1st Grade EVS | Term 3 Unit 1: Materials Around Us | Samacheer Kalvi

1st Grade EVS | Term 3 Unit 1: Materials Around Us | Samacheer Kalvi

பருவம் 3 அலகு 1 | நம்மைச் சுற்றியுள்ள பொருள்கள்

1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல் | 1st EVS Environmental Science: Term 3 Unit 1: Materials Around Us

கற்றல் நோக்கங்கள்

கற்போர்

❖ தங்களைச் சுற்றியுள்ள பல்வேறு பொருள்களை அடையாளம் காணல்

❖ பொருள்களுக்கு இடையேயான வேறுபாட்டை அறிதல்

நாம் பேசுவோமா!

படத்தை நன்றாக உற்றுநோக்கி, அதில் என்னென்ன பொருள்கள் உள்ளன என்றும் அவை எவற்றால் ஆனவை என்றும் பேசுவோமா!

வகுப்பறையில் உள்ள பொருள்கள்

நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களும் மரக்கட்டை, களிமண், கல், மணல், உலோகங்கள் போன்றவற்றால் ஆனவை.

மரக்கட்டை

மீரா பென்சிலால் வண்ணம் தீட்டுகிறாள்.

தாத்தா நாற்காலியில் அமர்ந்து இருக்கிறார்.

புத்தகங்கள் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

விமல் பொம்மை வைத்து விளையாடுகிறான்.

மரத்தால் ஆன பொருள்கள்

மரத்தின் தண்டு, கிளைகளிலிருந்து மரக்கட்டை பெறப்படுகிறது. நாற்காலி, பொம்மை, பென்சில், ஏணி, கிரிக்கெட் மட்டை, தீக்குச்சி, கதவு, புத்தக அலமாரி போன்ற பல பொருள்கள் மரக்கட்டையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.

ஏணி, மட்டை, தீக்குச்சி, கதவு போன்ற மரப் பொருள்கள்

உங்களுடைய வகுப்பறையில் உள்ள பொருள்களில் மரத்தாலான பொருள்களை அடையாளம் காண்போமா!

மரத்தாலான பொருள்களை (✔) குறியிட்டுக் காட்டுவோமா!

பயிற்சி: மரத்தாலான பொருள்களைக் கண்டறிதல்

களிமண்

பாத்திமா மண்ணில் ஒரு மரக்கன்றை நடுகிறாள்.

ஒரு பெண் செடியை நடுகிறாள்

மண் என்பது களிமண், மணல், உடைந்த பாறைத்துகள்கள், உலர்ந்த இலைகள் போன்றவற்றின் கலவையாகும். களிமண் ஒட்டும் தன்மையுடையது, இதற்கு நீரை உறிஞ்சும் தன்மை உண்டு.

செங்கல் தயாரித்தல்

செங்கல் களிமண்ணில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

செங்கல்

களிமண்ணிலிருந்து மேலும் பல பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. பானை, மண் அடுப்பு, விளக்கு, கூரை ஓடுகள்.

பானை, மண் அடுப்பு, விளக்கு, கூரை ஓடுகள்

ராஜன் மரப்பொம்மைகளையும் கமலா களிமண் பொம்மைகளையும் சேகரிக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் எத்தனை பொம்மைகள் சேகரித்தனர் என்பதை எண்ணி எழுதுவோமா!

பயிற்சி: பொம்மைகளை எண்ணுதல்

கல்

சந்தியாவும் காவ்யாவும் கூழாங்கற்கள் வைத்து விளையாடுகிறார்கள்.

கூழாங்கற்கள் விளையாட்டு

கல்லின் ஒரு வகை கூழாங்கல். கல் என்பது பூமியில் காணப்படும் ஒரு கடினமான பொருள் ஆகும். நாம் கற்களைப் பல வழிகளில் பயன்படுத்துகிறோம். கற்களில் பல வகைகள் உள்ளன.

கற்சிற்பங்களுக்கு பெயர் பெற்ற இடம் மகாபலிபுரம்.

மகாபலிபுரம் கற்சிற்பங்கள்

கற்கள் வீடுகள் கட்டுவதற்குப் பயன்படுகின்றன.

