4th Science Term 2 Unit 1 Food | Tamil Medium Questions and Answers

4th Science Term 2 Unit 1 Food

4 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 1 : உணவு

உணவு

அலகு 1: உணவு
Unit 1 Food Intro Image

கற்றல் நோக்கங்கள்

இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன:

சமைத்த மற்றும் சமைக்காத உணவுப்பொருள்களை வேறுபடுத்துதல்.
பல்வேறு சமைக்கும் முறைகளை ஒப்பிட்டுப் பார்த்தல்.
பல்வேறு வகையான சமையல் பாத்திரங்களைப் பற்றி விளக்குதல்.
சுகாதாரமான உணவு மற்றும் உடல்நலக் குறைவின்போது உண்ணவேண்டிய உணவுகளை அடையாளம் காணுதல்.
உணவை வீணாக்கக்கூடாது என்பதன் முக்கியத்துவத்தை விளக்குதல்.
அறிமுகம்

உணவானது வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்று. நமது அனைத்து வேலைகளுக்கும் தேவையான ஆற்றல் உணவிலிருந்தே கிடைக்கிறது. இயற்கையில் கிடைக்கும் உணவுப்பொருள்கள் நமது உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் அளிக்கின்றன. ஆனால், நாம் விளம்பரங்களைப் பார்த்து துரித உணவுகளால் ஈர்க்கப்பட்டு வருகிறோம். இந்தப் பாடத்தில் நமக்கு நன்மை தரும் உணவுகள், உணவு சமைக்கும் முறைகள், உணவை வீணாக்காமல் இருக்க வேண்டியதன் முக்கியத்துவம் ஆகியவை குறித்து விரிவாகக் காண்போம்.

I. உணவு
செய்து கற்போம்

கீழ்க்காணும் உணவுப்பொருள்களை வகைப்படுத்துக.

(கேரட், முட்டை, தேங்காய் எண்ணெய், பால், முள்ளங்கி, இறைச்சி, உருளைக்கிழங்கு, தயிர், கத்தரி, வெண்டைக்காய், மீன், முருங்கைக்காய், வெண்ணெய், வெங்காயம், மோர், வெள்ளரிக்காய், நெய்)

தாவரங்களிலிருந்து பெறப்படும் உணவுப்பொருள்கள்

கேரட், தேங்காய் எண்ணெய், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, கத்தரி, வெண்டைக்காய், முருங்கைக்காய், வெங்காயம், வெள்ளரிக்காய்.

விலங்குகளிடமிருந்து பெறப்படும் உணவுப்பொருள்கள்

முட்டை, பால், இறைச்சி, தயிர், மீன், வெண்ணெய், மோர், நெய்.

நமது அன்றாட வாழ்வில், உணவுக்காக நாம் தாவரங்களையும் விலங்குகளையும் சார்ந்து இருக்கிறோம். சில உணவுகளை பச்சையாக உண்ணலாம். ஆனால், பெரும்பாலானவை சமைக்கப்பட வேண்டும். எந்தெந்த உணவினைப் பச்சையாக உண்ணலாம், எவற்றைச் சமைத்து உண்ண வேண்டும் என்று இப்போது பார்ப்போம்.

1. பச்சையான உணவு (சமைக்காத உணவு)

சமைக்காமல் அப்படியே நாம் உண்ணும் உணவு பச்சையான உணவு (சமைக்காத உணவு) என்று அழைக்கப்படுகிறது. பழங்கள், கொட்டை வகைகள், சில காய்கறிகள் மற்றும் கிழங்குகளை பச்சையாக உண்கிறோம். சில பருப்பு மற்றும் தானியங்களைக்கூட சமைக்காமல் உண்ணலாம். அப்படியே உண்ணும் உணவுப்பொருள்களை உண்பதற்குமுன் அவற்றைச் சுத்தமான நீரால் கழுவ வேண்டும். நாம் பச்சையாக உண்ணும் சில உணவுப்பொருள்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Raw Foods Example
சிந்தித்து விடையளி

எந்தெந்த உணவுப்பொருள்களை சமைக்காமல் சாப்பிடுகிறீர்கள்?

செய்து கற்போம்

சில பழங்கள், காய்கறிகள், கொட்டைகள் மற்றும் கிழங்குகளை மேசையின் மீது காட்சிப்படுத்தி, ஒவ்வொரு மாணவனையும் ஓர் உணவை எடுத்துக் கொள்ளுமாறு கூறவும். மாணவர்கள் எடுக்கும் உணவுப் பொருள்களுக்கு ஏற்ப பழங்கள், காய்கறிகள், கிழங்குகள், கொட்டைகள் என நான்கு குழுக்களாக அவர்களைப் பிரிக்கவும்.

