5 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 3 : காற்று
(i) பல்வேறு வளிமண்டல அடுக்குகள் குறித்து அறிந்துகொள்ளல்.
(ii) காற்று மாசுபடுதலுக்கான காரணங்களைப் புரிந்துகொள்ளல்.
(iii) காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வழிமுறைகளைப் பட்டியலிடுதல்.
(iv) காற்றின் மூலம் பரவும் நோய்களை அறிந்துகொள்ளல்.
(v) அன்றாட வாழ்வில் காற்றின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளல்.
அறிமுகம்
காற்று நம்மைச் சுற்றிலும் எங்கும் நிறைந்துள்ளது. நம்மால் அதைக் காண முடியாவிட்டாலும் உணர முடியும். காற்று என்பது ஆக்சிஜன், நைட்ரஜன், கார்பன் டைஆக்சைடு, ஹைட்ரஜன் போன்ற வாயுக்களின் கலவை ஆகும். இந்த வாயுக்கள் ஒரு போர்வையைப் போல பூமியை மூடி வளிமண்டலத்தை உருவாக்குகின்றன. இந்த வளிமண்டலமே பூமியை நாம் வாழ்வதற்கேற்ற இடமாக மாற்றுகிறது. சமீப காலங்களில் அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு வருகின்றன. அவை மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் கார்பன் டைஆக்சைடு போன்ற வாயுக்களை அதிக அளவில் வளிமண்டலத்திற்குள் வெளியிடுகின்றன. இதனால் காற்றானது முன்பு இருந்ததைவிட அதிக அளவில் மாசு அடைந்துள்ளது. இந்தப் பாடத்தில் நாம் வளிமண்டல அடுக்குகள், காற்று மாசுபாடு, காற்றின் மூலம் பரவும் நோய்கள் மற்றும் காற்று மாசுபடுதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ஆகியவற்றைக் குறித்து காண்போம்.
I. வளி மண்டலம்
பூமியானது பலவேறு வாயுக்களின் அடுக்குகளால் சூழப்பட்டுள்ளது. இதற்கு வளி மண்டலம் என்று பெயர். இது முக்கியமாக நைட்ரஜன் (78%) மற்றும் ஆக்சிஜன் (21%) வாயுக்களால் ஆனது. கார்பன் டைஆக்சைடு மற்றும் ஆர்கான் போன்ற பிற வாயுக்களும் 1% கன அளவிற்கு வளிமண்டலத்தில் நிறைந்துள்ளன. வளி மண்டலம் ஒரு கம்பளியைப் போல பூமியை மூடி உள்ளதால் பூமியை அதிகக் குளிரிலிருந்தும், அதிக வெப்பத்திலிருந்தும் பாதுகாக்கிறது.
வளிமண்டலம் ஐந்து வெவ்வேறு அடுக்குகளாகக் பிரிக்கப்பட்டுள்ளது. கீழிருந்து மேலாக அவை:
❖ அடி வளிமண்டலம் (ட்ரோப்போஸ்பியர்)அடி வளிமண்டலமே வளிமண்டலத்தின் மிகத் தாழ்வான அடுக்காகும். கடல் மட்டத்திலிருந்து இது சுமார் 10 கிமீ உயரம் வரைக் காணப்படுகிறது. இது மிகவும் அடர்த்தியான அடுக்காகும். வளிமண்டலத்திலுள்ள காற்றில் 75% இங்குதான் காணப்படுகிறது. இந்த அடுக்கில் நீராவியும் காணப்படுகிறது. நாம் இந்த அடுக்கில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். வானிலைக் காரணிகளான மேகம், மழை, பனி போன்றவையும் இங்குதான் அதிகளவு காணப்படுகின்றன. அனைத்து வானிலை மாற்றங்களும் இந்த அடுக்கில்தான் ஏற்படுகின்றன.
தினசரி நாளிதழ்களில் வரும் வானிலை குறித்த செய்திகளைப் படித்து ஒரு வாரத்தில் வானிலையில் தினமும் ஏற்படும் மாற்றங்களைக் குறித்துக் கொள்ளவும். எந்த அடுக்கின் இந்த மாற்றங்கள் நடைபெறுகின்றன? இதைக் குறித்து வகுப்பறையில் விவாதித்து, கருத்துக்களைப் பதிவு செய்யவும்.
