பசுமை சுற்றுச்சூழல்
4 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 1
4th Science : Term 3 Unit 1 : Green Environment
கற்றலின் நோக்கங்கள்
இந்த பாடப்பகுதியினைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன
- கழிவு மேலாண்மை முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளல்.
- கழிவு மேலாண்மையின் 3R களின் பங்கைப் புரிந்துகொள்ளல்.
- நல்ல பழக்கங்களைப் பயிற்சி செய்வதன் மூலம் நமது சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாப்பது என்பதை அறிந்துகொள்ளல்.
- சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை உணர்தல்.
அறிமுகம்
இயற்கை நமக்குப் பல பயனுள்ள பொருள்களை வழங்குகிறது. தொழிற்சாலைகள் இந்த இயற்கை வளங்களைப் பயன்படுத்தி, நாம் கடைகளில் வாங்கும் பொருள்களை உருவாக்குகின்றன. இவற்றை நாம் பயன்படுத்திய பின், அவை கழிவுகளாக மாறுகின்றன. பயன்படுத்திய ஒரு பொருள் மீண்டும் தேவைப்படாதபோது, அதை 'கழிவு' என்கிறோம். அது உடைந்து, தேய்ந்து அல்லது மீண்டும் பயன்படுத்த முடியாததினால், நமக்கு உபயோகப்படுவதில்லை. கழிவு என்பது திட திரவ அல்லது வாயு நிலையில் இருக்கலாம். மேலும், அவை வீடுகள், பள்ளிகள், சந்தைகள், மருத்துவமனைகள், கடைகள் போன்ற பல இடங்களிலிருந்து பெறப்படலாம். பொதுவாகக் கழிவுகள் நம் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன.
கழிவு மேலாண்மை
- கழிவுகளைப் பிரித்தல்
- கழிவுகளைச் சேகரித்தல் மற்றும் எடுத்துச் செல்லுதல்
- கழிவுகளை மறுசுழற்சி செய்தல் மற்றும் உரமாக்குதல்
- கழிவுகளை அகற்றுதல்
கழிவுகளை வெவ்வேறு கழிவுத் தொட்டிகளில் பிரித்து வைப்பதே கழிவுகளைப் பிரித்தல் எனப்படும். ஒவ்வொரு தொட்டியிலும் வெவ்வேறு கழிவுகள் இருக்க வேண்டும். மட்கும் கழிவிற்கு பச்சை, மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவிற்கு நீலம், மறுசுழற்சி செய்ய இயலாத கழிவிற்கு சிவப்பு என மூன்று வெவ்வேறு நிற தொட்டிகளில் பிரிப்பது சிறந்தது. மட்காத கழிவினை, 'மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவு' என்றும் 'மறுசுழற்சி செய்ய இயலாத கழிவு' என்றும் பிரிக்கலாம்.
2. கழிவுகளைச் சேகரித்தல் மற்றும் எடுத்துச் செல்லுதல்:
வீடுகளிலும் பள்ளிகளிலும், கழிவுகளைப் பிரித்தவுடன், ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சியினால் அக்கழிவுகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. இவ்வாறு கழிவுகளை எடுக்கும் செயலை 'கழிவு சேகரிப்பு' என்கிறோம். கழிவுகளை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவது 'கழிவுகளை எடுத்துச் செல்லுதல்' எனப்படும்.
3. கழிவு மறுசுழற்சி செய்தல் மற்றும் உரமாக்குதல்:
மட்கும் கழிவு உரமாக மாற்றப்படும் இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு உரமாக்கப்படுகிறது. உரம் தாவரங்களுக்கு உணவாகிறது. மேலும் இது மண்ணை வளமாக்குகிறது. புதிய பொருள்களைத் தயாரிப்பதற்காக மட்காத கழிவு (மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவு) மறுசுழற்சி தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
4. கழிவுகளை அகற்றுதல்:
இது மறுசுழற்சி செய்ய இயலாத கழிவினை அகற்றும் நிகழ்வாகும். இம்முறையில் கழிவுகள் திறந்த வெளியிலோ, நிலத்தின் அடிப்பகுதியிலோ நிரப்புவதற்காக அனுப்பப்படுகிறது.
செயல்பாடு
கழிவு மேலாண்மையின் படிநிலைகளை வரிசைப்படுத்துக.
