5 ஆம் வகுப்பு அறிவியல் - நமது சுற்றுச்சூழல் | 5th Science : Term 3 Unit 1 : Our Environment
5 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 1 : நமது சுற்றுச்சூழல்
நமது சுற்றுச்சூழல்
(i) பண்ணைகளின் பல்வேறு வகைகளை அறிந்துகொள்ளல்.
(ii) கால்நடைப் பண்ணை மற்றும் பறவைப் பண்ணையின் முக்கியத்துவத்தைப் பட்டியலிடுதல்.
(iii) தேனீ வளர்ப்பு மற்றும் தேனின் பயன்களை அறிந்துகொள்ளல்.
(iv) இயற்கை உரங்களின் வகைகள் மற்றும் அவற்றின் பயன்களைப் புரிந்துகொள்ளல்.
(v) மண்புழு வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் பற்றி அறிதல்.
அறிமுகம்
நம்மைச் சுற்றியுள்ள அனைத்துமே சுற்றுச்சூழல் எனப்படும். சுற்றுச்சூழல் இரு வகைப்படும். அவை: இயற்பியல் சுற்றுச்சூழல் மற்றும் உயிரியல் சுற்றுச்சூழல். இயற்பியல் சுற்றுச்சூழலில் உயிரற்ற பொருள்களாகிய நிலம், நீர் மற்றும் காற்று ஆகியவை அடங்கும். உயிரியல் சுற்றுச்சூழலில் உயிருள்ள பொருள்களாகிய தாவரங்கள் மற்றும் விலங்குகள் அடங்கும். இயற்கையான சுற்றுச்சூழல் அதிக பொருளாதார நன்மைகளைக் கொண்டுள்ளது. நமது சுற்றுச் சூழலில் காணப்படும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் பல்வேறு வகைகளில் நமக்குப் பயன் தருகின்றன. ஆடு, பசு மற்றும் எருமை போன்றவை நமக்கு பால் தருகின்றன. இவை பெரும்பாலும் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன. இப்பாடத்தில் நாம் கால்நடைப் பண்ணைகள், பறவைப் பண்ணைகள், தேனீ வளர்ப்பு, இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் ஆகியவற்றைப் பற்றி கற்போம்.
I. பண்ணைகள்
பண்ணை வளர்ப்பு என்பது தாவரங்கள் மற்றும் விலங்குகளை வளர்க்கும் முறையாகும். இது விவசாயத்தின் ஒரு பகுதி. நிலத்தைப் பண்படுத்துதல் மற்றும் மனித வாழ்க்கைக்கு ஆதாரமளித்து அதனை மேம்படுத்தும் வகையில் உணவு இழைகள், மரக்கட்டை மற்றும் மருந்து ஆகியவற்றை வழங்குவதற்காக தாவரங்கள் மற்றும் விலங்குகளை வளர்த்தல் ஆகியவற்றையே விவசாயம் என்கிறோம். ஆனால், பண்ணை வளர்ப்பு வேளாண்மையைக் காட்டிலும் லாபகரமான ஒன்றாகும். எனவே, தற்காலங்களில் பண்ணை வளர்ப்பு வணிக ரீதியாக மேற்கொள்ளப்படுகின்றது. வணிக நோக்கில் பயிர்ச் சாகுபடி செய்வதற்காக அல்லது விலங்குகளை வளர்ப்பதற்காக அல்லது இரண்டிற்கும் பயன்படக்கூடிய, விளை நிலம் மற்றும் கட்டடங்களை உள்ளடக்கிய நிலப்பரப்பே பண்ணை ஆகும். பெரிய அளவிலான பண்ணைகளில் ஒரு குறிப்பிட்ட வகை விலங்குகள் அல்லது பயிர்கள் மட்டும் வளர்க்கப்படுகின்றன. ஆனால் சிறிய வகைப் பண்ணைகளில் பல்வேறு வகையான பயிர்கள் மற்றும் விலங்குகள் வளர்க்கப்படுகின்றன.
1. பால் பண்ணை
பால் பண்ணை என்பது ஒரு வகையான விவசாயம் ஆகும். பால் கரத்தல் மற்றும் பெறப்பட்ட பாலிலிருந்து வெண்ணெய், தயிர், பாலாடைக் கட்டி ஆகியவற்றை உற்பத்தி செய்தல் போன்றவை இதன் முக்கிய நோக்கம் ஆகும். வணிகரீதியான பால் பண்ணைகளில் அதிக அளவு பால் தரக்கூடிய பசுக்கள், காளைகள் மற்றும் எருதுகள் போன்ற விலங்குகள் வளர்க்கப்படுகின்றன. வெள்ளாடு, செம்மறி ஆடு மற்றும் ஒட்டகம் போன்ற விலங்குகளும் இங்கு வளர்க்கப்படுகின்றன.