இது அடி வளிமண்டலத்தின் மேல்பகுதியில் தொடங்கி, நிலமட்டத்திற்கு மேல் 50 கி.மீ உயரத்திற்கு பரந்து காணப்படுகிறது. இம்மண்டலத்தில் காணப்படும் ஓசோன் அடுக்கானது மனிதர்களின் கண் மற்றும் தோலில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய தீங்கு விளைவிக்கும் புறஊதாக் கதிர்களை ஈர்த்துக்கொள்கிறது. இந்த அடுக்கில் நீராவி காணப்படுவதில்லை. இங்கு வெப்பநிலை -55°C அளவிற்குக் காணப்படும்.
❖ இடை மண்டலம் (மீஸோஸ்பியர்)
படை மண்டலத்திற்கு மேலே உள்ள அடுக்கு இடை மண்டலம் எனப்படும். இது தரை மட்டத்தில் இருந்து சுமார் 85 கி.மீ. உயரம் வரை காணப்படுகிறது. உயரம் அதிகரிக்க அதிகரிக்க இங்கு வெப்பநிலை குறைந்து காணப்படும். இங்கு வெப்பநிலை -100°C அளவிற்குக் காணப்படும். வானில் காணப்படும் அநேக விண்கற்கள் இந்த மண்டலத்தில்தான் எரிகின்றன.
❖ வெப்ப வளிமண்டலம் (தெர்மோஸ்பியர்)இடை மண்டலத்திற்கு மேலே காற்று அரிதாக உள்ள அடுக்கு வெப்பமண்டலம் என்று அழைக்கப்படுகிறது. இது வளிமண்டலத்தின் நான்காவது அடுக்காகும்.
❖ புற வளிமண்டலம் (எக்ஸோஸ்பியர்)வளிமண்டலத்தில் கடைசியாகக் காணப்படும் அடுக்கு புற வளிமண்டலம் எனப்படுகிறது. இது தரை மட்டத்திலிருந்து 400 கி.மீ முதல் 1600 கி.மீ வரை பாவியள்ளது. இங்கு காற்று மிகவும் குறைந்த அடர்த்தியுடன் காணப்படும்.
உயரம் அதிகரிக்க அதிகரிக்க வளிமண்டலத்திலுள்ள காற்றின் அளவு குறைகிறது. இதனால் ஆக்சிஜனின் அளவும் குறைகிறது. எனவேதான் மலையேற்றம் செய்பவர்கள் மலையில் ஏறும்போது ஆக்சிஜன் உருளைகளைக் கொண்டு செல்கிறார்கள்.
II. காற்றின் முக்கியத்துவம்
அனைத்து உயரினங்களுக்கும் காற்று மிகவும் அவசியம். காற்று இல்லாமல் எந்த உயிரினமும் பூமியில் வாழ முடியாது. நாம் காற்றிலுள்ள ஆக்சிஜனை உள்ளிழுத்துக்கொண்டு கார்பன் டைஆக்சைடை வெளியிடுகிறோம். தாவரங்கள் காற்றிலுள்ள கார்பன் டைஆக்சைடை உணவு தயாரிக்கப் பயன்படுத்திக்கொள்கின்றன. காற்றிலுள்ள ஆக்சிஜன், நைட்ரஜன், கார்பன் டைஆக்சைடு மற்றும் ஹைட்ரஜன் போன்ற வாயுக்கள் பல்வேறு காரணங்களுக்காக நமக்கு அவசியமாகின்றன.
❖ நீர் சுழற்சிகாற்றிலுள்ள நீராவியே நீர் சுழற்சி ஏற்படக் காரணமாகப்படுகிறது. ஏரிகள் மற்றும் பெருங்கடல் போன்ற நீர்நிலைகளில் உள்ள நீர் ஆவியாகி நீராவியாக மாறப்படுகிறது. இந்த நீராவியானது பின்னர் மேகங்களை உருவாக்குகின்றது. இந்த மேகங்கள் நிலத்தை நோக்கி நகர்ந்து, குளிர்வடைந்து நமக்கு மழைப்பொழிவைத் தருகின்றன. மேகங்களின் இந்த நகர்வு காற்றினால் ஏற்படுகிறது.
