4th Standard Social Science Term 2 Unit 2 - Physical Features of Tamil Nadu Lesson

4th Social Science Term 2 Unit 2 - Physical Features of Tamil Nadu

பருவம் 2 அலகு 2 | 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு | 4th Social Science : Term 2 Unit 2 : Physical Features of Tamil Nadu

4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 2 : அலகு 2 : தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு

தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு

கற்றல் நோக்கங்கள்

(i) தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பைப் பற்றி புரிந்து கொள்ளுதல்.
(ii) மலை, பீடபூமி, சமவெளி மற்றும் கடற்கரைப் பகுதிகளைக் கண்டறிதல்.
(iii) மலை பீடபூமி, சமவெளி மற்றும் கடற்கரைப் பகுதி அமைப்புகளை விவரித்தல்.
(iv) தமிழ்நாட்டில் உள்ள காடுகளின் வகை க ளை விவரித்தல்.

அலகு 2: தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு

Unit Header

நமது மாநிலம்

தமிழ்நாடு இந்தியாவின் தென்பகுதியில் உள்ளது. இந்தியாவிலேயே பதினோராவது மிகப்பெரிய மாநிலம் இதுவாகும். இது,

Tamil Nadu Map
(i) வடக்கில் ஆந்திரப் பிரதேசத்தையும்
(ii) வடமேற்கில் கர்நாடகா மாநிலத்தையும்
(iii) தெற்கில் இந்தியப் பெருங்கடலையும்
(iv) மேற்கில் கேரளாவையும்
(v) கிழக்கில் வங்காள விரிகுடாவையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

இம்மாநிலம் இந்தியாவின் தென்முனையான கன்னியாகுமரி வரை விரிவடைந்துள்ளது. கன்னியாகுமரி, வங்காள விரிகுடாவும் இந்தியப் பெருங்கடலும் அரபிக்கடலும் சந்திக்கும் இடமாகும். தமிழ்நாட்டின் வடஎல்லையில் பழவேற்காடு ஏரி அமைந்துள்ளது.

தமிழ்நாடு 32 மாவட்டங்கள் இருந்தன. சமீபத்தில் தமிழக அரசு நிர்வாக கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி என மேலும் மூன்று மாவட்டங்களை பிரித்து அறிவித்துள்ளது. தற்போது (2019) 35 மாவட்டங்கள் உள்ளன.

செயல்பாடு:

(i) இந்திய அரசியல் வரைபடத்தில் தமிழ்நாட்டின் ஏதாவது இரண்டு அண்டை மாநிலங்களைக் குறிக்கவும்.
(ii) கீழே குறிப்பிட்டுள்ளவற்றை வரைபடத்தில் குறிக்கவும்.

ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா மற்றும் ஓடிசா ஆகியவற்றை உள்ளடக்கிய சென்னை மாகாணம், மதராஸ் என்று அழைக்கப்பட்டது. 1953இல் தெலுங்குமொழி பேசும் பகுதி ஆந்திரப் பிரதேசமாக உருவானது. அதேபோல், 1956இல் மலையாளம் மற்றும் கன்னட மொழிகள் பேசப்படும் பகுதிகள் முறையே கேரளா மற்றும் மைசூர் என பிரிக்கப்பட்டன.

தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு

தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

1) மலைகள்
2) பீடபூமிகள்
3) சமவெளிகள்
4) கடற்கரை

1. மலைகள் (Mountains)

மேற்குத்தொடர்ச்சிமலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளைக் கொண்ட ஒரே இந்திய மாநிலம் தமிழ்நாடு ஆகும். அவை தமிழகத்திலுள்ள நீலகிரி மலைத்தொடரில் சந்திக்கின்றன. நீலகிரி மலைத்தொடரின் மிகப்பெரிய சிகரம் தொட்டபெட்டா ஆகும் தமிழகத்தில் உதகமண்டலம் கொடைக்கானல், கொல்லிமலை, கோத்தகிரி மற்றும் ஏற்காடு எனப் பல மலைவாழிடங்கள் உள்ளன.