உருவாக்குவோம்

காய்கறி / பழக் கலவை (சாலட்) உருவாக்குவோமா?

Salad Making

உங்கள் பகுதியில் கிடைக்கக்கூடிய பச்சையாக உண்ணும் உணவுப் பொருள்கள் சிலவற்றைச் சேகரிக்கவும் அவற்றை சுத்தமான தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் (கொட்டைகளை முழுதாக வைக்கவும்) அவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, பின்னர் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். இப்பொழுது உங்கள் சுவையான காய்கறி / பழக் கலவை (சாலட்டை) உண்டு மகிழுங்கள்!

2. சமைத்த உணவு

அனைத்து உணவுப் பொருள்களையும் நம்மால் பச்சையாக உண்ணமுடியாது. உணவினை உண்பதற்கு முன் வெப்பத்தைப் பயன்படுத்தி அவற்றை வேகவைத்து உண்ணக்கூடிய உணவு சமைத்த உணவு என்று அழைக்கப்படுகிறது.

நாம் ஏன் உணவினைச் சமைக்க வேண்டும்?

சமைத்த உணவு எளிதில் செரிக்கும்.
சமைப்பதால் உணவுப்பொருள்கள் மிருதுவாகும்.
சமைப்பதால் கிருமிகள் அழியும்.
சமையல் உணவிற்குச் சுவை மற்றும் வாசனையைச் சேர்க்கிறது.
Cooked Food Benefits
உங்களுக்குத் தெரியுமா

தேன் மட்டுமே கெட்டுப் போகாத ஒரே உணவுப்பொருள் ஆகும்.

விடையளிப்போம்

எவையேனும் ஐந்து பச்சையான மற்றும் சமைத்த உணவுகளை எழுதவும்.

அ. பச்சையான உணவு : பழங்கள், கொட்டைகள், காய்கறிகள், சாலட்

ஆ. சமைத்த உணவு : மீன், இட்லி, சிக்கன், பிட்சா, பூரி, பிரியாணி

II. சமைக்கும் முறைகளும் பழக்கவழக்கங்களும்
சிந்தித்து விடையளி

குழந்தைகளே, இங்கே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பட்டியலைப் பாருங்கள். அதில் பல்வேறு உணவு வகைகளை நீங்கள் காணலாம். இந்த உணவுப்பொருள்கள் அனைத்தும் ஒரே முறையில் சமைக்கப்படுகின்றன. என்று நினைக்கிறீர்களா?

Food Varieties

பொதுவாக வழக்கத்தில் உள்ள சில சமைக்கும் முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வேகவைத்தல்: இம்முறையில் உணவுப்பொருளானது கொதிக்கும் நீரில் மூழ்க வைத்து சமைக்கப்படுகிறது. இதனால் உணவுப்பொருளானது மிருதுவாகிறது. எ.கா. அரிசி, முட்டை.

Boiling Example

ஆவியில் வேகவைத்தல்: இது பாத்திரத்தில் உணவை எடுத்துக்கொண்டு அதை கொதிக்கும் நீரின் மேலிருந்து எழும்பிவரும் நீராவியால் சமைக்கும் முறையாகும். எ.கா. இட்டலி, இடியாப்பம்.

Steaming Example

அழுத்த சமையல்: இது அழுத்த சமையற்கலன் மூலம் உணவைச் சமைக்கும் முறையாகும். எ.கா. அரிசி, பருப்பு.

Pressure Cooking Example

வறுத்தல்: இம்முறையில் உணவானது ஒரு வறுக்கும் பாத்திரத்தில் வைக்கப்பட்டு மூடிவைக்காமல் சூடுபடுத்தி சமைக்கப்படுகிறது. எ.கா. நிலக்கடலை.

Roasting Example

பொரித்தல்: இது சூடான எண்ணெய்யில் உணவினைச் சமைக்கும் முறையாகும். எ.கா. சிப்ஸ், பூரி.

