஸ்ஸாம் மாநிலத்தில் அமைந்துள்ளது. வன விலங்குகளான காண்டா மிருகம், புலி, யானை, காட்டெருமை மற்றும் கடமான் ஆகியவை இங்கு காணப்படுகின்றன. இந்தப் பூங்காவில் கரடி, சிறுத்தை மற்றும் பலவகை உள்நாட்டு மற்றும் வலசைபோகும் பறவைகள் காணப்படுகின்றன. இப்பூங்கா ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களுக்குப் பெயர் பெற்றதாகும்.

National Parks Animals
உங்களுக்குத் தெரியுமா?
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது (UNESCO) காஸிரங்கா பூங்காவை உலகின் பாரம்பரிய வனவியல் இடமாக பிரகடனப்படுத்தியுள்ளது.

❖ சுந்தர்பான் தேசியப் பூங்கா

மேற்கு வங்கத்திலுள்ள சுந்தர்பான் தேசியப் பூங்காவானது புலிகளின் காப்பகமாகவும் கங்கை நதியின் டெல்டா பகுதியில் அமைந்துள்ள உயிர்கோளக் காப்பகமாகவும் உள்ளது வங்கப் புலிகள், காட்டுப்பன்றி, உவர்நீர் முதலை, நரிகள், சிறுத்தைப் புலிகள், வரிய கடல் ஆமைகள், கங்கை ஆற்று டால்பின்கள், பலவித பாலூட்டி வகைகள் மற்றும் ஊர்வன இங்கு காணப்படுகின்றன. மேலும், அதிக எண்ணிக்கையிலான உள்நாட்டு மற்றும் வலசை போகும் பறவைகளும் இங்கு காணப்படுகின்றன.

❖ கன்ஹா தேசியப் பூங்கா

மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள கன்ஹா தேசியப் பூங்காவானது, புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுகிறது. புலி, யானை, குள்ளநரி, சிறுத்தை, வரிக் கழுதைப்புலிகள், குரங்கு, கடமான், சாம்பார் மான், சிங்கார சிறுமான் மற்றும் புள்ளி மான் போன்ற பலவகை மானினங்கள் இங்கு காணப்படுகின்றன.

❖ பெரியார் தேசியப் பூங்கா

பெரியார் தேசியப் பூங்கா கேரளாவில் உள்ள தேக்கடியில் அமைந்துள்ளது. கம்பிரமான யானைகள், ராஜரீகமான புலிகள், மீன்கள், ஊர்வன, பறவைகள் போன்ற பல்வேறு வகையான உயிரினங்கள் இங்கு காணப்படுகின்றன.

பூங்காவின் பெயர் : மாவட்டம்
(i) மன்னார் வளைகுடா தேசியப் பூங்கா – இராமநாதபுரம்
(ii) இந்திரா காந்தி தேசியப் பூங்கா - கோயம்புத்தார்.
(iii) முதுமலை தேசியப் பூங்கா - நீலகிரி
(iv) முக்கூர்த்தி தேசியப் பூங்கா – நீலகிரி
Tamil Nadu Parks

❖ கிண்டி தேசியப் பூங்கா

இந்தப் பூங்காவானது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. புள்ளிமான், புல்வாய் மான், வெண்மான், நதிநீர் நாய், கழுதைப்புலி குல்லாய் குரங்கு, புனுகுப் பூனை, குள்ள நரி, எறும்பு உண்ணி, முள்ளெலி மற்றும் சாதாரண கீரிப்பிள்ளை போன்ற விலங்குகளின் வசிப்பிடமாக இந்தப் பூங்கா உள்ளது.

