4th Social Science Term 1 Unit 2 Five Landforms

4th Social Science Term 1 Unit 2 Five Landforms
பருவம் 1 அலகு 2 | 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - ஐவகை நில அமைப்பு
4th Social Science : Term 1 Unit 2 : Five Landforms

ஐவகை நில அமைப்பு

Five Landforms Banner

கற்றல் நோக்கங்கள்

  • பண்டைய தமிழகத்தின் பல்வேறுபட்ட நில அமைப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்ளல்
  • நில வகைப்பாடுகளின் கருப்பொருட்களை அறிதல் பல்வேறு நிலங்களில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறைகளைப் புரிந்து கொள்ளல்

முன்னுரை

  • உன் சொந்த ஊர் எது?
  • உன் சொந்த ஊர் அமைந்துள்ள மாவட்டம் எது?
  • உன் வீட்டைச் சுற்றி என்ன காண்கிறாய்?

நம் வீட்டைச்சுற்றி வயல்கள், வீடுகள், மரங்கள், கற்கள் மற்றும் வறண்ட நிலங்களைப் பார்க்கிறோம். நம் புவியில் இது போன்று மேலும் சிலவற்றைப் பார்க்கிறோம்.

Landforms Intro
  • புவியில் மலைக் குன்றுகளை எங்குக் காண்கிறாய்? மலைத் தொடர்களில்
  • விலங்குகளுடன் கூடிய அடர்ந்த மரங்களை எங்குக் காண்கிறாய்? காடுகளில்
  • நெற்பயிர் எங்கு வளரும்? வேளாண்மை நிலத்தில்
  • கடற்கரைப்பகுதிகளை எங்குக் காண்கிறாய்? கடல் மற்றும் கடற்கரைக்கு அருகில்
  • பயனற்ற நிலத்தின் பெயர் என்ன? தரிசு நிலம்

புவியின் மேற்பரப்பில் நாம் காணும் பல்வேறுபட்ட இடங்களையே நிலத்தோற்றம் என அழைக்கிறோம்.

பண்டைய தமிழ்நாட்டின். நிலங்கள் அவற்றின் தோற்றங்கள் காறும் மக்களின் செயல்பாடுகள் எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருந்தன என்பதனை நாம் இப்போது பார்க்கலாம்.

தமிழ்நாட்டின் நிலத்தோற்றமும் இயற்கை அமைப்பும்

சூரியக் குடும்பத்தில் சூரியனிலிருந்து மூன்றாவதாக இருக்கும் கோள் 'புவி' ஆகும். இது உயிர்வளி (ஆக்சிஜன்) யையும் வாழத்தகுந்ததட்பவெப்பத்தினையும் கொண்டுள்ளது. எனவே 'புவி'யை நாம் 'உயிர்க்கோளம்' என்றழைக்கிறோம்.

Earth

புவி அல்லது உயிர்க்கோளம் என்பது இயற்கையின் ஐந்து அடிப்படைக் கூறுகளான நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் (வானம்) ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.

Nature Elements
Five Elements

தமிழ்நாட்டின் நில அமைப்பு

சங்க காலத்தில், தமிழ்நாட்டின் நிலப்பகுதி மக்கள் செய்த தொழிலின் அடிப்படையில் ஐவகை நில அமைப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

ஐவகை நிலங்களுள் நான்கு வகைகள் மட்டும் நிலையாக இருந்தது அவை குறிஞ்சி, முல்லை, மருதம் மற்றும் நெய்தல் ஆகும். குறிஞ்சியும் முல்லையும் வறண்ட பின் உருவாகும் நிலமே பாலை ஆகும்.

அ. மலைகள் (குறிஞ்சி நிலம்)

மலை என்பது நம்மைச் சுற்றியுள்ள நிலப்பரப்புகளைவிட உயரமான சிகரங்களைக் கொண்ட ஒரு புவியியல் அமைப்பு ஆகும்.

மலையும் மலைசார்ந்த இடமும் 'குறிஞ்சி' என அழைக்கப்படுகிறது.

Kurinji Land

1. கருப்பொருள்

கருப்பொருள் என்பது கடவுள், மக்கள், தொழில், மரம், மலர், விலங்கு, பறவை மற்றும் இசைக் கருவி ஆகியவற்றைக் குறிப்பதாகும்.

