4th Standard Social Science Term 3 Unit 2: The Story of Madras Presidency (Tamil Medium)

4th Social Science : Term 3 Unit 2 : The Story of Madras Presidency
பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - சென்னை மாகாணத்தின் வரலாறு | 4th Social Science : Term 3 Unit 2 : The Story of Madras Presidency

4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 3 : அலகு 2 : சென்னை மாகாணத்தின் வரலாறு

சென்னை மாகாணத்தின் வரலாறு

மாணவர்கள் கீழ்க்காண்பனவற்றோடு அறிமுகமாதல்

(i) மதராஸ்(சென்னை) மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்த இன்றைய மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களைப் பட்டியலிடுதல் (ii) மதராஸ் மாகாணத்தின் வரலாற்றை விவரித்தல் (iii) மதராஸ் மாகாணத்தின் மாவட்டங்களை அறிதல் (iv) தமிழ்நாட்டின் சுற்றுலா தலங்களின் பெயர்களைக் கூறுதல்

அலகு 2

சென்னை மாகாணத்தின் வரலாறு

சென்னை மாகாணத்தின் வரலாறு

மதராஸ் மாகாணம் 1801இல் உருவாக்கப்பட்டது. இது பிரிட்டிஷ் இந்தியாவின் முக்கியமான ஒரு நிர்வாகப் பிரிவு ஆகும். இது மதராஸ் பிராவின்ஸ் என்றும் அழைக்கப்பட்டது. மேலும் இது, புனித ஜார்ஜ் கோட்டையின் மாகாணமாகவும் அதிகாரப்பூர்வமாக அறியப்பட்டது. தென்னிந்தியாவின் பகுதிகளான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசாவின் சில பகுதிகள் மற்றும் யூனியன் பிரதேசமான இலட்சத்தீவு ஆகியவை அதில் அடங்கும்.

Madras Presidency Map

தற்போது சென்னை என்று அழைக்கப்படும் மதராஸ் நகரம், அன்றைய மதராஸ் மாகாணத்தின் தலைநகரமாக இருந்தது. 1862ஆம் ஆண்டில், இம்மாகாணம் 22 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. பின்னர் அது 24 மாவட்டங்களாக மாற்றப்பட்டது. பின்னர் 1911இல், தமிழ்நாட்டில் உள்ள வட ஆற்காடு, தென் ஆற்காடு, செங்கல்பட், மதராஸ், சேலம், கோயம்புத்தூர், திரிசினோபோலி, தஞ்சாவூர், மதுரா, இராமநாதபுரம், தின்னேவேலி மற்றும் நீலகிரி உட்பட மொத்தம் 26 மாவட்டங்களை உள்ளடக்கியிருந்தது. இம்மாகாணம் 1947 வரை ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்தது.

உங்களுக்குத் தெரியுமா?
மதராஸ் மாகாணத்தின் முதல் பிரிட்டிஷ் ஆளுநர் எட்வர்ட் கிளைவ் மற்றும் கடைசி ஆளுநர் ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை ஆவர். Icon

147 ஆண்டுகளுக்குப் பிறகு, மதராஸ் மாகாணம் 1947ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் மதராஸ் மாநிலம் என மறுபெயரிடப்பட்டது.

1956ஆம் ஆண்டில், மதராஸ் மாநிலம் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. மேலும் அது மதராஸ், செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு, சேலம், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கோயம்புத்தூர், நீலகிரி, மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்களை உள்ளடக்கியிருந்தது. இது 1969இல் தமிழ்நாடு என அதிகாரப்பூர்வமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தமிழ் நாட்டின் நான்கு மண்டலங்களைப் பற்றி மேலும் விரிவாக இங்கு காணலாம்.

மண்டலம் I

சென்னை

அன்றைய மதராஸ் மாவட்டமானது சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய தற்போதைய மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது. 1639ஆம் ஆண்டு நாயக்கர்களிடமிருந்து ஒரு பகுதி நிலத்தை ஆங்கிலேயர்கள் வாங்கினர். பின்னர் அங்கு புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டி, அந்தப்பகுதிக்கு மதராசப்பட்டினம் என்று பெயரிட்டனர்.

