5th Standard Social Science - Our Earth (Term 1 Unit 1) Lessons & Answers

5th Social Science : Term 1 Unit 1 : Our Earth | நமது பூமி

நமது பூமி

மாலையில், பள்ளியிலிருந்து வீடு திரும்பிய இமயன் தன் தந்தையின் வருகைக்காக காத்திருந்தான். அவனது தந்தை முன்னனி வங்கி ஒன்றின் ஊழியராக உள்ளார்.

அலகு 1: நமது பூமி

Our Earth Cover
கற்றல் நோக்கங்கள் மாணவர்கள் இப்பாடத்தைக் கற்பதன் வாயிலாக:
(i) பேரண்டம் பற்றி அறிந்துகொள்வர்.
(ii) சூரிய குடும்பம் பற்றித் தெரிந்துகொள்வர்.
(iii) பூமியைப் பற்றித் தெரிந்துகொள்வர்.

மாலையில், பள்ளியிலிருந்து வீடு திரும்பிய இமயன் தன் தந்தையின் வருகைக்காக காத்திருந்தான். அவனது தந்தை முன்னனி வங்கி ஒன்றின் ஊழியராக உள்ளார்.

இமயன் : வாருங்கள் அப்பா! (இமயன் ஓடிவந்து தன் தந்தையைக் கட்டிக்கொண்டான்)

தந்தை : என்ன இமயன், நீ தின்பண்டம் சாப்பிட்டாயா?

இமயன் : சாப்பிட்டுவிட்டேன் அப்பா! என் சமூக அறிவியல் ஆசிரியர் நாளை எங்கள் வகுப்பில் பூமியைப் பற்றி சொல்லிக் கொடுக்கப்போகிறார். தயவுசெய்து பூமியைப் பற்றிச் சொல்லுங்கள் அப்பா!

தந்தை : சரி, நான் சொல்கிறேன் கேள்.

இமயன் : பூமி எப்படி உருவானது?

தந்தை : ஏறத்தாழ 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நம் சூரிய குடும்பம் வாயுக்கள் மற்றும் தூசுக்களால் உருவானது. இதனையே நாம் சூரிய நெபுலா என்று அழைக்கிறோம். ஈர்ப்பு விசை மற்றும் சிதைவின் காரணமாக நெபுலாவில் உள்ள இத்துகள்கள் (Particles) சூரியனை மையமாகக் கொண்டு சுற்ற ஆரம்பித்தன. இத்துகள்களே பின்னாளில் கோள்கள் ஆகின. இவ்வாறு நமது புவிக்கோள் தோன்றியது.

Formation of Earth

இமயன் : அப்படியா! பேரண்டம் பற்றி விளக்குகிறீர்களா அப்பா?

The Universe

தந்தை : பேரண்டம் என்பது கோடிக்கணக்கான விண்மீன் திரள் மண்டலங்கள், விண்மீன்கள், கோள்கள், குறுங்கோள்கள், வால் நட்சத்திரங்கள், விண்கற்கள், எரிகற்கள் மற்றும் துணைக்கோள்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. பேரண்டத்தின் துல்லியமான அளவு இன்னும் முழுவதுமாக அறியப்படவில்லை. பேரண்டம் இன்னும் வெளிப்புறமாக விரிவடைந்து கொண்டேதான் இருக்கிறது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இமயன் : அப்பா, விண்மீன் திரள் மண்டலம் என்பது என்ன?

தந்தை : விண்மீன் திரள் மண்டலம் என்பது நட்சத்திரங்களின் தொகுப்பு ஆகும். நமது விண்மீன் மண்டலம் (பால் வழி மண்டலம்) எண்ணிலடங்கா விண்மீன் மண்டலங்களுள் ஒன்றாகும்.

பால் வழி மண்டலம்

இமயன் : சரி அப்பா. சூரிய குடும்பம் என்றால் என்ன?