(கழிவுகளை அகற்றுதல், கழிவுகளைச் சேகரித்தல் மற்றும் எடுத்துச் செல்லுதல், கழிவுகளைப் பிரித்தல், கழிவு மறுசுழற்சி செய்தல் மற்றும் உரமாக்குதல்)
விடை:
- கழிவுகளைப் பிரித்தல்
- கழிவுகளைச் சேகரித்தல் மற்றும் எடுத்துச் செல்லுதல்
- கழிவு மறுசுழற்சி செய்தல் மற்றும் உரமாக்குதல்
- கழிவுகளை அகற்றுதல்
3R கள்
குறைத்தல் (Reduce):
குறைத்தல் என்பது பொருள்களைக் குறைவாக உருவாக்குவது மற்றும் குறைவாகப் பயன்படுத்துவது எனப் பொருள்படும். அதாவது குறைவான கழிவினை உருவாக்கும் பொருள்களைத் தயாரிப்பது, வாங்குவது மற்றும் பயன்படுத்துவதாகும். இதுவே கழிவுகளைக் குறைப்பதற்கு செய்யப்படும் முதன்மையான செயலாகும். குறைவான கழிவுகளை நாம் எப்படி உருவாக்க முடியும் என்பதற்கான சில எடுத்துக்காட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- நீங்கள் ஒரு மை பேனா வாங்கிப் பயன்படுத்தும்போது, அதில் மை தீர்ந்தால் மீண்டும் நிரப்பி அதே பேனாவைப் பயன்படுத்தலாம்.
- உங்கள் பெற்றோருடன் கடைவீதிக்குச் செல்லும்போது, நீங்கள் ஒரு துணிப் பையை எடுத்துச் செல்வதால் அங்கு நீங்கள் நெகிழிப் பைகளை வாங்குவதைத் தவிர்க்க முடியும்.
- வீட்டிலிருந்து பாத்திரங்களை எடுத்துச் சென்று தின்பண்டங்களை வாங்கலாம்.
- வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் உணவுப்பொருள்களை நாம் மொத்தமாக சந்தைகளில் வாங்குவதால் கழிவுகளைக் குறைக்கலாம்.
செய்து மகிழ்வோம்:
காலியான நீர் குடுவையைப் பயன்படுத்தி பறவை உணவுக்கலன் (Bird Feeder), மலர்க்குவளை (Flower vase), எழுதுபொருள் தாங்கி மற்றும் வீட்டில் தொங்கவிடும் அலங்கார ஜாடி போன்றவற்றை படத்தில் காட்டியுள்ளவாறு தயாரிக்கலாம்.
மறுபயன்பாடு (Reuse):
மறுபயன்பாடு என்பது ஒரு பொருளை மீண்டும் மீண்டும் ஒரே பயன்பாட்டிற்கோ அல்லங வெவ்வேறு பயன்பாடுகளுக்கோ உபயோகப்படுத்துவதாகும். மறுபயன்பாட்டில் குறைந்த கழிவுகளை உருவாக்குவதனால், அவற்றைக் குப்பைகளாகக் குவிப்பதைத் தவிர்க்கலாம். மேலும், மறுபயன்பாட்டினால் செலவு, ஆற்றல் மற்றும் நேரம் சேமிக்கப்படுகிறது. வீட்டில் உள்ள பொருள்களை மறுபயன்பாடு செய்வதற்கான சில எடுத்துக்காட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- வீட்டைச் சுத்தம் செய்ய பழைய துணிகளைப் பயன்படுத்தலாம்.
- ஜாம் மற்றும் ஊறுகாய் ஜாடிகளைப் பொருள்கள் சேமித்து வைக்க பயன்படுத்தலாம்.
- நல்ல நிலையிலுள்ள பழைய ஆடைகளை ஏழைக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
- நீங்கள் பழைய பொருளை மறுபயன்பாடு செய்யலாம் மற்றும் புதிய பொருள் ஒன்றை உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக, நெகிழிக்குடுவையை எழுதுபொருள் தாங்கியாகவோ அல்லது பறவை உணவுக்கலனாகவோ செய்து பயன்படுத்தலாம்.