சலவைக்கல் - கல்லின் ஒரு வகையாகும். இது தளங்கள் அமைப்பதற்கும் கட்டடங்கள் கட்டுவதற்கும் பயன்படுகிறது.

ஜல்லி எனப்படும் சிறிய கற்கள் சாலைகள் அமைக்கப் பயன்படுகின்றன.

கற்கள் சிலைகள் செய்யப் பயன்படுகின்றன.

சிவப்புக் கல் என்பதும் ஒரு வகைக் கல்லே, இதனைக் கொண்டும் பல கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

விலை உயர்ந்த இரத்தினக் கற்களைக் கொண்டு ஆபரணங்கள் தயாரிக்கப்படுகின்றன.

கற்களின் பல்வேறு பயன்கள்

கொடுக்கப்பட்ட பொருள்கள் எவற்றால் ஆனவை என கோடிட்டு இணைப்போமா!

பொருத்துக: நாற்காலி, பானை, சிற்பம்

மணல்

ரவியும் பிரபுவும் மாலில் விளையாடுகிறார்கள். உனக்கு மணலில் விளையாடப் பிடிக்குமா?

மணலில் விளையாடும் குழந்தைகள்

பாறைகள் சிதைந்து பல ஆண்டுகளுக்கு பிறகே மணலாக மாறுகிறது. சிமெண்ட்டுடன் மணல் கலக்கப்பட்டு கட்டடங்கள் கட்டப்படுகின்றன. கண்ணாடி தயாரிப்பிலும் மணல் பயன்படுகிறது. மணலைக் கொண்டு அழகிய மணற்சிற்பங்கள் உருவாக்கப்படுகின்றன. இதனை மணற்சிற்பக்கலை என்கிறோம்.

மணல் சிற்பம் மற்றும் கண்ணாடி பொருட்கள்

பழங்காலத்தில் மணல் கடிகாரங்கள் நேரத்தைக் கணக்கிடப் பயன்பட்டன.

மணல் கடிகாரம் செய்வோமா!

❖ ஒரே மாதிரியான இரண்டு கண்ணாடி சீசாக்களை எடுத்துக் கொள்ளவும்.

❖ ஆசிரியரின் துணையுடன் இரு சீசா மூடிகளிலும் சிறிய துணையிடவும்.

❖ ஒரு சீசாவில் பாதியளவு மணலை எடுத்துக் கொள்ளவும்.

❖ இரு சீசாக்களையும் படத்தில் உள்ளவாறு ஒட்டும் நாடாவைக் கொண்டு ஒட்டவும்.

❖ இப்போது மணல் கடிகாரம் தயார்.

மணல் கடிகாரம்

மணல் கடிகாரம் வைத்து விளையாடுவோமா!

மணல் கடிகாரத்தின் மேல் சீசாவில் உள்ள மணல் கீழ் சீசாவில் முழுமையாக வந்து சேர்வதற்குள் உங்களால் எத்தனை முறை குதிக்க முடிகிறது எனக் கண்டறிவோமா! இது போன்றே பிற செயல்களுக்கும் இந்த கடிகாரத்தைப் பயன்படுத்தி நேரத்தைக் கணக்கிடுவோமா!

உலோகங்கள்

சூர்யா மிதிவண்டி ஓட்டுகிறான். மிதிவண்டிகள் உலோகத்தால் ஆனவை. உலோகம் ஒரு கடினமான, பளபளப்பான பொருள்.

மிதிவண்டி ஓட்டும் சிறுவன்

நம் அன்றாட வாழ்வில் உலோகங்களைப் பல வழிகளில் பயன்படுத்துகிறோம். கீழ்க்காணும் பொருள்கள் எல்லாம் உலோகங்களால் ஆனவை.

● மோதிரம்

● பாத்திரம்

● குழாய்

● மகிழுந்து

● மின்கம்பிகள்

● நாணயம்

உலோகத்தால் ஆன பொருள்கள்: மோதிரம், பாத்திரம், குழாய், மகிழுந்து, மின்கம்பிகள், நாணயம்

உலோகத்தாலான பொருள்களை வட்டமிடுவோமா!

பயிற்சி: உலோகத்தாலான பொருள்களைக் கண்டறிதல்