Frying Example

சமைக்கும் முறைகள்

Cooking Methods Chart

சமையல் பழக்கவழக்கங்கள்

சமைக்கும் முன் கைகளை சோப்பு போட்டுக் கழுவவேண்டும்.
நறுக்குவதற்கு முன்பு காய்கறி மற்றும் மற்றும் பழங்களைக் கழுவவேண்டும்.
Washing Vegetables
சமையல் பாத்திரங்கள் மற்றும் கத்திகளைக் கழுவவேண்டும்.
அதிக நேரத்திற்கு உணவினைச் சமைக்க வேண்டாம். ஏனெனில் உணவில் உள்ள சத்துகள் அழிக்கப்பட்டுவிடும்.
உணவினைச் சமைப்பதற்கு ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மறுமுறை பயன்படுத்த வேண்டாம்.
உணவுப் பொருள்களை அவற்றின் காலாவதியான தேதிக்குப் பிறகு பயன்படுத்துவது உடல்நலத்திற்கு ஏற்றதல்ல.
செய்து கற்போம்

கொடுக்கப்பட்டுள்ள உணவுப்பொருள்களை அவை சமைக்கும் முறைகளின்படி அட்டவணைப்படுத்துக.

அரிசி, பூரி, முறுக்கு, சோளப்பொரி, இட்டலி, மீன், புட்டு, பருப்பு, இடியாப்பம், நிலக்கடலை

Classification Table
விடையளிப்போம்

1. உன் வீட்டில் பின்பற்றப்படும் இரண்டு சமையல் முறைகளை எழுதுக:

வேகவைத்தல், நீராவியில் வேகவைத்தல்

2. சரியா அல்லது தவறா என எழுதுக.

அ. சமைக்கும் முன் கைகளைக் கழுவ வேண்டும்.

சரி

ஆ. காய்கறிகள் மற்றும் பழங்களை நறுக்கியபின் கழுவ வேண்டும்.

தவறு

III. சமையல் பாத்திரங்கள்

சமைக்கும் பாத்திரங்கள் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் உள்ளன. ஒவ்வொரு சமையல் முறைக்கும் ஏற்ப குறிப்பிட்ட வகை பாத்திரங்களை நாம் பயன்படுத்துகிறோம். முன்பு மண் பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தற்போது எவர்சில்வர் மற்றும் அலுமினியப் பாத்திரங்கள் சமையலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

Utensils

மண்பானைச் சமையல்

மண்பானைகள் அனைத்து வகையான சமையலுக்கும் ஏற்றவை. மண்பானைகளில் சமைப்பதன் மூலம் உணவின் தரமும் சுவையும் மேம்படுவதுடன், ஊட்டச்சத்துகளும் நிலைநிறுத்தப்படுகின்றன. மண்பாத்திரங்கள் இயற்கையாகவே பாதுகாப்புத்தன்மை கொண்டுள்ளதால் வெப்பம் மற்றும் ஈரத்தன்மையைப் பாத்திரம் முழுமைக்கும் ஒரே சீராகத் தந்து சத்துகள் பாதிக்கப்படாமலும், உணவு தீய்ந்து விடாமலும் பாதுகாக்கின்றன.

Clay Pot Cooking

மண்பானைச் சமையலின் நன்மைகள்

செரித்தல் எளிதாகிறது.
சத்துகள் வீணாகாமல் காக்கப்படுகின்றன.
சமைப்பதற்குக் குறைந்த அளவே எண்ணெய் தேவைப்படுகிறது.
உணவின் மணம் கூடுகிறது.
நெடுநேரத்திற்கு உணவு சூடாக உள்ளது.
உணவு விரைவில் கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்படுகிறது.
மண்பானையில் உள்ள காரத்தன்மை, உணவில் இருக்கும் அமிலத்தன்மையைக் கட்டுப்படுத்துகிறது.
உங்களுக்குத் தெரியுமா

சூரிய சமையற்கலன்: இது சூரிய ஒளியைப் பயன்படுத்தி உணவு சமைக்க உதவும் சாதனம் ஆகும். இஃது எரிபொருளைச் சேமிப்பதோடு காற்று மாசுபடுதலையும் குறைக்கிறது.

Solar Cooker
செய்து கற்போம்

அட்டவணையில் கொடுக்கப்பட்ட உணவுப் பொருள்களைத் சமைக்கப் பயன்படும் சமையல் பாத்திரங்களை எழுதுக.

(வாணலி, பானை, அழுத்த சமையற்கலன், தோசைக்கல், இட்லி குக்கர்)

Utensils Activity
விடையளிப்போம்

சரியா அல்லது தவறா என எழுதுக.

1. முற்காலத்தில் மக்கள் தங்கள் உணவை அழுத்தச் சமையற்கலனில் சமைத்தனர்.

[தவறு]

2. சூரிய அடுப்பு எரிபொருளின் பயன்பாட்டைக் குறைக்கிறது.

[சரி]

3. அழுத்த சமையற்கலன் என்பது சமையல் பாத்திரம் இல்லை.