❖ ஆற்றலை அளித்தல்
நாம் காற்றிலுள்ள ஆக்சிஜனை சுவாசிக்கிறோம். அது நமது உடலிலுள்ள செல்களுக்கு வழங்கப்படுகிறது. உடல் செல்கள் ஆக்சிஜனின் உதவியால் உணவு மூலக்கூறுகளை எரித்து நமக்குத் தேவையான ஆற்றலை அளிக்குகின்றன. இந்த ஆற்றலின் உதவியால் நாம் பல்வேறு வேலைகளைச் செய்கிறோம்.
❖ காற்றின் வழியே ஒலி பயணிக்கிறதுநாம் நமது சுற்றுப்புறத்திலிருந்து பல்வேறு ஓசைகளைக் கேட்கிறோம். மேலும், நாம் பேசுவதை பிறர் கேட்கின்றனர். இவை காற்றின் மூலமே நடைவெறுகின்றன. ஏனெனில், ஒலி பரவுவதற்கு காற்று போன்ற ஒரு ஊடகம் தேவை. உருவாகும் இடத்திலிருந்து கேட்பவரிடம் காற்றின் மூலமே ஒளி கடந்து செல்கிறது.
❖ தாவரங்களுக்குப் பயன்படுதல்காற்றிலுள்ள நைட்ரஜன் தாவரங்களுக்குப் பயனுள்ளதாக உள்ளது. காற்றிலுள்ள நைட்ரஜன் சில நுண்ணுயிரிகளால் தாவரங்கள் எளிதில் உறிஞ்சக்கூடிய நைட்ரேட்டுகளாக மாற்றமடைகிறது. இது நைட்ரஜன் நிலைநிறுத்தம் எனப்படும். இந்த நைட்ரேட்டுகள் தாவர வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன. மேலும், காற்றானது தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதற்கும் உதவுகிறது. மகரந்தத்தூள் காற்றின் உதவியுடன் ஒரு தாவரத்திலிருந்து மற்றொரு தாவரத்திற்குச் சென்றடைகிறது. என்வே, அயல் மகரந்தச் சேர்க்கைக்கும் காற்று உதவுகிறது.
❖ போக்குவரத்துவாயுக்களின் நகர்வு காற்று என்று அழைக்கப்படுகிறது. கப்பல் மற்றும் படகுகள் நீரின் மீது பயணிக்க காற்று உதவுகிறது. விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களும் காற்றிலேயே பயணிக்கின்றன.
❖ விளையாட்டுகள்பாராகிளைடிங் என்பது ஒரு பொழுதுபோக்கு மற்றும் சாகசம் செய்யும் விளையாட்டு ஆகும். இதில் விளையாடும் நபர் துணியாலான ஒரு இறக்கையின் கீழ் உள்ள இருக்கைப் பட்டை மீது அமர்ந்திருப்பார். தொங்கு கிளைடிங் என்பதும் ஒரு வகை விளையாட்டு ஆகும். இதில் விளையாடுபவர் இலேசான, விசைப்பொறி (மோட்டார்) இல்லாத, பாதத்தால் இயக்கப்படக்கூடிய தொங்கு கிளைடர் எனப்படும் ஒரு சிறு விமானத்தை இயக்குவார். இந்த இரு விளையாட்டுக்களுமே காற்றின் உதவியோடுதான் நடைபெறுகின்றன. மற்ற விளையாட்டுக்களான கட்டைகளைக் கொண்டு கடல் அலைகளின் மீது சீறிப் பாய்தல், பட்டம் விடுதல் மற்றும் பாய்மரக் கப்பலில் பயணித்தல் போன்றவையும் காற்றின் உதவியோடுதான் நடைபெறுகின்றன.
ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள ஜோகிந்தர் நகர் பள்ளத்தாக்கில் உள்ள பிர் பில்லிங் எனும் மலைப் பிரதேசம் பாராகிளைடிங் விளையாட்டின் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள ஏலகிரி மலை பாராகிளைடிங் விளையாட்டிற்கு ஏற்ற இடமாகும்.
காற்றின் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படும் இடங்களைக் கண்டறிக. மேலும், காற்று ஆற்றலின் முக்கியத்துவம் குறித்து வகுப்பறையில் விவாதித்து, அதைப் பற்றிய அறிக்கை ஒன்றைத் தயார் செய்யவும்.