Mountains of TN

மேற்தக் தொடர்ச்சி மலைகளைப் போன்று கிழக்குத் தொடர்ச்சி மலைகள் போதிய மழைப்பொழிவைப் பெறுவதில்லை. ஆம்மலைத் தொடர்களில் தேயிலை, காபி மற்றும் வாசனைப்பொருள்கள் பயிரிடப்படுகின்றன.

தமிழ்நாட்டில் தாவர இனங்களும் விலங்கினங்களும் (Flora and Fauna) அதிக அளவில் காணப்படுகின்றன. இம்மாநிலத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் முதுமலை வனவிலங்குச் சரணாலயம், இந்திராகாந்தி வனவிலங்குச் சரணாலயம் மற்றும் ஆனைமலை தேசிய பூங்கா ஆகியவை அமைந்துள்ளன. அவற்றில் பல வகையான தாவர வகைகள் காணப்படுகின்றன. குறிஞ்சி என்னும் புதர்ச்செடி, அவற்றுள் சிறப்பு வாய்ந்தது ஆகும். குறிஞ்சி மலர்கள் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே மலரும்.

விடையளிக்க முயற்சி செய்க:

(i) மேற்குத் தொடர்ச்சி மலைகளும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் சந்திக்கும் இடம் எது?
(ii) தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள ஏதேனும் ரெண்டு வனவிலங்கு சரணாலயங்களின் பெயர்களைக் கூறுக.

2. பீட பூமிகள் (Plateaus)

பாராமஹால் பீடபூமி, கோயம்புத்தூர் பீடபூமி மற்றும் மதுரை பீடபூமி எனத் தமிழ்நாட்டில் மூன்று பீடபூமிகள் உள்ளன. இப்பீடபூமிகளுக்கு இடையே அதிக அளவில் சிறிய மலைக்குன்றுகள் உள்ளன. ஈரோட்டில் உள்ள சென்னிமலை இவற்றில் ஒன்றாகும்.

Plateaus of TN

3. சமவெளிகள் (Plains)

தமிழ்நாட்டில் உள்ள சமவெளிப் பகுதிகளை ஆற்றுச் சமவெளிகள் மற்றும் கடற்கரைச் சமவெளிகள் என்று பிரிக்கலாம்.

அ) ஆற்றுச் சமவெளிகள் (River Plains)

பாலாறு செய்யாறு பெண்ணை மற்றும் வெள்ளாறு ஆகிய ஆறுகள் சேர்ந்து வடக்குச் சமவெளிகளை உருவாக்குகின்றன. மத்திய ஆற்றுச் சமவெளிகள் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளால் உருவாக்கப்படுகின்றன. வைகை ஆறு மற்றும் தாமிரபரணி ஆறு தெற்குச் சமவெளிகளை உருவாக்குகின்றன.

செய்யாறு என்பது பாலாற்றின் ஒரு கிளை ஆறு ஆகும். பருவகால ஆறான இது, திருவண்ணாமலை மாவட்டத்தில் பாய்கிறது.

ஆ) கடற்கரைச் சமவெளிகள் (Coastal Plains)

சென்னை முதல் கன்னியாகுமரி வரை விரிந்துள்ள தமிழக கடற்கரைச் சமவெளிகள், சோழமண்டல கடற்கரைச் சமவெளிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

4. கடற்கரைகள் (Coasts)

இந்தியாவிலேயே மூன்றாவது நீளமான கடற்கரைப் பகுதியை தமிழகம் கொண்டுள்ளது. இக்கடற்கரைப் பகுதி சென்னையிலிருந்து கன்னியாகுமரி நீண்டுள்ளது. இராமநாதபுரத்தின் ஒரு பகுதியாக இருக்கும் பாம்பன்தீவு, மன்னார் வளைகுடாவையும், பாக் நீர்சந்தியையும் பிரிக்கிறது. தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளில் 13 மாவட்டங்கள் அமைந்துள்ளன.

Coastal TN

தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க சில கடற்கரைகள்:

(i) மெரினா கடற்கரை உலகிலேயே இரண்டாவது மிக நீளமான நகர்புறக் கடற்கரை ஆகும்.
(ii) ராமேஸ்வரம் கடற்கரை அதன் அழகிற்குப் பெயர் பெற்றது.
(iii) கன்னியாகுமரி கடற்கரை கடல்நீருக்கு மேலே அழகாகத் தெரியும் சூரிய உதயத்திற்கும் சூரிய மறைவுக்கும் பெயர் பெற்றது.