[தவறு]

IV. உணவு நேர சுகாதாரம்
சிந்தித்து விடையளி

கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களைப் பாருங்கள். உடல்நலத்திற்கு எவை நல்லவை? ஏன்?

Hygiene Images

விடை:

இரண்டாவதாக இருக்கும் படம் உடல் நலத்திற்கு நல்லது ஏனெனில் உணவு பொருட்கள் தூசி மற்றும் பூச்சிகளிலிருந்து பாதுகாப்பாக மூடப்பட்டுள்ளன.

உணவு நேரச் சுகாதாரம் என்பது உண்ணும் உணவின் மூலமோ அல்லது உணவு தயாரிக்கப்படும் முறையின் மூலமோ நாம் நோய்வாய்ப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வழிகளை உள்ளடக்கியதாகும். ஆரோக்கியமான முறையில் உணவை எடுத்துக் கொள்வதற்கான சில வழிமுறைகளைக் கீழே காணலாம்.

தூசு மற்றும் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க உணவை எப்பொழுதும் மூடியே வைக்க வேண்டும்.
எப்பொழுதும் புதிதாகத் தயாரிக்கப்பட்ட உணவையே உண்ண வேண்டும்.
மிகக் குளிர்ந்த அல்லது மிகச் சூடான உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
துரித உணவுகள் மற்றும் பொரித்த / வறுத்த உணவுகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
உணவு உண்ணும் முன்பும், உண்ட பின்பும் கைகளை சோப்பால் கழுவ வேண்டும்.
Hygiene Steps
செய்து கற்போம்

பொருத்தமான ஒன்றிற்குக் குறியீடு (✔) செய்யவும்.

Tick the Correct One
விடையளிப்போம்

ஆம் அல்லது இல்லை என்று எழுதவும்.

1. துரித உணவு உடல்நலத்திற்கு நல்லது.

இல்லை

2. சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கைகளைக் கழுவ வேண்டும்.

ஆம்

விவாதிப்போம்

இங்கு நந்தினியின் மதிய உணவுப்பெட்டி உள்ளது.

Lunchbox

அ. இதிலுள்ளவை அனைத்தும் ஆரோக்கியம் தரும் உணவுப்பொருள்களா?

விடை : இல்லை. இதிலுள்ள அனைத்தும் ஆரோக்கியம் தரும் உணவுப்பொருள்கள் அல்ல

ஆ. ஓர் ஆரோக்கியமற்ற உணவினை நீக்கிவிட்டு, உங்கள் விருப்பப்படி ஆரோக்கியமான ஓர் உணவினைச் சேர்க்க நந்தினிக்கு பரிந்துரை செய்யவும். அதற்கான காரணத்தையும் கூறவும்..

விடை : சிப்ஸ் உடல் நலத்திற்கு நல்லதல்ல. அதற்கு பதிலாக காய்கறி கலவையை (சாலட்) சேர்க்கலாம்

காரணம் : சிப்ஸ் ஆரோக்கியமற்ற உணவு ஆகும். காய்கறி கலவை (சாலட்) உடல் நலத்திற்கு நல்லது ஏனெனில் அதில் அனைத்து உட்டசத்துகளும் உள்ளன.

V. உடல்நலக் குறைவின்போது எடுத்துக் கொள்ளப்படும் உணவு
சிந்தித்து விடையனி

நீங்கள் நோயுற்றிருக்கும்போது, உங்களுக்கு என்ன வகையான உணவினை உண்ணத் தருவார்கள்?

விடை: அரிசி அல்லது தானியக் கஞ்சி, இட்லி, பழச்சாறு ஆகியவற்றைத் தருவார்கள்.

நாம் உடல்நலமில்லாமல் இருக்கும் நேரத்தில் எண்ணெய்யில் பொரித்த உணவுகளைக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும். ஆற்றல் தரக்கூடிய மற்றும் எளிதில் செரிக்கக்கூடிய உணவையே எடுத்துக் கொள்ளவேண்டும். அப்படிப்பட்ட சில உணவுகள் கீழே தரப்பட்டுள்ளன.