St. George Fort

வரலாற்றுக்கு முந்தைய கற்கருவிகளுக்குப் பெயர் பெற்றவை குடியம் குகைகள் ஆகும். இது தென்னிந்தியாவில் அமைந்துள்ள ஒரு குகை வாழிடமாகும். ஏறக்குறைய இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் இங்கு வாழ்ந்துள்ளனர் என்பதற்குச் சான்றாக இக்குகை அமைந்துள்ளது.

Gudiyam Caves

பல பாறைச் சிற்பங்களை உடைய மாமல்லபுரம் இப்பகுதியினை பல்லவ வம்சத்தினரால் உருவாக்கப்பட்டது. யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது.

தொன்மையான சோழ கிராமமான உத்திரமேரூர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. உத்திரமேரூரில் கிடைத்துள்ள கல்வெட்டுகள் கிராமப்புற சுயாட்சியைப் பற்றி விரிவாக விளக்குகிறது.

வட ஆற்காடு

வட ஆற்காடு மாவட்டமானது தற்போதைய வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். வேலூர் கோட்டையானது 1566ஆம் ஆண்டில் சின்ன பொம்மி நாயக்கர் மற்றும் திம்மா ரெட்டி நாயக்கர் ஆகியோரால் கட்டப்பட்ட பழமையான கோட்டை ஆகும். வைணு பாப்பு ஆய்வகம் ஒரு வானியல் ஆய்வுக்கூடம் ஆகும். இது காவலூரில் அமைந்துள்ளது. இது ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆய்வகமாகும்.

Vellore Fort

தென் ஆற்காடு

இன்றைய விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் அன்றைய தென் ஆற்காடு மாவட்டத்தின் பகுதிகளாக இருந்தன. விழுப்புரம் மாவட்டத்தில், புதுச்சேரிக்கு அருகிலுள்ள ஒரு சோதனை நகரமே ஆரோவில் ஆகும். உலகம் முழுவதிலுமிருந்தும் இங்கு வருகை தரும் மக்கள், பண்பாட்டு ஒற்றுமையின் அடையாளமாகத் திகழ்கின்றனர்.

Auroville

செஞ்சிக்கோட்டை தமிழ்நாட்டிலுள்ள அழகான கோட்டைகளில் ஒன்றாகும். இக்கோட்டையானது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மூன்று குன்றுகள் சூழ்ந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் இக்கோட்டையினை "கிழக்கின் டிராய்" என்று அழைத்தனர்.

Gingee Fort

போர்டோ நோவோ என்று அழைக்கப்பட்ட பரங்கிப்பேட்டை, கடலூர் மாவட்டத்தில் உள்ளது. 1830இல் தொடங்கப்பட்ட, முதல் இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலை இங்கு அமைந்துள்ளது.

மண்டலம் II

சேலம்

அன்றைய சேலம் மாவட்டமானது, தற்போதைய சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களுடன் இணைந்து இருந்தது. சேலம் என்ற பெயர் சைலம்" (Sailam) என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் "மலைகளால் சூழப்பட்ட பகுதி" என்பதாகும்.

Mettur Dam

1934இல் காவிரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணையை ஸ்டான்லி நீர்த்தேக்கம் என்று அழைப்பர். ஒகேனக்கல் அருவியானது தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள அருவிகளில் ஒன்றாகும். இங்கு மூங்கில் பரிசலில் சவாரி செய்வது கூடுதல் ஈர்ப்பைத் தருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓசூர் ஒரு தொழிற்துறை நகரம் ஆகும்.

கோயம்புத்தூர்

பிரிட்டிஷ் ஆட்சியின்போது, இன்றைய மாவட்டங்களான கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி மற்றும் திண்டுக்கல்லின் ஒரு பகுதி ஆகியவை மாவட்டத்தின்கீழ் இருந்தன.

Anaimalai Wildlife Sanctuary

கோயம்புத்தூர் "தென்னிந்தியாவின் மான்செஸ்டர்" என அழைக்கப்படுகிறது. புகழ்பெற்ற ஆனைமலை வனவிலங்குச் சரணாலயம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தற்பொழுது இது இந்திராகாந்தி வனவிலங்குச் சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா என்றும் அழைக்கப்படுகின்றது. ஈரோடு மாவட்டமானது கைத்தறி, விசைத்தறி மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிப்பில் புகழ்பெற்று விளங்குகின்றது.