மறுசுழற்சி (Recycle):
மறுசுழற்சி என்பது பயன்படுத்தியபின் தூக்கி எறியும் பொருள்களிலிருந்து புதிய பொருள்களை உருவாக்குவதாகும். மறுசுழற்சி, ஆற்றலையும் நேரத்தையும் எடுத்துக்கொண்டாலும் புதிய பொருள்களை உருவாக்கத் தேவைப்படும், நீர், தாதுக்கள், மரம் போன்ற வளங்களைச் சேமிக்க உதவுகிறது. சில பொருள்கள் எவ்வாறு மறுசுழற்சி செய்யப்படுகின்றன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
- பழைய செய்தித்தாள்கள், குறிப்பேடுகள் மற்றும் மாத இதழ்கள் புதிய காகிதங்களாக உருவாக்கப்படுகின்றன.
- நெகிழி நீர்க்குடுவைகள் (PET குடுவை), நெகிழி நூல்களாக மறுசுழற்சி செய்யப்பட்டு, பின்னர் விளையாட்டு ஆடைகள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
- பழைய கண்ணாடிக் குடுவைகள் மற்றும் உடைந்த கண்ணாடித் துண்டுகள் உருக்கப்பட்டு, புதிய கண்ணாடிப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.
- உடைந்த உலோகப்பொருள்கள் உருக்கப்பட்டு, புதிய பொம்மைகளாக மாற்றப்படுகின்றன.
நிரப்புவோம்
நீங்கள் வீட்டிலோ அல்லது பள்ளியிலோ குறைக்கக்கூடிய, மறுபயன்பாடு செய்யக்கூடிய மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய நான்கு பொருள்களைப் பட்டியலிடுக.
குறைத்தல்
- நெகிழிப் பைகள்
- ஜெல் பேனா
- நெகிழி தண்ணீர் பாட்டில்கள்
மறுபயன்பாடு
- சணல் பை
- பழைய துணிகள்
- ஜாம் மற்றும் ஊறுகாய் ஜாடிகள்
- மை பேனா
மறுசுழற்சி
- PET குடுவைகள்
- பழைய செய்தி
- பழைய கண்ணாடி குடுவைகள்
- குறிப்பு புத்தகம்
சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்
கழிவுகளைப் பிரித்தல்
வீட்டுக் கழிவுகளை மட்கும் தன்மை கொண்டவை, மறுசுழற்சி செய்யக்கூடியவை மற்றும் மறுசுழற்சி செய்ய இயலாதவை எனப் பிரிக்க வேண்டும். மிஞ்சிய உணவு மற்றும் காய்கறிக்கழிவு போன்ற மட்கும் தன்மை கொண்ட கழிவுகள் உரங்களாக மாற்றப்படுகின்றன. மறுசுழற்சி செய்யக்கூடிய காகிதம், கண்ணாடி மற்றும் அலுமினிய கழிவுகளைக் கொண்டு புதிய பயனுள்ள தயாரிப்புகளை உருவாக்கலாம். மறுசுழற்சி செய்ய இயலாத கழிவுகளைத் தனியாகப் பிரித்த பிறகு அவற்றைத் திறந்த வெளியில் குவிப்பதற்கோ தவிப்பதற்கோ அல்லது நிலப்பகுதியில் நிரப்புவதற்கோ அனுப்பப்படுகின்றன. இதனை முடிந்தவரை குறைக்க வேண்டும்.
செயல்பாடு
கீழே உள்ள படங்களை உற்றுநோக்கி, ஒவ்வொரு கழிவு வகையிலும் உங்கள் வீட்டில் உள்ள மூன்று பொருள்களின் பெயர்களை எழுதுக.
1. மட்கும் தன்மை கொண்ட கழிவுகள் :
விடை: வாழைத்தண்டு, காய்கறிகள், பாக்கு மட்டைத் தட்டு
2. மறுசுழற்சி செய்யர் கூடிய கழிவுகள் :
விடை: காகிதம், அட்டை, நெகிழி, உலோகங்கள், கண்ணாடி
3. மறுசுழற்சி செய்ய இயலாத கழிவுகள் :
விடை: நெகிழி பை, மருத்துவ கழிவு, CFL விளக்கு, பாலிஸ்டர்.
தமிழ்நாட்டில் நெகிழி
ஒரு முறை பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்களைத் தடைசெய்வதில் இந்தியாவில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களின் பட்டியலும், அவற்றால் ஏற்படும் விளைவுகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
விலங்குகள் உணவுப் பொருள்களை உடைய நெகிழிப் பைகளைத் தற்செயலாக சாப்பிடுகின்றன. 50 கிலோவிற்கு மேற்பட்ட நெகிழிப் பொருள்கள், ஒரு பசுவின் வயிற்றில் கண்டறியப்பட்டுள்ளன.