பாராசூட் மற்றும் வெப்பக் காற்று பலூன்கள் மேலிருந்து கீழே இறங்குவதற்கு உதவுகின்றன. ஆபத்தான அவசர காலங்களில் நாம் பாராசூட்டைப் பயன்படுத்தி காற்றின் உதவியுடன் மெதுவாகவும் பாதுகாப்பாகவும் கீழே இறங்கமுடியும்.
❖ காற்று ஆற்றல்வாயுக்களின் நகர்வு காற்று என்று அழைக்கப்படுகிறது. வாயுக்கள் அழுத்தம் அதிகம் உள்ள இடத்திலிருந்து அழுத்தம் குறைந்த இடத்திற்குச் செல்கின்றன. இந்த ஓட்டத்திற்கு காற்று என்று பெயர். காற்றாலைகளின் உதவியுடன் மின்சாரம் தயாரிக்க காற்று உதவுகிறது.
III. காற்று மாசுபாடு
உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய தீங்கு விளைவிக்கும் பொருள்கள் காற்றில் காணப்படுவதையே காற்று மாசுபடுதல் என்கிறோம். கார்பன் டைஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, சல்ஃபர் ஆக்சைடுகள் போன்ற வாயுக்களும், தீங்கு விளைவிக்கும் சிறு துகள்கள், தூசுகள் மற்றும் வாயு அல்லது திரவத்துடன் கலந்துள்ள மிகச் சிறிய திண்மத் துகள்களும் காற்றில் கலக்கும்போது காற்று மாசுபாடு அடைகிறது. இத்தகைய பொருள்களை உள்ளிழுத்துக்கொள்ளும் திறனை சுற்றுச்சூழல் இயற்கையாகவே பெற்றுள்ளது. ஆனால், அதைவிட அதிகமான அளவிற்கு இப்பொருள்கள் வெளியிடப்படுகின்றன. காற்று மாசுபாடானது அநேக நோய்கள், ஒவ்வாமை மற்றும் மரணத்தையும் தோற்றுவிக்கலாம். இவை தாவரங்கள் மற்றும் விலங்குகள் போன்ற பிற உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியவை. மேலும், இயற்கைச் சூழலையும் இவை பாதிக்கக்கூடியவை.
1. காற்று மாசுபாட்டிற்கான காரணங்கள்
இயற்கை மற்றும் மனித செயல்பாடுகள் மூலம் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. எரிபொருள்களை எரித்தல், தொழிற்சாலைக் கழிவுகளை வெளியிடுதல், மற்றும் சுரங்க வேலை போன்ற மனித செயல்பாடுகள் மூலம் காற்று மாசுபடுத்திகள் வளிமண்டலத்திற்குள் வெளியிடப்படுகின்றன. எரிமலை வெடித்தல் போன்ற இயற்கை நிகழ்வுகளும் காற்று மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன.
மாசுபாடு எனப் பொருள்படும் 'Pollution" எனும் ஆங்கில வார்த்தை "Poluere", எனும் லத்தீன் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. இதற்கு தூய்மைக் கேடு அடைதல் அல்லது அழுக்காக்குதல் என்று பொருள்.
பொருள்களை உற்பத்தி செய்வதற்காக அநேக தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்தொழிற்சாலைகளிலிருந்து அதிக அளவிலான கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரோகார்பன்கள், கரிமச் சேர்மங்கள் மற்றும் வேதிப் பொருள்கள் காற்றில் வெளியேற்றப்படுகின்றன. இந்த மாசுபடுத்திகளால் காற்றின் தரம் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது.
தொழிற்சாலைகளின் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து உங்கள் வகுப்பில் விவாதம் ஒன்று நடத்தவும் எந்த வகையில் தொழிற்சாலைகள் காற்று மாசுபாட்டிற்குக் காரணமாக உள்ளன என்று கலந்தாய்வு செய்து, அவற்றால் உருவாகும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கலாம் எனக் கலந்துரையாடவும்.