Kurinji Theme
  • கடவுள் - முருகன்
  • மக்கள் - குறவர், குறத்தியர்
  • தொழில் - வேட்டையாடுதல், தேன் மற்றும் கிழங்கு சேகரித்தல்
  • மரம்/ மலர் - மூங்கில், வேங்கை/ குறிஞ்சி மலர்
  • விலங்கு/பறவை - குரங்கு, மான் / மயில், கிளி
  • இசைக் கருவி - குறிஞ்சி யாழ்
Kurinji Features

2. மக்களும் அவர்தம் தொழில்களும்

  • பொருப்பன் - வீரர்கள்
  • வெற்பன் - இனத் தலைவன், ஆயுதம் ஏந்தியவர்.
  • சிலம்பன் - வீரதீரக்கலையில் வல்லவர்.
  • குறவர் - வேட்டையாடுபவர், உணவு சேகரிப்பவர்
  • கானவர் - காடுகளில் வாழ்பவர்.

3. குறிஞ்சி நில மண்

கருப்பு மற்றும் சிவப்பு நிறமுடைய பாறைகளையும் கூழாங்கற்களையும் உள்ளடக்கியது ஆகும்.

உங்களுக்குத் தெரியுமா?

தமிழ்நாட்டில் உள்ள சில முக்கிய மலைகள்:
கொல்லி மலை, சேர்வராயன் மலை, கல்ராயன் மலை, நீலகிரி மலை, ஜவ்வாது மலை, ஏலகிரி மலை.

அதிசய மலர்- குறிஞ்சி

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் மலர் குறிஞ்சி ஆகும். இது மேற்குத் தொடர்ச்சி மலையில் நன்கு வளர்கிறது. ஜூலை - செப்டம்பர் மாதங்களில் இது பூக்கும். இம்மலர் மருத்துவ குணம் கொண்டதாகும்.

Kurinji Flower

ஆ. காடுகள் (முல்லை நிலம்)

அடர்ந்தீ மரங்களைக் கொண்ட பெரும், நிலப்பகுதிகள் காடுகள் என்று அழைக்கப்படுகிறது. காடுகள் நிறைந்த பகுதியை 'முல்லை நிலம்' என அழைப்பர். இப்பகுதி செம்மண்ணைக் கொண்டிருப்பதால் 'செம்புலம்' எனவும் அழைக்கப்படுகிறது.

Mullai Land

அ) கருப்பொருள்

Mullai Theme
  • கடவுள் - திருமால்
  • மக்கள் - இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்
  • தொழில் - கால்நடை மேய்த்தல். பழங்கள் சேகரித்தல், தினைப்பயிர் வளர்த்தல்
  • மரம்/மலர் - கொய்யா/ முல்லை மலர்
  • விலங்கு/பறவை - கரடி, முயல்/ கிளி
  • இசைக் கருவி - முல்லை யாழ்
Mullai Features

2. மக்களும் அவர்தம் தொழில்களும்

  • இடையர் - பால் விற்பவர்
  • ஆயர் - கால்நடை மேய்ப்பவர்

3. முல்லை நில மண்

கற்கள் மற்றும் கூழாங்கற்களைக் கொண்டு செம்மண்

4. தமிழ்நாட்டின் காடுகள்

  • சதுப்புநிலக் காடுகள் - பிச்சாவரம், கடலூர் மாவட்டம்
  • மலைக்காடுகள் - நீலகிரி மாவட்டம்
  • காப்புக்காடு - கன்னியாகுமரி மாவட்டம்
  • ஈரக்காடுகள் - கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்கள்

தெரிந்து கொள்ளலாமா?

உற்பத்திப் பொருட்கள் - பயன்படும் மரங்கள்

  • தாள் (காகிதம்) - மூங்கில், தைல மரம், குடைவேல்
  • தீக்குச்சிகள் - அயிலை, முள் இலவு
  • நறுமணப் பொருட்கள் - சந்தன மரம்
  • தைலம், சோப்பு - ஐவகை நில அமைப்பு

புகழ் பெற்ற பிச்சாவரம் காடுகள்

தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், சிதம்பரத்திற்கு அருகில் பிச்சாவரம் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள சதுப்பு நிலக்காடுகள் (அலையாத்தி காடுகள்) இந்தியாவிலேயே இரண்டாவது மிகப் பெரியதாகும். இது சிறு தாவரங்களையும் நீர் விலங்குகளையும் ஈரமான வெப்பநிலையையும் கொண்டுள்ளது.

Pichavaram Forest

இ. வயல்கள் (மருத நிலம்)

பரந்த, சமமான நிலப்பரப்பு சமவெளி எனப்படுகிறது. வயலும் வயல் சார்ந்த பகுதிகளும் 'மருதம்' என அழைக்கப்படுகிறது.

Marutham Land

1. கருப்பொருள்கள்

Marutham Theme
  • கடவுள் - இந்திரன் (வேந்தன்)
  • மக்கள் - உழவர், உழத்தியர்
  • தொழில் - உழவுத் தொழில்
  • மரம்/ மலர் - காஞ்சி, மருதம்/ தாமரை, குவளை
  • விலங்கு/ பறவை - எருமை/ நாரை
  • இசைக்கருவி - மருத யாழ்
Marutham Features

2. மக்களும் அவர்தம் தொழில்களும்

  • ஊரன் – சிறு நிலக்கிறார்
  • உழவர் – உழவுத் தொழில் செய்பவர்
  • கடையர் - வணிகர்

3. மருத நில மண்

வளமான வண்டல் மண் மற்றும் செம்மண்ணைக் கொண்டுள்ளது.