2. வனவிலங்கு சரணாலயங்கள்

சரணாலயம் என்பது விலங்குகளின் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிலப்பகுதி ஆகும். மரம் வெட்டுதல், காடுசார்ந்த பொருள்களைச் சேகரித்தல் மற்றும் தனிநபர் உரிமை கோருதல் போன்றவற்றிற்கு இங்கு அனுமதி உண்டு. சுற்றுலாப் பயணிகளுக்கும் இங்கு அனுமதி உண்டு

❖ களக்காடு வனவிலங்கு சரணாலயம்

இந்த சரணாலயம் புலிகளுக்குப் பெயர் பெற்றது. சிங்க வால் குரங்கு, நீலகிரி மந்தி, குல்லாய் குரங்கு, மந்தி, நீலகிரி வரையாடு, சாம்பார் மான், தேன் கரடி, காட்டெருது, யானை, பறக்கும் அணில், சிறுத்தை, காட்டு நாய் மற்றும் எறும்பு உண்ணி போன்ற பல்வேறு விலங்குகள் இங்கு காணப்படுகின்றன.

❖ முதுமலை வனவிலங்கு சரணாலயம்

இந்த சரணாலயம் ஊட்டியில் அமைந்துள்ளது. வங்கப் புலி, யானை மற்றும் சிறுத்தைப் புலி போன்றவை இங்கு காணப்படுகின்றன. யானை சவாரி இங்கு மிகவும் புகழ் பெற்றதாகும்.

செயல்பாடு 6
தமிழ்நாட்டிலுள்ள தேசியப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களைப் பட்டியலிடுக. உங்கள் பகுதிக்கு அருகிலுள்ள தேசியப் பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களுக்குச் சென்று அங்கு காணப்படும் விலங்குகளைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கவும்.

❖ முண்டந்துறை வனவிலங்குகள் சரணாலயம்

இது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது. இங்கு காணப்படும் முக்கிய விலங்கு புலி ஆகும்.

❖ ஆனைமலை வனவிலங்கு சரணாலயம்

இது இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் என்றும் வழங்கப்படுகிறது. இது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளது. செந்நாய், காட்டு நாய் மற்றும் இராட்சச அணில் ஆகியவை இங்கு உள்ளன.

Sanctuaries of TN
சரணாலயத்தின் பெயர் : மாவட்டம்
(i) மேகமலை வனவிலங்கு சரணாலயம் - தேனி
(ii) வண்டலூர் வனவிலங்கு சரணாலயம் - செங்கல்பட்டு
(iii) களக்காடு வனவிலங்கு சரணாலயம் - திருநெல்வேலி
(iv) சாம்பல் நிற மலை அணில் வனவிலங்கு சரணாலயம் - விருதுநகர்
Vedanthangal Bird Sanctuary

❖ வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

இது தமிழ்நாட்டின் மிகப் பழமையான சரணாலயம் ஆகும். இது செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு கரண்டி வாயன், நத்தைக் கொத்தி நாரை மற்றும் பெலிகான் போன்ற அநேக வலசை போகும் பறவைகள் காணப்படுகின்றன.

3. சரணாலயங்களின் பயன்கள்

(i) விலங்கினங்கள் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு ஏற்றாற்போல் தங்களைத் தகவமைத்துக்கொள்ள இயலும். (ii) விலங்கினங்கள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்ளமுடியும். (iii) விலங்குகளின் இயற்கை வாழிடம் பாதுகாக்கப்படுகிறது. (iv) இவற்றைப் பராமரிக்கும் செலவு குறைவு. மேலும், இவற்றை எளிதில் நிர்வகிக்கவும் முடியும்.
உங்களுக்குத் தெரியுமா?
(i) கோடியக்கரை பறவைகள் சரணாலயம் - நாகபட்டினம்
(ii) கரைவெட்டி பறவைகள் சரணாலயம் - அரியலூர்
(iii) வடுவூர் பறவைகள் சரணாலயம் - திருவாரூர்
(iv) வல்லநாடு வெளி மான் காப்பகம் - தூத்துக்குடி
(v) விராலிமலை பறவைகள் சரணாலயம் - திருச்சி

