Anrum Inrum: Class 2 Tamil Lesson | Term 3 Chapter 8

Anrum Inrum: Class 2 Tamil Lesson | Term 3 Chapter 8

அன்றும் இன்றும்

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 8

தாத்தாவும் காவியாவும் குளக்கரையில் நின்றிருந்தனர். தாத்தா குளத்தையே பார்த்துக்கொண்டு இருந்தார். அவருடைய முகம் வாடி இருந்தது.

தாத்தாவும் காவியாவும் குளக்கரையில்

"ஏன் தாத்தா கவலையாக இருக்கிறீர்கள்?" என்று கேட்டாள் காவியா.

"இது எப்படி இருந்த குளம் தெரியுமா, காவியா?" தாத்தா சொல்லத் தொடங்கினார்.

"இதோ இந்தத் தார்ச்சாலை அப்போது இல்லை. மண்சாலைதான். குளம் முழுவதும் நீர் நிரம்பி இருக்கும். மாடு போன்றவை தண்ணீர் குடிக்க வந்து போகும். ஆடு குளத்தில் குளிக்கும்.

மீன் துள்ளிக் குதிக்கும். வாத்து கூட்டம் கூட்டமாய் நீந்துவதைப் பார்க்க அழகாக இருக்கும். பறவை பிடிக்க கொக்கு நிற்கும். குளத்தின் அருகே பெரிய மரம் இருக்கும். அங்கு பறவை கீச்சிடும். அதன் பழங்களைக் கொத்தித் தின்ன கிளி பறந்துவரும். இவற்றை எல்லாம் பார்க்க எவ்வளவு அழகாக இருக்கும் தெரியுமா?"

தாத்தா கவலையுடன்

”ஓ… அப்படி இருந்த குளமா இது?" என்று வியப்புடன் கேட்டாள் காவியா.

"ஆமாம், ஆனால் இப்போதோ... குளத்தில் எவ்வளவு குப்பைகள் பார். நீரும் வற்றிவிட்டது", வருத்தத்துடன் சொன்னார் தாத்தா.

நீங்கள் முன்பு பார்த்த அந்தக் குளத்தைப் பார்க்க எனக்கும் ஆசையாக இருக்கிறது. இதைச் சரிசெய்ய முடியாதா தாத்தா?", என்று கேட்டாள் காவியா.

"அதைப்பற்றித்தான் ஊர்த்தலைவரிடம் பேசி இருக்கிறேன். விரைவில் சரிசெய்வதாகச் சொல்லியிருக்கிறார்" என்றார் தாத்தா.

பழைய குளம் காவியாவின் மனதில் கற்பனையாக விரிந்தது. மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தபடி நடக்கத் தொடங்கினாள் காவியா.

காவியா மகிழ்ச்சியுடன்
அன்றும் இன்றும் ஒப்பீடு