Solar System

தந்தை : சூரிய குடும்பத்தில் சூரியன் உட்பட எட்டு கோள்கள், மற்றும் அதன் துணைக் கோள்கள், குறுங்கோள்கள், எரிகற்கள், வால்நட்சத்திரங்கள், தூசு ஆகியவை உள்ளன. இவைகள் அனைத்தும் அதன் வலுவான ஈர்ப்பு விசையினால் பிணைக்கப்பட்டுள்ளன.

இமயன் : ஆச்சரியமாக இருக்கிறதே அப்பா! நமது சூரிய குடும்பத்தை பற்றிச் சொல்லுங்களேன்.

தந்தை : நமது சூரிய குடும்பத்தில் 8 கோள்கள் உள்ளன. அவை:

1 புதன்
2 வெள்ளி
3 பூமி
4 செவ்வாய்
5 வியாழன்
6 சனி
7 யுரேனஸ்
8 நெப்டியூன்

இமயன் : பூமி எங்கே இருக்கிறது அப்பா?

Planets Order
நாம் அறிந்து கொள்வோம். உள்-பாறை கோள்களான புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் திடக்கோள்கள்என அழைக்கப்படுகின்றன. வெளிக்கோள்கள் வாயுக்களால் ஆனது. அவை வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன். உறைந்திருக்கும் கோள்கள் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகும்.

தந்தை : பூமி : பூமி சூரியனிடமிருந்து மூன்றாவதாக அமைந்துள்ள ஐந்தாவது பெரிய கோளாகும்.

இமயன் : பூமி தன் அச்சில் தன்னைத்தானே சுழன்று கொண்டு, சூரியனைச் சுற்றி வலம் வருகின்றது என்று கூறுகிறார்களே, உண்மையா?

தந்தை : ஆம். பூமிக்கு இரண்டு இயக்கங்கள் உள்ளன. அவை:

1 தன் சுழற்சி
2 சூரியனை சுற்றி வலம் வருதல்
சிந்தனை செய் உலக பூமி தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?

தன் சுழற்சி

பூமி தன் அச்சில் தன்னைத்தானே சுழலுவது, தன் சுழற்சி என்று அழைக்கப்படுகின்றது பூமி தன்னைத்தானே சுழலுவதன் காரணமாக இரவும் பகலும் ஏற்படுகின்றன.

Rotation of Earth

சூரியனை சுற்றி வலம் வருதல்

பூமி தனது அச்சில் 23 1/2° சாய்வாக அமைந்து தன்னைத்தானே சுழன்றுக்கொண்டு, அதே வேளையில் சூரியனைச் சுற்றி வலம் வருகின்றது. பூமி, சூரியனை சுற்றி வலம் வருவதால் பருவகாலங்கள் ஏற்படுகின்றன.

Revolution of Earth

தந்தை : உயிர் வாழத் தேவையான நிலம், காற்று மற்றும் நீர் பூமியில் மட்டுமே உள்ளது.

இமயன் : ஓ அப்படியா?சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தொலைவு எவ்வளவு?

தந்தை : சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஏறத்தாழ 150 மில்லியன் கிலோமீட்டர் தூரம் உள்ளது.

இமயன் : மேலும் கோள்களைப் பற்றி வியப்பான தகவல்கள் உள்ளனவா அப்பா?

தந்தை : புதனும், வெள்ளியும் சூரியனுக்கு அருகில் உள்ள கோள்கள் ஆகும். பூமிக்கு அடுத்தபடியாக செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை உள்ளன. சூரியனுக்கு அருகில் உள்ள கோள்கள் மிகவும் வெப்பமானவை. சூரியனிலிருந்து மிகத் தொலைவில் உள்ள கோள்கள் மிகவும் குளிர்ச்சியாக உள்ளன. புதன் கோள் மற்றக் கோள்களைவிட மிகவும் சிறியது. வியாழன் கோள் மற்றக் கோள்களைவிட மிகவும் பெரியது.