பயன்படுத்தப்பட்ட நெகிழித் தட்டுகள் சுற்றுச்சூழலில் 1000 ஆண்டுகளுக்கும் மேலாக மட்காமல் அப்படியே இருக்கும்.
நெகிழி நீர்ப் பைகள், நிலத்தை குப்பையாக்குவதுடன், மறுசுழற்சி செய்வதற்கும் கடினமானவை.
நாம் பழரசத்தை உறிஞ்சும் நெகிழிக் குழாய்களை மறுசுழற்சி செய்ய இயலாத காரணத்தால், அவை சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன.
சூடான உணவு வகைகள், நெகிழித்தாள்களில் அடைக்கப்படும்போது நெகிழித்தாள்களிலிருந்து இரசாயனங்கள் கசிந்து உணவுடன் கலக்கின்றன.
சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள்
நுண்ணுயிரிகளால் சிதையக்கூடிய பொருள்கள் 'உயிரி சிதைவிற்கு உட்படும் பொருள்கள்' அல்லது 'மட்கும் பொருள்கள்' எனப்படும். மட்கும் இப்பொருள்கள் மீண்டும் தாவரங்களுக்கு உணவாக மாறுகின்றன. இவை போன்ற மட்கும் பொருள்கள், சுற்றுச்சூழல் நட்பு பொருள்கள் அல்லது சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இலைகளை உணவு உண்ணப் பயன்படுத்தப்படுவது தமிழ்நாட்டின் பாரம்பரிய முறையாகும். எ.கா. வாழை இலை. தெர்மோகோல், நெகிழி பூசப்பட்ட காகித தட்டுகள் போன்று இல்லாமல் இந்த இலையானது. உயிரி சிதைவிற்கு முழுமையாக உட்படும். கைப்பைகள், குப்பைக்கூடைகள் மற்றும் பல் துலக்கிகள் போன்ற பல பொருள்களை உருவாக்க மூங்கில் பயன்படுகின்றது.
நாம் செய்ய வேண்டிய சுற்றுச்சூழலுக்கு உகந்த சில செயல்கள்:
- மூன்று Rகளின் படி கழிவுகளைக் கையாளுதல்.
- எப்போதும் கழிவுகளை திறந்த இடங்களில் போடாமல் குப்பைத்தொட்டியில் போடுதல்.
- ஒவ்வொரு தாளின் இருபுறமும் எழுதி காகிதப் பயன்பாட்டைக் குறைத்தல்.
- மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளையும் புட்டிகளையும் பயன்படுத்துதல்.
- கழிவுகளை மட்கும் கழிவுகள், மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகள் மற்றும் மறுசுழற்சி செய்ய இயலாத கழிவுகள் எனப் பிரித்தல்.
- ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப்பொருள்களைத் தவிர்த்தல்.
முயற்சிப்போம்
பள்ளி மாணவர்களை சிறிய குழுக்களாகப் பிரித்து பள்ளி மைதானத்தில் ஊரின் தெருக்களில் காணப்படும் நெகிழிகளைச் சேகரித்து, 3R இன் படி பிரிக்கச் செய்க.
முயற்சிப்போம்
நீங்கள் பயணங்களின்போது பயன்படுத்தியபின் தூக்கி எறிய நினைக்கும் பொருள்களைச் சேமிக்க கையில் ஒரு பையை எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் குப்பைகளைக் கண்டால், அதை எடுத்து ஒரு குப்பைத்தொட்டியில் எறிந்து விடுங்கள். உங்களின் இந்த செயல் மற்றவர்களும் இதைச் செய்ய ஊக்குவிக்கும்.
தேசிய பசுமைப் படை (NGC)
இது இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு தேசிய செயல் திட்டமாகும். இத்திட்டத்தின் குறிக்கோள், “பசுமை எங்கே வளமை அங்கே”.
தேசிய பசுமைப் படை மூலம் பள்ளி மாணவர்கள் காடுகளைப் பாதுகாத்தல் மற்றும் கழிவுகளைக் கையாளுதல் போன்ற செயல்களில் பங்கேற்று, இயற்கை வளங்களைப் பேணிப்பாதுகாப்பதில் ஊக்குவிக்கப்படுகின்றனர்.