கால்நடை இனங்கள்
இந்தியாவில் 26 வகையான கால்நடை இனங்கள் உள்ளன. பால் உற்பத்திக்காகவும், விவசாயப் பணி, போக்குவரத்து மற்றும் பிற பணிகளுக்காகவும் இவை வளர்க்கப்படுகின்றன. கிர், சகிவால், செவ்வறி சிந்தி, காங்கேயம் மற்றும் ஆன்கோல் ஆகியவை இந்தியாவில் காணப்படும் சிலவகை கால்நடை இனங்கள் ஆகும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் காணப்படும் கால்நடை இனங்கள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.
கால்நடை இனங்கள் | மாநிலங்கள்
- (i) கிர் - குஜராத், இராஜஸ்தான்
- (ii) சகிவால் - பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேசம்
- (iii) செவ்வறி சிந்தி - ஆந்திரப் பிரதேசம்
- (iv) மால்வி - இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம்
- (v) நாகாரி - அரியானா, உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம்
- (vi) காங்கேயம் - தமிழ்நாடு
- (vii) ஆன்கோல் - ஆந்திரப் பிரதேசம்
இவ்வகை விலங்குகள் தவிர எருமை மாடுகளும் இங்கு வளர்க்கப்படுகின்றன. இந்தியாவில் 7 வகை எருமை மாட்டினங்கள் காணப்படுகின்றன. எருமை மாடுகள் பசு மாடுகளைக் காட்டிலும் அதிக அளவில் பால் தரக்கூடியவை. எருமை மாட்டின் பால் பசு மாட்டின் பாலைவிட அதிக சத்துக்கள் நிறைந்தது. முர்ரா, ஜஃப்ராபாடி, பாதாவரி மற்றும் சுர்தி ஆகியவை இந்தியாவில் உள்ள எருமை மாடுகளின் வகைகளாகும். எருமை மாட்டுப் பால் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் முதலிடம் வகிக்கிறது.
எருமை மாட்டினங்கள் : மாநிலங்கள்
- (i) முர்ரா - பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேசம்
- (ii) பாதாவரி - உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம்
- (iii) ஜஃப்ராபாடி - குஜராத்
- (iv) சுர்தி - இராஜஸ்தான், குஜராத்
- (v) மெஹ்சனா - குஜராத்
- (vi) நாக்புரி - மத்திய மற்றும் தென் இந்தியா
- (vii) நிலி ரவி - பஞ்சாப், அரியானா
உணவூட்டம்
ஆரோக்கியமாக இருப்பதற்கும், நன்கு பால் கொடுப்பதற்கும் கால்நடைகளுக்கு சத்துள்ள உணவு தேவைப்படுகிறது. சக்கை மற்றும் சத்து செறிந்த உணவு ஆகியவையே கால்நடைகளுக்கேற்ற உணவு ஆகும். சக்கையில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. கால்நடைத்தீவனம், வைக்கோல், பதப்படுத்தப்பட்ட பசுந்தீவனம் ஆகியவை இவற்றுள் அடங்கும். சத்து செறிந்த உணவுகளுள் குருணை (உடைக்கப்பட்ட தானியம்) தானியங்கள், தினை, தவிடு, பருத்தி விதைகள் மற்றும் புண்ணாக்கு ஆகியவை அடங்கும். உணவைத்தவிர தூய்மையான குடிநீரும் கால்நடைகளுக்கு அவசியமாகும்.
நோய்கள்
பாதம் மற்றும் வாய் தொடர்பான நோய்கள் மற்றும் ஆந்த்ராக்ஸ் நோய் போன்றவை பொதுவாக கால்நடைகளில் காணப்படுகின்றன. இந்த நோய்கள் பரவாமல் தடுப்பதற்கு அவற்றின் இருப்பிடத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். ஏற்ற காலத்தில் தடுப்பூசிகள் போடுவதன் மூலம் பெரும்பாலான நோய்களைத் தடுக்கலாம். கால்நடைகளில் தோன்றும் நோய்கள், குறைபாடுகள் காயங்கள் ஆகியவற்றைத் தடுப்பது கண்டறிவது மற்றும் சிகிச்சை அளிப்பது ஆகியவை கால்நடை மருத்துவம் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
பயன்கள்
கால்நடைகள் பல வகைகளில் நமக்குப் பயனுள்ளதாக உள்ளன. அவற்றுள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- (i) பசு நமக்கு பால் தருகிறது. பசுவின் பாலில் நமக்குத் தேவையான தாது உப்புகள் உள்ளன.