வெள்ளியும், பூமியும் இரட்டைக்கோள்கள் என அழைக்கப்படுகின்றன. செவ்வாய் "செந்நிறக் கோள்" என அழைக்கப்படுகிறது. மேலும் பூமி நீர்க்கோளம் என அழைக்கப்படுகிறது. வளையங்களைக் கொண்டகோள் சனி ஆகும்.

இமயன் : மிகவும் அற்புதம்! பூமியில் நாம் எங்கு வாழ்கிறோம்?

தந்தை : பூமியின் மேற்பரப்பில் நாம் வாழ்கிறோம். பூமியானது 7 கண்டங்களையும், 5 பெருங்கடல்களையும் உள்ளடக்கியது.

இமயன் : 7 கண்டங்களா? அவை என்னென்ன?

தந்தை : சொல்கிறேன். அவை;
ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா.

இமயன் : எது பெரிய கண்டம்?

தந்தை : நாம் வாழும் ஆசியக் கண்டம்தான் அனைத்திலும் மிகப் பெரியது. மிகச்சிறிய கண்டம் ஆஸ்திரேலியா ஆகும். அண்டார்டிக்கா கண்டம் பனி நிறைந்தது.

நாம் அறிந்து கொள்வோம். A4 NOSE
(A1) ஆசியா (Asia) (A2) ஆப்பிரிக்கா (Africa) (A3) அண்டார்டிக்கா (Antarctica) (A4) ஆஸ்திரேலியா (Australia) (No) வட அமெரிக்கா (North America) (S) தென் அமெரிக்கா (South America) (E) ஐரோப்பா (Europe)
Continents Map
நாம் அறிந்து கொள்வோம். கண்டங்களின் மேற்பரப்பானது பலவகையான நிலத்தோற்றங்களைக் கொண்டுள்ளன. அவை: சமவெளிகள், பீடபூமிகள், மலைகள், கடற்கரைச்சமவெளிகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள் மற்றும் தீவுகள் போன்றவைகளாகும். உலகிலேயே மிக உயரமான சிகரம் எவரெஸ்ட் (8848மீ). இது இமய மலையில் அமைந்துள்ளது.

இமயன் : அப்பா, ஐந்து பெருங்கடல்கள் என்னென்ன?

தந்தை : பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், தென் பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல். நமது பூமி 71% நீராலும் 29% நிலத்தாலும் சூழப்பட்டு உள்ளது 96.5% நீர், உப்பு நீராக (saline) உள்ளது. 2.5% சதவீதம் நீர் மட்டுமே நன்னீராக உள்ளது. இதில் 1% நீர் மட்டுமே பயன்படுத்தக் கூடியதாக உள்ளது.

பெருங்கடல்களின் சராசரி ஆழம் 3800 மீ ஆகும். பெருங்கடல்களில் மிக ஆழமான இடம் மரியானா அகழி ஆகும். இது பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது.

இமயன் : நன்றி அப்பா. இன்று உங்களிடமிருந்து பூமியை பற்றி நிறைய வியப்பூட்டும் செய்திகளை தெரிந்து கொண்டேன். இப்போது நான் படிக்கப் போகிறேன்.

தந்தை : சரி இமயன், படிப்பதற்குச் செல்.

கலைச்சொற்கள்
துகள்கள் : Particles
உப்பு நீர் : Saline water
அகழி : Trench
மீள்பார்வை
(i) பேரண்டமானது கோடிக்கணக்கான விண்மீன் திரள் மண்டலங்கள், விண்மீன்கள், கோள்கள், குறுங்கோள்கள், வால் நட்சத்திரங்கள், விண்கற்கள், எரிகற்கள் மற்றும் துணைக்கோள்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
(ii) பூமி சூரியனிடமிருந்து மூன்றாவதாக அமைந்துள்ள ஐந்தாவது பெரிய கோளாகும்.