வியக்கத்தக்க உண்மை

கல்லணை ஒரு பழமையான நீர்த்தேக்கம் ஆகும். இது தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 1,080 அடி, அகலம் 66 அடி மற்றும் உயரம் 18 அடி ஆகும். பழங்காலத்திலேயே நீரைத் திருப்பி கால்வாய் பாசன வசதி செய்வதில், இந்த நீர்த்தேக்கம் உலகளவில் நான்காம் இடம் பெற்றுள்ளது

Kallanai Dam

ஈ. கடல் / கடற்பகுதிகள் (நெய்தல் நிலம்)

புவியின் பெரும் நிலப்பரப்பில் பரவியிருக்கும் உப்பு நீர்த்தொகுதி 'கடல்' எனப்படும்.

கடலும் கடல் சார்ந்த பகுதியும் 'நெய்தல்' என அழைக்கப்படுகிறது.

Neithal Land

1. கருப்பொருள்

Neithal Theme
  • கடவுள் - வருணன் (மழைக்கடவுள்)
  • மக்கள் - பரதவர் (மீனவர்)
  • தொழில் - மீன் பிடித்தல்
  • மரம் / மலர் - புன்னை / செங்காந்தள்
  • விலங்கு /பறவை - மீன்/ கடற்காகம்
  • இசைக் கருவி - விளரி யாழ்
Neithal Features

2. மக்களும் அவர்தம் தொழில்களும்

  • சேர்ப்பன் - கடல் உணவு வணிகர்
  • புலம்பன் - தென்னைத் தொழில் செய்பவர்
  • பரதவர் - கடற்போர் வீரர், வணிகர்
  • நுளையர் - மீன் தொழில் செய்பவர்
  • அளவர் - உப்பளத் தொழில் செய்பவர்

3. நெய்தல் நில மண்

நெய்தல் நிலம் உவர் மண்ணால் ஆனது.

அறிந்த இடம், அறியாத உண்மை

தமிழகத்தின் சென்னை நகரில் அமைந்துள்ள இயற்கையான கடற்கரை மெரினா கடற்கரை ஆகும். உலகின் மிக நீளமான இரண்டாவது கடற்கரை இதுவாகும். இது இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் வங்காள விரிகுடாவை ஒட்டி, வட கடற்கரையில் வங்காளி ஜார்ஜ் கோட்டை முதல் தெற்கே பட்டினப்பாக்கம் வரை இதன் நீளம் 13 கி.மீ ஆகும். (அமெரிக்க நாட்டின் புளோரிடாவில் உள்ள மியாமி கடற்கரை உலகிலேயே மிக நீளமான கடற்கரை ஆகும்.)

Marina Beach

உ. வறண்ட நிலங்கள் (பாலை நிலம்)

குறைவான மழை அல்லது மழை எதனையும் காணாத நிலப்பகுதி வறண்ட 'நிலம்' எனப்படுகிறது.

வறட்சியை நோக்கிச் செல்லும் மணற்பாங்கான நிலம் 'பாலை நிலம்' எனப்படும். குறிஞ்சியும் முல்லையும் வறண்டு விடும்போது பாலையாக மாறுகிறது.

Palai Land

1. கருப்பொருள்

Palai Theme
  • கடவுள் - கொற்றவை (பெண் கடவுள்)
  • மக்கள் - எயினர், எயிற்றியர்
  • தொழில் - ஆநிரை கவர்தல்
  • மரம் / மலர் - உழிஞை, பாலை / கள்ளி, இலுப்பை
  • விலங்கு /பறவை - புலி, யானை / கழுகு
  • இசைக் கருவி - பாலை யாழ்
Palai Features

2. மக்களும் அவர்தம் தொழில்களும்

  • மறவர் - மாபெரும் போர்வீரர், வேட்டையாடுபவர்.
  • எயினர் - வீரர்.

3. பாலை நில மண்

மணலும் உவர் மண்ணும் உள்ள பகுதி பாலை ஆகும்.

செயல்பாடு

  • ஆசிரியரின் உதவியுடன், அருகில் உள்ள மலைப்பகுதிக்குச் சென்று அங்குள்ள மூலிகைகளையும் அவற்றின் பயன்பாடுகளையும் அறிந்து கொள்.
  • "மரங்கள் நம் நண்பர்கள்" ஏற்றுக் கொள்கிறாயா? உன் குழுவினருடன் விவாதி.
Activity