நிலக்கரி மற்றும் பெட்ரோல் போன்ற எரிபொருள்களை எரித்தல் மூலம் சல்ஃபர் டைஆக்சைடு எனும் வாயு வெளியாகிறது. இது ஒரு முக்கிய காற்று மாசுபடுத்தி ஆகும். கார், பேருந்து, தொடர் வண்டி மற்றும் ஆகாய விமானம் போன்ற ஊர்திகளால் முக்கிய மாசுபடுத்திகள் காற்றில் வெளியிடப்படுகின்றன. எரிபொருள்களின் முறையற்ற அல்லது முற்றுப்பெறாத எரிதல் காரணமாக கார்பன் மோனாக்சைடு வெளியிடப்படுகிறது. நைட்ரஜன் ஆக்சைடுகளும் காற்று மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன.
❖ வேளாண்மைச் செயல்பாடுகள்இந்த நவீன காலத்தில், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் வேதி உரங்களின் பயன்பாடு வேளாண்மையில் அதிகரித்துள்ளது அவை அம்மோனியா போன்ற வேதிப்பொருள்களை காற்றில் வெளியிட்டு அதிகளவில் காற்று மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன.
ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால் முற்றிலும் வெண்மை நிற சலவைக் கற்களால் கட்டப்பட்டது. ஆனால், இது சமீப காலங்களில் மஞ்சள் நிறமாக மாறியுள்ளது. இதற்குக் காரணம் காற்று மாசுபாடு ஆகும். இப்பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் அதிக அளவிலான மாசுபடுத்திகளை காற்றில் வெளியிடுகின்றன. ஒவ்வொரு நாளும் 2000 மெட்ரிக் டன் கழிவுகள் அந்நகரில் வெளியேற்றப்படுகின்றன.
பூமியிலிருந்து தாதுப் பொருள்களை வெட்டி எடுப்பது சுரங்க வேலை எனப்படும். சுரங்கச் செயல்பாடுகள் தூசி மற்றும் வேதிப் பொருள்களை அதிக அளவில் காற்றில் வெளியேற்றி காற்று மாசுபடுவதற்குக் காரணமாக உள்ளன. இது மக்களின் உடல் நலத்தைப் பாதிக்கிறது.
❖ அன்றாட வீட்டு வேலைகள்நமது அன்றாட வீட்டு வேலைகள் மூலமும் காற்று மாசுபடுகிறது. வீட்டைத் தூய்மைப்படுத்தும் போதும், வண்ணம் பூசும்போதும் அதிக அளவில் வேதிப் பொருள்களை உபயோகப்படுத்துகிறோம். இந்த வேதிப் பொருள்கள் காற்றை மாசுபடுத்துகின்றன.
2. காற்று மாசுபாட்டின் விளைவுகள்
காற்று மாசுபாடு மனிதன் உட்பட அனைத்து உயிரிகளையும் பாதிக்கிறது. இது சுற்றுச் சூழல் மற்றும் கால நிலையில் பெருமளவு மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
❖ நோய்கள்காற்று மாசுபாடு அநேக சுவாச நோய்களை உருவாக்குகிறது. காற்று மாசு படுத்திகள் குழந்தைகளுக்கு நிமோனியா மற்றும் ஆஸ்த்மா போன்ற நோய்களை ஏற்படுத்துகின்றன.
❖ உலக வெப்பமயமாதல்காற்று மாசுபாடு காரணமாக கார்பன் டைஆக்சைன் அளவு வளிமண்டலத்தில் அதிகரிக்கிறது. கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்கள் வளி மண்டலத்தில் அதிகரிக்கும்போது வளிமண்டலத்தின் வெப்பநிலை அதிகரிக்கிறது. வெப்பநிலை அதிகரிப்பின் காரணமாக, துருவப் பிரதேசங்களிலுள்ள பனிக்கட்டி மற்றும் பனிப்பாறைகள் உருகி, கடலின் நீர்மட்டம் உயர்கிறது. இந்த நிகழ்வுகள் அங்கு வாழும் உயிரினங்களைப் பாதிக்கின்றன.
❖ அமில மழை
மழை பெய்யும்போது தீங்கு விளைவிக்கும் நைட்ரஜன் மற்றும் சல்ஃபர் ஆக்சைடுகளுடன் மழை நீரானது கலந்து அமில மழையாக நிலத்தில் பொழிகிறது. அமில மழையானது மனிதர்கள், விலங்குகள் மற்றும் பயிர்களைப் பாதிக்கிறது.