IV. விலங்குகள் வதைக்கப்படுவதைத் தடுத்தல்

விலங்குகளை வதை செய்வது என்பது, அவற்றைக் கண்ணி வைத்துப் பிடித்தல், அடைத்துவைத்தல், விஷம் வைத்துக் கொல்லுதல் போன்ற செயல்களை உள்ளடக்கியதாகும். விலங்குகளின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் மனநிலை போன்றவற்றைப் பாதுகாக்கக்கூடிய பல விலங்கு நல அமைப்புகள் உள்ளன. இவற்றுள் துன்புறும் விலங்குகளைக் காக்கும் குழுக்கள் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட விலங்குகளைக் காக்கும் குழுக்களும் உண்டு. இந்திய விலங்குகள் நல வாரியம் மற்றும் தேசிய விலங்குகள் நல நிறுவனம் ஆகியவை விலங்குகளின் நலனுக்காக செயல்படும் அரசாங்க அமைப்புகள் ஆகும். இவை தவிர, சில தனியார் விலங்கு நல அமைப்புக்களும் உண்டு.

1. நீலச் சிலுவை

நீலச் சிலுவை என்பது இங்கிலாந்து நாட்டில் அமைந்துள்ள விலங்குகளின் நலனிற்கான பதிவு செய்யப்பட்ட அமைப்பு ஆகும். ஒவ்வொரு செல்லப் பிராணியும் ஆரோக்கிய வாழ்வை, மகிழ்ச்சியான இல்லத்தில் அனுபவிக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் 1837ஆம் ஆண்டு இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. தங்களின் செல்லப் பிராணிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்க முடியாத நபர்களுக்கு உதவுதல், புறக்கணிக்கப்பட்ட விலங்குகளுக்கு ஒரு இல்லம் கிடைக்கச் செய்வது மற்றும் விலங்குகளை வைத்திருப்போருக்கு பொறுப்புணர்வைக் கற்றுக்கொடுப்பது ஆகிய பணிகளை இந்த அமைப்பு மேற்கொண்டுவருகிறது.

Blue Cross activities

இந்திய நீலச் சிலுவை அமைப்பு 1959ஆம் ஆண்டு சென்னையில் உருவாக்கப்பட்டது. இந்தியாவிலுள்ள விலங்குகளின் நலனைக் காக்கும் மிகப்பெரிய நிறுவனங்களுள் ஒன்றாக இது உள்ளது. இதன் தலைமை அலுவலகம் சென்னையிலுள்ள கிண்டியில் அமைந்துள்ளது. மருத்துவமனை, தங்குமிடம், அவசர ஊர்தி சேவை மற்றும் விலங்குகளின் இனப்பெருக்கக் கட்டுப்பாடு போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது. விலங்குகளுக்கு தங்குமிடம் வழங்குதல், ஆதரவற்ற விலங்குகளை தத்துக் கொடுத்தல், மருத்துவமனைகள் மற்றும் நடமாடும் மருத்துவ நிலையங்களை நிர்வகித்தல் மற்றும் மருத்துவ அவசர ஊர்தி வசதிகளைக் கொடுத்தல் போன்றவை இதன் செயல்பாடுகளாகும்.

செயல்பாடு 7
உன் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைக்குச் சென்று அங்குள்ள விலங்குகள் எவ்வாறு மனிதர்களால் பாதிக்கப்பட்டுள்ளன என்று கண்டறியவும். மேலும், மனிதர்கள் விலங்குகளை வதை செய்வதை எவ்வாறு தடுக்கலாம் என்பதையும் குழுவாக ஆலோசிக்கவும்.
உங்களுக்குத் தெரியுமா?

இந்தியாவின் நீலச் சிலுவை அமைப்பு சென்னையைச் சேர்ந்த கேப்டன். வி. சுந்தரம் என்பவரால் உருவாக்கப் பட்டது. இவர் இந்திய விமானியும், விலங்குகள் நலனில் அதிக அக்கறை கொண்டு அதற்காக ஈடுபாட்டோடு பணிபுரிந்தவரும் ஆவார்.
Tags : Term 3 Chapter 2 | 5th Science பருவம் 3 அலகு 2 | 5 ஆம் வகுப்பு அறிவியல்.
5th Science : Term 3 Unit 2 : Animals : Animals Term 3 Chapter 2 | 5th Science in Tamil : 5th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 2 : விலங்குகள் : விலங்குகள் - பருவம் 3 அலகு 2 | 5 ஆம் வகுப்பு அறிவியல் : 5 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.