இந்தியாவின் முதல் கடற்பாலம் இராமேஸ்வரத்திலுள்ள பாம்பன் பாலம் ஆகும். இது 1914-ல் திறக்கப்பட்டது.

Pamban Bridge

தமிழ்நாட்டின் வரைபடத்தில், எவையேனும் மூன்று கடற்கரை மாவட்டங்களைக் குறியிட்டுக் காட்டுக.

உங்களுக்குத் தெரியுமா?
தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியிலுள்ள மலைக்கோட்டை மிகவும் புகழ்பெற்ற செங்குத்தான பாறை (Droog) ஆகும்.

தமிழ்நாட்டின் அருவிகள்

மலையிலிருந்து ஆற்றுநீர் செங்குத்தாகக் கீழே விழுவதை 'அருவி' என்பர். தமிழ்நாட்டில் பல அருவிகள் உள்ளன. அவற்றில் சில:

(i) ஒகேனக்கல் அருவி: தருமபுரி மாவட்டத்தில் காவிரியாற்றின் மீது அமைந்துள்ளது. குளிக்கும் இடங்கள், படகுசவாரிகள் போன்றவற்றிற்கு இவ்விடம் பெயர் பெற்றது. இந்த அருவியானது, பல சுற்றுலாப் பயணிகளை ஆண்டு முழுவதும் கவர்கின்றது.
Hogenakkal
(ii) குற்றாலம் அருவி: தென்காசியிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் பாயும் சிற்றாற்றின் மீது அமைந்துள்ளது. இதில் மொத்தம் ஒன்பது அருவிகள் உள்ளன. அவற்றில் பேரருவி, ஐந்தருவி, புலியருவி ஆகியவை புகழ்பெற்றவையாகும்.
(iii) சுருளி அருவி: தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது. அந்த அருவி தொடர்ச்சியாக உள்ள பாறைகளின் மீது விழும்.
(iv) வட்டப்பாறை அருவி: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது. இதன் அனைத்துப் பகுதிகளும் காடுகளால் சூழப்பட்டுள்ளன.

விடையளிக்க முயற்சி செய்க:

(i) தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான ஆறுகள் சிலவற்றின் பெயர்களைக் கூறுக.
(ii) குற்றாலம் அருவி எங்கு அமைந்துள்ளது?

தமிழ்நாட்டின் காலநிலை

தமிழ்நாடு வெப்ப மண்டலக் காலநிலையைக் கொண்டிருப்பதால், இங்கு கோடைகாலத்திற்கும் குளிர்காலத்திற்கும் மிகவும் குறைந்த அளவிலேயே வேறுபாடு காணப்படுகிறது. கோடைகாலத்தில் வெப்பநிலை 40° செல்சியஸ் வரை அதிகரிக்கும். தமிழ்நாடு அதன் இட அமைவினை அடிப்படையாகக் கொண்டு, ஆண்டு முழுவதும் மிதமான குளிருடன் வெப்ப மற்றும் ஈரப்பதமான வானிலையை கொண்டிருக்கிறது. தமிழ்நாடு பருவமழையைச் சார்ந்துள்ளது என்பதால், பருவமழை பொய்க்கும் காலங்களில் வறட்சியை எதிர்கொள்கிறது.

தமிழ்நாட்டின் பருவகாலங்கள்:

1) குளிர்காலம் (ஜனவரி - பிப்ரவரி)
2) கோடைகாலம் (மார்ச் - மே)
3) தென்மேற்கு பருவக்காற்று (ஜூன் - செப்டம்பர்)
4) வடகிழக்கு பருவக்காற்று (அக்டோபர் – டிசம்பர்)

விடையளிக்க முயற்சி செய்க:

(i) தமிழ்நாடு எந்தெந்த மாதங்களில் தென்மேற்கு பருவமழையைப் பெறுகிறது?
(ii) தமிழ்நாட்டின் வானிலை பற்றி ஒரு வரியில் விடை கூறுக.
உங்களுக்குத் தெரியுமா?
2003 ஆம் ஆண்டு மே மாதத்தில் மிக அதிக அளவு வெப்பமாக 48.6°C திருத்தணியில் பதிவு செய்யப்பட்டது. (ஆதாரம்- இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் (IMD))

