6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : இயற்கை இன்பம்
கவிதைப்பேழை : சிலப்பதிகாரம்
இயல் இரண்டு
கவிதைப்பேழை
சிலப்பதிகாரம்
நம்மைச் சுற்றிலும் எங்குப் பார்த்தாலும் இயற்கையின் அழகு கொட்டிக் கிடக்கிறது. கடலும், மலையும், கதிரும், நிலவும் மழையும் பனியும் இயற்கையின் கொடைகள் அல்லவா? அவற்றைக் கண்டு மகிழாதவர் உண்டோ? நிலவின் குணிர்ச்சியையும் கதிரவனின் வெம்மையையும், மழையின் பயனையும் சிலப்பதிகாரம் போற்றுகிறது.
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கு அவர்தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்றுஇவ்
அங்கண் உலகு அளித்த லான்
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலம் திரிதலான்
"மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்
மேல்நின்று தான் சுரத்தலான்
- இளங்கோவடிகள்
வான்நிலா போற்றுவோம்! வான்நிலா போற்றுவோம்!
மாலை அணிந்த சோழனின் குளிர்ந்த
வெண்குடை போல அருளை வழங்கும்
வான்திலா போற்றுவோம்.! வான்நிலா போற்றுவோம்!
கதிரவன் போற்றுவோம்! கதிரவன் போற்றுவோம்!
காவிரி நாடன் சோழனின் ஆணைச்
சக்கரம் போலவே இமயத்தை வலம்வரும்.
கதிரவன் போற்றுவோம்! சதிரவன் போற்றுவோம்!
வான்மழை போற்றுவோம்! வான்மழை போற்றுவோம்!
கடல்சூழ் உலகுக்கு அருளைப் பொழியும்
மன்னனைப் போல முகில்வழி சுரக்கும்.
வான்மழை போற்றுவோம்! வான்மழை போற்றுவோம்!
தேன் நிறைந்த ஆத்திமலர் மாலையை அணிந்தவன் சோழ மன்னன். அவனுடைய வெண்கொற்றக் குடை குளிர்ச்சி பொருந்தியது. அதைப் போலவே வெண்ணிலவும் தன் ஒளியால் உலகுக்கு இன்பம் அளிக்கிறது. அதனால் வெண்ணிலவைப் போற்றுவோம்.
காவிரி ஆறு பாய்ந்து வளம் செய்யும் நாட்டை ஆட்சி செய்பவன் சோழ மன்னன். அவனது ஆணைச் சக்கரம் போல, கதிரவனும் பொன்போன்ற சிகரங்களையுடைய இமயமலையை வலப்புறமாகச் சுற்றிவருகிறது. அதனால் கதிரவனைப் போற்றுவோம்!
அச்சம்தரும் கடலை எல்லையாகக் கொண்ட உலகிற்கு மன்னன் அருள் செய்கிறான். அதுபோல, மழை, வானிலிருந்து பொழிந்து மக்களைக் காக்கிறது. அதனால் மழையைப் போற்றுவோம்!
சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள். இவர் சேர மன்னர் மரபைச் சேர்ந்தவர் என்று சிலப்பதிகாரப் பதிகம் கூறுகிறது. இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பர்.
ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம். இதுவே தமிழின் முதல் காப்பியம். இது முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், என்றெல்லாம் போற்றப்படுகிறது. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
திங்கள், ஞாயிறு, மழை என இயற்கையை வாழ்த்துவதாக இந்நூல் தொடங்குகிறது. அவ்வாழ்த்துப்பகுதி நமக்குப்பாதமாகத் தரப்பட்டுள்ளது.
Tags : by Ilangovadigal | Term 1 Chapter 2 | 6th Tamil இளங்கோவடிகள் | பருவம் 1 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ்.
6th Tamil : Term 1 Chapter 2 : Iyarkai inbum : Poem: Silappathikaram by Ilangovadigal | Term 1 Chapter 2 | 6th Tamil in Tamil : 6th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : இயற்கை இன்பம் : கவிதைப்பேழை : சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள் | பருவம் 1 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ் : 6 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.