நீலகிரி

இயற்கை கொஞ்சும் அழகு மற்றும் இனிமையான காலநிலை போன்ற சிறப்பான காரணங்களால், ஐரோப்பியர்களைப் பெரிதும் கவர்ந்த இடமாக நீலகிரி மலை இருந்தது. தென்னிந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த சிகரமான தொட்டபெட்டா, நீலகிரியிலுள்ள மலைகளில் மிகப் பெரியதாகும்.

Ooty

தென்னிந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற மலைவாழிடமான உதகமண்டலம், "மலைகளின் ராணி" என்று அழைக்கப்படும் ஊட்டி ஆகும். மதராஸ் மாகாணத்தின் கோடைகாலத் தலைநகரமாக ஊட்டி இருந்தது. கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ஜான் சல்லிவன் ஊட்டியில் அழகான மலை வாழிடத்தை உருவாக்கியதற்காகப் புகழப்படுகிறார்.

மண்டலம் III

திருச்சிராப்பள்ளி

இன்றைய மாவட்டங்களான திருச்சிராப்பள்ளி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்கள் இணைந்து திரிசினோபோலி மாவட்டமாக இருந்தது. 83 மீட்டர் உயரமுள்ள பழமையான ஒரு பாறையின் மீது மலைக்கோட்டை கோயில் கட்டப்பட்டுள்ளது. அக்கோட்டையின் உள்ளே இரண்டு இந்து கோயில்கள் உள்ளன.

Rock Fort Trichy

ரஞ்சன்குடி கோட்டை பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோட்டை கர்நாடக நவாபினால் கட்டப்பட்டதாகும். கங்கைகொண்ட சோழபுரம் அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலை யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம், உலகப் புகழ்பெற்ற பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றாக அறிவித்துள்ளது. வரலாற்றுக்கு முந்தைய படிமங்களுக்கு அரியலூர் மாவட்டம் பெயர் பெற்றது.

தஞ்சாவூர்

அன்றைய தஞ்சாவூர் மாவட்டமானது தஞ்சாவூர்,நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய தற்போதைய மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது.

Thanjavur Temple

டெல்டா பகுதியாக அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டமானது "தமிழ்நாட்டின் அரிசி கிண்ணம்" என அழைக்கப்படுகிறது. மன்னர் சரபோஜியால் கட்டப்பட்ட, எட்டு அடுக்குகளைக் கொண்ட சிறிய அளவிலான மனோরা கோட்டையானது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தென்னிந்தியாவில் காவிரியாற்றின் குறுக்கே அமைந்துள்ள கல்லணை கி.பி.(பொ.ஆ.) 2ஆம் நூற்றாண்டில் சோழ மன்னர் கரிகாலனால் கட்டப்பட்டது. பிரகதீஸ்வரர் கோயில் அனைவராலும் "தஞ்சை பெரிய கோயில்" என்று அழைக்கப்படுகின்றது.

மண்டலம் IV

மதுரை

முந்தைய மதுரா மாவட்டமானது மதுரை, இராமநாதபுரம், தேனி மேலும் விருதுநகர், சிவகங்கை மற்றும் திண்டுக்கல் ஆகியவற்றின் சில பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது.

Thirumalai Nayakkar Palace

மதுரை மாவட்டத்தில் திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட திருமலை நாயக்கர் அரண்மனை அமைந்துள்ளது. இது திராவிட மற்றும் இஸ்லாமிய கட்டடக்கலைகளின் ஒருமித்த கலவையாகும்.

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள போடிநாயக்கனூர் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இது "ஏலக்காய் நகரம்" என்றும் அழைக்கப்படுகின்றது.

கீழடி பகுதியானது சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் தொல்லியல் துறை அறிக்கையின்படி, இது சங்க காலத்தில் நகர்ப்புற குடியேற்றப்பகுதியாக இருந்தது என்பதை அறியலாம். இந்தக் கலாச்சார கண்டுபிடிப்பு கி.மு.(பொ.ஆ.மு.) 6ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகும்.

திருநெல்வேலி

முந்தைய தின்னேவேலி மாவட்டமானது திருநெல்வேலி,கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் விருதுநகரின் ஒரு பகுதியோடு இணைந்த தற்போதைய மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது. திருநெல்வேலி தாமிரபரணி நதிக் கரையின்மீது அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள குற்றாலம், "தென்னிந்தியாவின் ஸ்பா" (ஆரோக்கிய நீரூற்று) என்று அழைக்கப்படுகிறது.