காடுகள்

தமிழ்நாடு முழுவதும் பலவகையான காடுகள் உள்ளன. பெரும்பாலான காடுகள் மலைத் தொடர்களை ஒட்டியே அமைந்துள்ளன. இந்தக் காடுகளில் பல வகையான மரங்கள் உள்ளன. மரங்களின் உச்சிகளில் கிளைகள் ஒன்றையொன்று பின்னி ஒரு சங்கிலி போல உருவாகி நிலத்தில் சூரிய ஒளியே படாதவாறு இருப்பதற்கு விதானம் என்று பெயர். இதன் அடிப்படையில் காடுகள் கீழ்க்காணுமாறு பிரிக்கப்படுகின்றன.

Forest Canopy
Forest Scene

இக்காடுகள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன:

அ) பசுமை மாறாக் காடுகள் (Evergreen forests)

"Ever green" என்ற வார்த்தையின் பொருள் ever (எப்பொழுதும்) + green (பசுமை) = always green (எப்பொழுதும் பசுமையானது) என்பதாகும். இந்தக் காடுகளில் உள்ள மரங்களின் இலைகள் எப்பொழுதும் பசுமையாகவே இருக்கும். தமிழ்நாட்டிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டக்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் இவ்வகைக் காடுகளை நாம் காணலாம்.

ஆ) இலையுதிர்க் காடுகள் (Deciduous Forests)

இந்தக் காடுகளிலுள்ள மரங்களின் இலைகள் வறட்சிக் காலங்களில் உதிர்ந்து விடும். இவ்வகைக்காடுகள் பொதுவாக பசுமை மாறாக் காடுகளின் அருகில் காணப்படுகின்றன. அவை பெரும்பாலும் மலைகளின் கீழ்ப்பகுதிகளில் வளர்கின்றன.

Deciduous Forest

இ) அலையாத்திக் காடுகள் (Tidal Forests)

அலையாத்திக் காடுகளை சதுப்பு நில காடுகள் என்றும் அழைப்பர். சதுப்பு என்ற வார்த்தைக்கு எளிதாக நீர் வடியும் தாழ்வான நிலப்பகுதி என்பது பொருள். இவ்வகைக் காடுகள் கடற்கரைப் பகுதிகள் மற்றும் ஆற்றுப்படுகைகளின் அருகில் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் சிதம்பரத்திற்கு அருகேயுள்ள பிச்சாவரத்தில் அலையாத்திக் காடுகள் அமைந்துள்ளன.

Mangroves

சொற்களஞ்சியம்

(i) மலைத்தொடர் - தொடர்ச்சியான மலைகள்
(ii) வறட்சி - குறைந்த மழைப்பொழிவு கொண்ட நிலை
(iii) வானிலை -வளிமண்டலத்தின் அன்றாட நிலை.
(iv) காலநிலை - ஓர் இடத்தின் நீண்ட கால சராசரி வானிலை.

நினைவு கூர்க

(i) தமிழ்நாடு இந்தியாவின் தென்பகுதியில் உள்ளது.
(ii) தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு மலைகள், பீடபூமிகள், சமவெளிகள் மற்றும் கடற்கரை என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது.
(iii) ஆறுகளை ஒட்டிய பகுதிகளில் வளமான சமவெளிகள் காணப்படும்.
(iv) தமிழ்நாட்டின் கடற்கரைப்பகுதி 13 மாவட்டங்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு வெப்ப மண்டலக் காலநிலையைக் கொண்டுள்ளது.
(v) காடுகள் பசுமை மாறாகக் காடுகள், இலையுதிர்க் காடுகள் மற்றும் அலையாத்திக் காடுகள் என்று வகைப்படுத்தப்படுகின்றன.
Tags : Term 2 Chapter 2 | 4th Social Science பருவம் 2 அலகு 2 | 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல். 4th Social Science : Term 2 Unit 2 : Physical Features of Tamil Nadu : Physical Features of Tamil Nadu Term 2 Chapter 2 | 4th Social Science in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 2 : அலகு 2 : தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு : தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு - பருவம் 2 அலகு 2 | 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.