அரிசி அல்லது தானியக் கஞ்சி
பழச்சாறு இளநீர்
இட்டலி போன்ற ஆவியில் வேகவைத்த உணவுகள்
செய்து கற்போம்

ஆசிரியர்களுக்கான குறிப்பு

சிறு காகிதத் துண்டுகளை எடுத்து அவற்றை சுருளாகச் சுருட்டவும். ஒவ்வொரு தாளிலும் ஓர் உணவுப்பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும். அவற்றை மேசையின் மேல் வைக்கவும். தரையில் இரு பெரிய வட்டங்கள் வரைந்து ஒருவட்டத்திற்கு 'உடல் நலமில்லாத போது தவிர்க்க வேண்டியவை" என்றும் மற்றொரு வட்டத்திற்கு "உடல் நலமில்லாத போது எடுத்துக் கொள்ள வேண்டியவை" என்றும் பெயரிடவும் ஒவ்வொரு மாணவரையும் அழைத்து ஒரு காகிதச் சுருளை எடுத்து, வாசித்த பிறகு அதற்குரிய வட்டத்தில் நிற்கச் சொல்லவும்.

விடையளிப்போம்

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ---------- (இட்டலி / பிரியாணி) எளிதில் செரிக்கக் கூடிய உணவாகும்.

விடை : இட்டலி

2. நாம் --------- (துரித / புதிய) உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

விடை : புதிய

VI. உணவு வீணாதல்

நாம் உணவை வீணாக்கக் கூடாது. நாம் உண்ணாத உணவு எஞ்சிய உணவு எனப்படுகிறது. அது வீணாக அப்புறப்படுத்தப்படுகிறது.

சிந்தித்து விடையளி
வழக்கமாக நீங்கள் உங்களுடைய மதிய உணவை வீணாக்காமல் சாப்பிடுகிறீர்களா? இல்லை எனில், வீணாக்குகிறீர்கள்?
உமது பள்ளியிலும் வீட்டிலும் உணவு வீணாவதைக் குறைக்க, சில வழிகளைப் பரிந்துரைக்கலாமா?

உணவு வீணாவதைத் தவிர்ப்பதற்கான எளிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

உன்னால் எவ்வளவு சாப்பிட முடியுமோ அதை மட்டும் எடுத்துக் கொள். மேலும், எடுத்ததைச் சாப்பிட்டுவிடு.
அதிகமுள்ள உணவைப் பகிர்ந்து உண்ணலாம்.
மீதமுள்ள உணவை, தேவைப்படுவோருக்கு அளிக்கலாம்.
Do Not Waste Food
உங்களுக்குத் தெரியுமா

உலகில் உற்பத்தியாகும் மொத்த உணவில் மூன்றில் ஒரு பங்கு வீணடிக்கப்படுகிறது. இது ஆண்டுக்கு மொத்தம் 1.2 இலட்சம் கோடி டன் ஆகும். (1 டன் - 1000 கி.கி)

உணவுப் பாதுகாப்பு

நாம் பின்வரும் முறைகளைப் பயன்படுத்தி நீண்ட நாள்கள் உணவைப் பாதுகாக்க முடியும்.

உப்பில் ஊறவைத்தல்: பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை எண்ணெய் மற்றும் உப்பில் ஊறவைத்து பயன்படுத்தும் முறைக்கு உப்பில் ஊறவைத்தல் என்று பெயர். எ.கா. ஊறுகாய்.

Pickling

குளிரூட்டுதல்: உணவைப் பாதுகாப்பதற்காக குறுகிய காலத்திற்கு அவற்றைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கும் முறைக்கு குளிரூட்டுதல் என்று பெயர். எ.கா. பழங்கள், காய்கறிகள்.

Refrigeration

உலரவைத்தல்: உலர்த்துதல் மூலம் உணவில் உள்ள ஈரப்பதத்தை நீக்கும் முறைக்கு உலரவைத்தல் என்று பெயர். எ.கா. காய்ந்த மிளகாய்.

Drying

புட்டியில் அடைத்தல்: காற்றுப்புகாத குறுக்கமான புட்டிகளில் உணவினைச் சேமிக்கும் முறைக்கு புட்டியில் அடைத்தல் என்று பெயர் . எ.கா. ஜாம்.

Canning
உங்களுக்குத் தெரியுமா

உலகப் பட்டினியால் வாடுவோர் தினம் - மே 28

விடையளிப்போம்

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. உலகப் பட்டினியால் வாடுவோர் தினம் கடைபிடிக்கப்படும் நாள் மே 28

2. ஊறுகாய் உப்பில் ஊறவைத்தல் முறையில் பாதுகாக்கப்படுகிறது.

விவாதிப்போம்

உங்கள் வீட்டில் ஒருவாரத்தில் வீணாக்கப்படும் அனைத்து உணவுகளையும் பட்டியலிடவும். வீணடிப்பதைக் குறைக்க என்னென்ன மாற்றங்கள் செய்ய முடியும் என்று நண்பர்களுடன் விவாதிக்கவும்.