6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : எந்திர உலகம்
கவிதைப்பேழை: அறிவியலால் ஆள்வோம்
இயல் மூன்று
கவிதைப்பேழை
அறிவியலால் ஆள்வோம்
அறிவியல் ஆய்வுக்கு எல்லை இல்லை. மண்ணில், விண்ணில், கடலில், காற்றில் என எங்கும் ஆய்வுகள் நிகழ்கின்றன. மனிதனின் நகலாக எந்திர மனிதனை மனிதரே படைக்கின்றனர். மனித உடலின் பாகங்களையும் இயந்திரத்தின் பாகங்கள் போல் மாற்றுகின்றனர் கோள்கள் இனி நமக்குத் தொலைவு இல்லை. நேற்றைய மனிதன் நினைத்துப் பார்க்காத பலவற்றை இன்றைய மனிதன் நிகழ்த்திக் காட்டுகிறான். இன்றைய மனிதனின் கனவுகளை நாளை நாம் நனவாக்குவோம் வாருங்கள்!
மனிதன் ஆழ்கடலுக்கு உள்ளேயும் சென்று ஆய்வுகள் செய்கின்றான். நீல வானத்தின் மேலே பறந்து நிலவில் சென்றும் வாழ நினைக்கிறான்.
வானத்தில் செலுத்தப்படும் செயற்கைக்கோள்கள் உதவியுடன் செய்தித் தொடர்பில் சிறந்துள்ளான். இயற்கை வளங்களையும் புயல், மழை ஆகியவற்றையும் கண்டறிந்து கூறுகிறான்.
எலும்பும் தசையும் இல்லாமல் செயல்படும் எந்திர மனிதனையும் படைத்து விட்டான். இணையவலையின் உதவியால் உலகத்தையே நம் உள்ளங்கையில் கொடுக்கின்றான்.
பாதிக்கப்பட்ட உடலுறுப்புகளை மாற்றிப் பொருத்தி உடலையும் உயிரையும் காக்க வழிவகை செய்துவிட்டான். அணுவைப் பிளந்து ஆற்றலை எடுத்து அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முயல்கிறான்.
நாளைய மனிதனோ விண்ணிலுள்ள கோள்களில் எல்லாம் நகரங்கள் அமைத்து வாழ்த்திடுவான். அங்குச் சென்றுவர விண்வெளியிலும் பாதை அமைத்திடுவான்.