- (ii) எருதுகள் நிலத்தை உழவும், அறுவடை செய்யவும், போர் அடிக்கவும் உதவுகின்றன.
- (iii) கால்நடைகள் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
- (iv) மாட்டுச் சாணம் ஒரு சிறந்த இயற்கை உரம், அது எரிபொருளாகவும், உயிரி வாயு தயாரிப்பதற்கும் பயன்படுகிறது.
- (v) பஞ்சகவ்யம் என்பது ஓர் ஆயுர்வேத மருந்தாகும். இது பூச்சிகளையும் பூஞ்சைகளையும் கட்டுப்படுத்துவதற்காக விவசாயத்தில் பயன்படுத்தப்படுகிறது. இது மாட்டின் சாணம் மற்றும் சிறுநீர், கறந்த பால், தயிர், வெல்லம் மற்றும் நெய் ஆகியவற்றின் கலவை ஆகும்.
- (vi) கால்நடைகளின் தோலிலிருந்து தோல் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.
2. பறவைப் பண்ணை
பறவைப் பண்ணையில் முட்டை மற்றும் இறைச்சிக்காக பறவை இனங்கள் வளர்க்கப்படுகின்றன. கோழி, வாத்து தாரா, வான்கோழி மற்றும் சிலவகை புறாக்கள் பொதுவாக இங்கு வளர்க்கப்படுகின்றன. இவற்றுள் 90% கோழிகளை அதிகம் வளர்க்கப்படுகின்றன. இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகள் இறைச்சிக் கோழிகள் (Broiler) எனவும், முட்டைக்காக வளர்க்கப்படும் கோழிகள் முட்டைக் கோழிகள் (Layer) எனவும் அழைக்கப்படுகின்றன. மனிதர்களுக்குத் தேவையான சரிவிகித உணவை அளிப்பதில் பறவைப்பண்ணைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இனங்கள்
நூற்றுக்கும் மேற்பட்ட கோழி இனங்கள் நம் நாட்டில் வளர்க்கப்படுகின்றன. பயன்பாட்டைப் பொறுத்து இவை பலவிதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவையாவன: இறைச்சிக் கோழிகள் (Broiler), முட்டைக் கோழிகள் (Layer) மற்றும் ரெண்டிற்கும் பயன்படுபவை. அசீல், சிட்டகாங், காகஸ், பஸ்ரா, பிரம்மா மற்றும் கொச்சின் கோழிகள் ஆகும். முதலியன நமது நாட்டில் வளர்க்கப்படும் சில கோழி இனங்கள் ஆகும். நாட்டுக் கோழிகள் அல்லது கிராமப்புறக் கோழிகள் முற்காலத்திலிருந்தே இந்தியாவில் வளர்க்கப்படுகின்றன.
(ii) வெள்ளை லெக்கான் கோழிகளே உலகிலேயே அதிக அளவில் முட்டை இடும் கோழிகள் ஆகும்.
உணவூட்டம்
முட்டை இடுவதற்கும், சத்து நிறைந்த இறைச்சி தருவதற்கும் பண்ணைப் பறவைகளுக்கு புரதம், கார்போஹைட்ரேட், தாது உப்புகள், கொழுப்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவு தேவை. கம்பு, பார்லி, சோளம், தினை, தவிடு, கோதுமை, புண்ணாக்கு, மீன் உணவு, ரொட்டி மற்றும் பச்சைக் காய்கறிகள் ஆகியவையும் இவற்றிற்கு உணவாகக் கொடுக்கப்படுகின்றன.
பண்ணைப் பறவைகளிலிருந்து கிடைக்கும் பொருள்கள்
பண்ணைகளில் வளர்க்கப்படும் பறவைகள் நமக்கு பலவிதத்தில் பயன்தருகின்றன. முட்டை, இறைச்சி மற்றும் உரம் ஆகியவை அவற்றிலிருந்து கிடைக்கக்கூடிய முக்கியமான பொருள்கள் ஆகும்.
- (i) பண்ணைகளில் வளர்க்கப்படும் பறவைகள் நல்ல சத்தான உணவிற்கான ஆதாரமாக உள்ளன.
- (ii) இவற்றின் முட்டைகள் அதிக புரதச் சத்து மிகுந்தவை. இவை எளிதில் செரிமானம் அடையக்கூடியவை. இவற்றில் நமக்குத் தேவையான கால்சியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச் சத்து போன்ற தாதுக்களும், வைட்டமின்களும், சிறிதளவு கொழுப்பும் உள்ளன.
- (iii) இவற்றின் இறகுகள் தலையணை மற்றும் குளிர் கால மெத்தைகள் தயாரிப்பில் பயன்படுகின்றன.
