6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : கண்ணெனத் தகும்
கவிதைப்பேழை: துன்பம் வெல்லும் கல்வி
இயல் ஒன்று
கவிதைப்பேழை
துன்பம் வெல்லும் கல்வி
"கல்வி அழகே அழகு" என்பர் பெரியோர். கற்றபடி நிற்பதே அந்த அழகைப் பெறுவதற்கான வழி. கல்வி, அறிவை வளர்ப்பதோடு பண்படுத்தவும் செய்யும். எவ்வளவுதான் கற்றிருந்தாலும் பண்பாடு இல்லாவிட்டால் அந்தக் கல்வி பயனற்றுப் போகும். பண்பட்ட மனிதரின் புகழே பல்லாண்டு நிலைத்திருக்கும். எனவே, படிப்போம்! பண்பாட்டோடு நிற்போம்! பார் போற்ற வாழ்வோம்!
ஏன்படித்தோம் என்பதையும் மறந்து விடாதே
நாட்டின் நெறிதவறி நடந்து விடாதே - நம்
நல்லவர்கள் தூற்றும்படி வளர்ந்து விடாதே
மூத்தோர் சொல் வார்த்தைகளை மீறக் கூடாது - பண்பு
முறைகளிலும் மொழிதனிலும் மாறக் கூடாது
மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக் கூடாது – தன்
மானமில்லாக் கோழையுடன் சேரக் கூடாது
துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிட வேணும் - நீ
சோம்பலைக் கொல்லும் திறன் பெற்றிட வேணும்
வம்பு செய்யும் குணமிருந்தால் விட்டிட வேணும் - அறிவு
வளர்ச்சியிலே வான்முகட்டைத் தொட்டிட வேணும்
வெற்றிமேல் வெற்றிவர விருதுவர பெருமைவர
மேதைகள் சொன்னதுபோல் விளங்கிட வேண்டும்
பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும்
வற்றாமல் உன்னோடு வாழ்ந்திட வேண்டும்
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
நாம் நூல்களைக் கற்றதோடு இருந்துவிடக்கூடாது. கற்றதன் பயனை மறக்கக் கூடாது. நம் நாட்டின் நெறி தவறி நடக்கக் கூடாது. நல்லவர்கள் குறைசொல்லும்படி வளரக் கூடாது.
பெரியோர் கூறும் அறிவுரைகளை மீறக் கூடாது. பிறரிடம் பழகும் முறையிலும் பேசும் முறையிலும் பண்புநெறி மாறக் கூடாது. பிறர் உழைப்பை நம்பி வாழக் கூடாது.
தன்மானம் இல்லாத கோழைகளுடன் சேரக் கூடாது. துன்பத்தை நீக்கும் கல்வியினைக் கற்க வேண்டும். சோம்பலைப் போக்கிட வேண்டும். பிறருடன் வம்பு செய்யும் வழக்கம் இருந்தால் அதை விட்டுவிட வேண்டும். வானைத் தொடும் அளவுக்கு அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
மேலான அறிஞர்கள் கூறிய அறிவுரைகளின்படி வாழவேண்டும். அதன்மூலம் வெற்றிகளையும் விருதுகளையும் பெருமையையும் பெறவேண்டும். பெற்ற தாயின் புகழும் நம் தாய்நாட்டின் புகழும் அழியாத வகையில் வாழவேண்டும்.