❖ ஓசோனில் ஓட்டை (மெலிதாகும் ஓசோன் அடுக்கு)
ஓசோன் மூலக்கூறுகள் புவியின் இரண்டாம் அடுக்கான படைமண்டலத்தில் காணப்படுகின்றன. இவை புறஊதாக் கதிர்களின் பாதிப்பிலிருந்து மனிதர்களைப் பாதுகாக்கின்றன. ஆனால், குளோரோ புளூரோகார்பனானது இந்த ஓசோன் மண்டலத்தைக் கரைத்து வருகிறது.
❖ கடல்வாழ் உயிரிகள்
வேதி உரங்களிலுள்ள அதிக அளவு நைட்ரஜன் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கலக்கின்றது. இவை நீர்நிலைகளில் உள்ள பச்சைப் பாசிகள் வளரக் காரணமாகின்றன. இது ஊட்டச்சத்து மிகுதல் (Eutrophication) என்று அழைக்கப்படுகிறது. இந்நிகழ்வு மீன், தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதிக்கிறது.
❖ காட்டு விலங்குகள் பாதிக்கப்படுதல்காற்று மாசுபடும்போது காட்டு விலங்குகள் புதிய இடத்திற்கு இடம்பெயர்கின்றன. அவற்றின் வாழிடம் மாறும்போது அவை அழிந்துபோகின்றன.
குளிர்சாதனப் பெட்டி, வண்ணத் தெளிப்பான் மற்றும் தீயணைப்பான் போன்றவற்றில் உபயோகப்படுத்தப்படும் குளோரோபுளூரோகார்பன் போன்ற வேதிப் பொருள்கள் வளிமண்டலத்திலுள்ள ஓசோனின் அளவைக் குறைந்துபோகச் செய்கின்றன. இது அண்டார்க்டிகா பகுதியில் உள்ள ஓசோன் படலம் குறைவுபட வழிவகுக்கிறது.
3. காற்று மாசுபாட்டைத் தடுத்தல்
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த நாம் சில நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் அவற்றுள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
(i) பொதுப் போக்குவரத்து வாகனங்களை உபயோகிப்பதன்மூலம் காற்றுமாசுபாட்டின் அளவைக் குறைக்கலாம்.(ii) புதைபடிவ எரிபொருள்களை எரிப்பதைக் குறைப்பதன் மூலம் நாம் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கலாம்.
(iii) சூரிய ஆற்றல் மற்றும் காற்று ஆற்றல் போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் காற்று மாசுபாட்டைக் குறைக்கலாம்.
(iv) நாம் பொருள்களின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளவேண்டும். சில பொருள்களை மீண்டும் மீண்டும் உபயோகிக்கலாம் அல்லது மறுசுழற்சி செய்யலாம்.
(v) தேவையில்லாத நேரங்களில் மின்விசிறி மற்றும் மின்விளக்குகளை அணைத்து வைக்கலாம்.
(vi) சிஎஃப்ளல் (CFL) விளக்குகளை உபயோகிப்பதன் மூலம் மின்னாற்றலைச் சேமிக்கலாம்.
(vii) அதிக அளவு மரங்களை நடுவதன் மூலம் வளிமண்டலத்திலுள்ள கார்பன் டைஆக்க்ஷைன் அளவைக் குறைக்கலாம்.
உங்கள் பகுதியில் காணப்படும் காற்று மாசுபடுத்திகளைக் கண்டறிக. அவற்றினால் ஏற்படும் விளைவுகளைக் குறித்து கலந்துரையாடவும். நீங்கள் அடையாளம் கண்டவற்றை உங்கள் குறிப்பேட்டில் பதிவு செய்யவும்.
IV. காற்றின் மூலம் பரவும் நோய்கள்
நுண்ணுயிரிகளால் உருவாக்கப்பட்டு பின்னர் காற்றின் மூலம் மனிதர்களுக்குப் பரவும் நோய்கள் காற்றின்மூலம் பரவும் நோய்கள் எனப்படும். பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகள் காற்றின்மூலம் பரவும் நோய்களைத் தோற்றுவிக்கின்றன. இந்த நுண்ணுயிரிகள் இருமல் அல்லது தும்மல் போன்ற நிகழ்வுகள் மூலம் பரவுகின்றன.