- (iv) இவற்றின் கழிவுகள் நல்ல உரமாகப் பயன்படுகின்றன. இவை பயிர்களுக்கு அதிகளவு பயன்படக்கூடியவை.
வார்த்தைகள்: (எண்ணெய் வித்துக்கள், முட்டை, தேன், உணவு தானியங்கள், மீன்)
(i) பசுமைப் புரட்சி : __________(ii) நீலப் புரட்சி : __________
(iii) வெள்ளிப் புரட்சி : __________
(iv) தங்கப் புரட்சி : __________
(v) மஞ்சள் புரட்சி : __________
(ii) நீலப் புரட்சி : மீன்
(iii) வெள்ளிப் புரட்சி : முட்டை
(iv) தங்கப் புரட்சி : தேன்
(v) மஞ்சள் புரட்சி : எண்ணெய் வித்துக்கள்
II. தேனீ வளர்ப்பு
தேனிற்காக தேனீக்களை வளர்ப்பது தேனி வளரப்பு எனப்படும். இது ஆங்கிலத்தில் அபிகல்சர் (Apiculture) என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பத்தில் தேனீக்கள் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள மரப் பெட்டிகளில் வளர்க்கப்படுகின்றன. தேனீக்கள் ஒரு சமூகப் பூச்சிகள். இவை கூட்டமாக வசிக்கும் வாழிடம் தேன்கூடு என்று அழைக்கப்படுகிறது.
1. தேனீக்களின் வகைகள்
- (i) இராணித் தேனீ: தேனீக்களின் குழுவிலுள்ள மிகப் பெரிய உறுப்பினர். இராணித் தேனீயே முட்டையிடக்கூடியதாகும். இது ஒருநாளைக்கு 2000 முட்டைகள் வரை இடக்கூடியது.
- (ii) ஆண் தேனீ: இராணித் தேனீ உற்பத்தி செய்த முட்டைகளைக் கருவுறச் செய்வதே இதன் முக்கியப் பணியாகும். தேன் கூட்டின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துவதற்கும் இவை உதவுகின்றன.
- (iii) வேலைக்காரத் தேனீ: இவை இனப்பெருக்கம் செய்ய இயலாத பெண் தேனீக்கள். தேன் சேகரித்தல், கூட்டைச் சுத்தப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் போன்றவை இதன் பணிகளாகும்.
(ii) தேனீக்கள் மணிக்கு 6 மைல் வேகத்தில் ஒரு நாளைக்கு 15 மைல்கள் பறக்கக்கூடியவை.
தேனீக்களிடமிருந்து பெறப்படும் பயனுள்ள பொருள்கள்
தேன் மற்றும் தேன் மெழுகு ஆகியவை தேனீக்களிடமிருந்து பெறப்படுகின்றன. தேனீயின் விஷம், பிசின் மற்றும் உறைகூழ் (ஜெல்லி) ஆகியவை பிற பொருள்களாகும்.
III. இயற்கை உரம்
இயற்கை உரம் என்பது உரமாகப் பயன்படக்கூடிய ஒரு கரிமப் பொருள் ஆகும். இது பொதுவாக விலங்கு அல்லது தாவரக் கழிவுகளிலிருந்து பெறப்படுகிறது. இது நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்களை மண்ணில் அதிகரிக்கச் செய்து மண்ணை வளமிக்கதாக மாற்றுகின்றது.
IV. மண்புழு உரம் தயாரித்தல்
கரிமக் கழிவுகளாகிய இலைகள், மரத் துண்டுகள் போன்றவற்றை மண்புழுவைக் கொண்டு சத்துமிக்க உரமாக மாற்றுவது மண்புழு உரமாக்குதல் எனப்படும். மண்புழுக்கள் மண்ணிற்கு சிறந்த உரமாகி மண்ணின் தன்மையை மேம்படுத்துகிறது.
மண்புழு உரத்தின் நன்மைகள்:
(i) தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களான நைட்ரஜன், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவற்றை அதிக அளவு கொண்டுள்ளது.
(ii) நீர் உறிஞ்சும் தன்மையை மேம்படுத்தி மண் அரிமானம் ஏற்படாமல் தடுக்கிறது.
(iii) தாவர வளர்ச்சியை மேம்படுத்தி, தாவரங்களில் நோய் வராமல் தடுக்கிறது.
(iv) கழிவு நீர் சுத்திகரிப்பில் இது பயன்படுகிறது.
(v) செயற்கை உரங்களின் பயன்பாட்டைக் குறைக்கிறது.
5th Science : Term 3 Unit 1 : Our Environment : Samacheer Book Back Questions and answers.