Courtallam Waterfalls

கட்டபொம்மன் நினைவு கோட்டை தமிழக அரசால் கட்டப்பட்டது. இது தூத்துக்குடியிலிருந்து 21 கி.மீ தூரத்தில் உள்ள பாஞ்சாலங்குறிச்சியில் அமைந்துள்ளது. முத்துக் குளித்தல் என்பது தூத்துக்குடியில் முதன்மையான தொழிலாக இருப்பதால், இந்நகரம் முத்து நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.

தமிழகம் புகழ்பெற்ற பல சிற்பங்கள், ஓவியங்கள், சுவரோவியங்கள், அலங்காரச் சுவர்கள் மற்றும் தூண்களைக் கொண்டுள்ளது. மேலும், மாபெரும் கோயில் கோபுரங்கள் தமிழக மன்னர்களால் கட்டப்பட்டுள்ளன. இவை தமிழகத்தின் கலை மற்றும் பண்பாட்டைப் பாதுகாப்பதுடன், உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கின்றது.

உங்களுக்குத் தெரியுமா?
2019ஆம் ஆண்டில் தமிழக அரசு கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களைப் புதிதாக உருவாக்கியுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தில் இந்த மாவட்டங்களின் எல்லைகள் வரையறுக்கப்படவில்லை. TN Map

குறிப்பு

மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை, ஆசிரியர்களின் குறிப்புக்கு மட்டுமே. பள்ளி அமைந்துள்ள மாவட்டத்தின் சுற்றுலா இடங்கள் மற்றும் முக்கிய தொழில்களைப் பற்றி மாணவர்களுக்குக் கற்பிப்பதற்காகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

செயல்பாடு
தமிழ்நாடு வரைபடத்தில், உங்கள் சொந்த மாவட்டத்தை வண்ணமயமாக்கி, அதன் அண்டை மாவட்டங்களைக் குறிக்கவும். Activity Map
(i) மதராஸ், செங்கல்பட், வட ஆற்காடு, தென் ஆற்காடு, சேலம், திரிசினோபோலி, தஞ்சாவூர், இராமநாதபுரம், தின்னேவேலி, மதுரா, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்கள் தற்போதைய தமிழ்நாட்டில் உள்ளன. (ii) மலபார் மாவட்டம் தற்போதைய கேரள மாநிலத்திற்கு உட்பட்டதாகும். (iii) சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூரின் ஒரு பகுதி, குண்டூர், கர்னூல், கிஸ்ட்னா, கிழக்கு கோதிவரி, மேற்கு கோதிவரி மற்றும் விசாகப்பட்டணம் ஆகியவை தற்போதைய ஆந்திராவில் உள்ள பகுதிகளாகும். (iv) கஞ்சம் மாவட்டம் தற்போதைய ஒடிசாவில் உள்ளது. (v) பெல்லாரி மாவட்டம், தென் கனரா மற்றும் அனந்தபூரின் ஒரு பகுதி ஆகியவை தற்போதைய கர்நாடகாவில் இணைக்கப்பட்டுள்ளன.
1. மாகாணம் - நிர்வாகப் பிரிவு
2. கல்வெட்டுகள் - உலோகம் அல்லது பாறையில் எழுதப்பட்டவை
3. வானியல் ஆய்வுக்கூடம் – பிரபஞ்சத்தைப் பற்றி அறிய விஞ்ஞானிகள் பயன்படுத்தும் பெரிய தொலைநோக்கி கொண்ட ஒரு கட்டிடம்.
4. டெல்டா பகுதி - பெரிய நதி, சிறிய பகுதிகளாகப் பிரிக்கின்ற ஒரு பகுதி (முக்கோணப் பகுதி).
5. பாரம்பரியச் சின்னம் - சிறப்பு நபர் அல்லது நிகழ்வைக் கௌரவிக்க கட்டப்பட்ட ஒரு கட்டமைப்பு.
6. சுவரோவியங்கள் - சுவரில் வரையப்பட்ட ஓர் ஓவியம்.
7. உலக பாரம்பரிய தளம் - சிறந்த பண்பாட்டு மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம்.
Tags : Term 3 Chapter 2 | 4th Social Science பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
4th Standard Tamil Medium School Samacheer Book Back Content.