1. பாக்டீரியாக்கள் மூலம் தோன்றும் நோய்கள்
காசநோய் (டி.பி.), தொண்டை அடைப்பான் மற்றும் கக்குவான் இருமல் போன்றவை பாக்டீரியாக்களால் தோன்றி, காற்றின் மூலம் பரவும் பொதுவான நோய்கள் ஆகும்.
❖ காசநோய் (டி.பி.)காசநோயானது மைக்கோபாக்டீரியம் டியூ பர்குலோசிஸ் எனும் பாக்டீரியா மூலம் தோன்றுகிறது. நாம் சுவாசிக்கும்போது காற்றிலுள்ள பாக்டீரியாக்கள் நமது நுரையீரலுக்குள் சென்று அதைப் பாதிக்கின்றன.
❖ கக்குவான் இருமல்இந்த வகை இருமல் போர்டடெல்லா பெர்டுசிஸ் எனும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இது சுவாசப் பாதையைப் பாதித்து இலேசான காய்ச்சல் மற்றும் ஓசையுடன் கூடிய அதிகப்படியான இருமலை உண்டாக்குகிறது.
❖ தொண்டை அடைப்பான் (டிப்தீரியா)இது கார்னி பாக்டீரியம் டிப்தீரியா எனும் பாக்டீரியாவால் உருவாகிறது. இது பொதுவாக மேல் சுவாசப்பாதையைப் பாதித்து காய்ச்சல், தொண்டைப் புண் மற்றும் மூச்சடைப்பு போன்றவற்றை உருவாக்குகிறது.
தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் 1982ல் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24 அன்று உலக காசநோய் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
2. வைரஸ்களால் தோன்றும் நோய்கள்
சாதாரண சளி, குளிர் காய்ச்சல் (ஃப்ளூ) மணல்வாரி, அம்மைக்கட்டு மற்றும் சின்னம்மை போன்றவை வைரஸ்களால் தோன்றும் நோய்களாகும்.
❖ சாதாரண சளிஇது நாசி மற்றும் தொண்டை போன்ற மேல் சுவாசமண்டலத்தைப் பாதிக்கிறது. பொதுவாக ரினோவைரஸ் மூலமே தோன்றுகிறது.
❖ குளிர் காய்ச்சல் (ஃபுளு)இது பொதுவாக குழந்தைப் பருவத்தில் தோன்றக்கூடிய நோய். இது மிக்ஸோ வைரஸால் தோன்றக்கூடியது. இந்நோயினால் நாசி மற்றும் குரல்வளை வீங்கி அழற்சியுற்றுக் காணப்படும்.
❖ அம்மைக்கட்டுஇது மிக்ஸோவைரஸ் பரோடிடிஸ் எனும் வைரஸால் தோன்றுகிறது. பரோடிட் சுரப்பிகளில் வீக்கம் இந்நோய்க்கான முக்கிய அறிகுறியாகும்.
❖ தட்டம்மை
இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் மற்றும் முகத்தில் கொப்பளம் தோன்றி காய்ச்சலும் ஏற்படுகிறது.
❖ மணல்வாரி அம்மை
இது ரூபேலா வைரஸால் தோன்றுகிறது. தோலில் சிறு தடிப்பு, இருமல், தும்மல், சிவந்த கண்கள் போன்றவை இதன் அறிகுறிகளாகும்.
3. நோய்ப் பாதுகாப்பு
சில தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் காற்றின் மூலம் பரவும் நோய்கள் வராமல் நாம் தடுக்கலாம்:
(i) நோய்க்கான அறிகுறி உள்ளவர்களிடம் நாம் நெருங்கிப் பழகக்கூடாது.(ii) தன் சுத்தம் பேணவேண்டும்.
(iii) நோயினால் பாதிக்கப்பட்டவரை முற்றிலும் தனிமைப்படுத்தி வைக்கவேண்டும்.
(iv) தும்மல் மற்றும் இருமலின் போது வாயையும் மூக்கையும் மூடிக்கொள்ளவேண்டும்.
(v) கைகளை நன்கு கழுவவேண்டும்.
(vi) சரியான நேரத்தில் தடுப்பூசி போடுவதன்மூலம் நோய் வராமல் தடுக்கலாம்.
வகுப்பிலுள்ள மாணவர்களை வெவ்வேறு குழுக்களாகப் பிரித்து காற்றின்மூலம் பரவும் நோய்களை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்று விவாதிக்கவும்.